திரைப்படம் பார்க்க விடுப்பில் முதல்வர், அமைச்சர்கள்: காவல் மரணம் குறித்து வாய் திறப்பார்களா? கனிமொழி கடும் தாக்கு – dmk mp kanimozhi has condemns incident regarding the custodial death in thoothukudi

தமிழ்நாட்டில் காவல் மரணங்கள் தொடர் கதையாகி வருவது பலரையும் கவலை அடைய செய்துள்ளது. எந்த அரசாக இருந்தாலும் இதுபோன்ற காவல் மரணங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமென பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இதனிடையில் சமீபத்தில் நாகர்கோவிலில் மாற்றுத்திறனாளி இளைஞர் ஒரு சிறையில் மரணமடைந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அந்த காயத்தின் வடு ஆறுவதற்கு முன்பே மீண்டும் ஒரு காவல் மரணம் நடந்துள்ளதாக வெளியாகியுள்ள தகவல்கள் பலரையும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் மூன்றாவது மைல் பகுதியில் உள்ள அரசு மதுபானக் கடையுடன் இணைந்த பாரில் அமுதா நகர் பகுதியை சார்ந்த அருணாச்சலம் என்பவர் பணிபுரிந்து வந்துள்ளார். 26 வயதான இவர் டாஸ்மாக் கடை மூடப்பட்ட பின்னரும் சட்டவிரோதமாக மது விற்பனை செய்ததாக கடந்த 17ஆம் தேதி கைது செய்யப்பட்டுள்ளார். தென்பாகம் காவல்துறையினர் அவரை விசாரணைக்காக அழைத்துச் சென்ற நிலையில், அருணாச்சலம் உடலில் பலத்த காயங்களுடன் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அருணாச்சலம் இன்று காலை உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து உயிரிழந்த அருணாச்சலம் தலை மற்றும் காலில் கடுமையான காயம் இருந்தாக அவருடைய உறவினர்கள் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர். காவலர் தாக்கியதாலே அவர் உயிரிழந்துள்ளதாகவும் புகார்களை அடுக்கியுள்ளனர்.

அதோடு அருணாச்சலம் மரணத்திற்கு உரிய நீதி கிடைக்கும் வரை, உடலை பெற்றுக்கொள்ள மாட்டோம். தொடர்ச்சியாக போராடுவோம் எனவும் அருணாச்சலம் உறவினர் தெரிவித்துள்ளனர். இதனால் இவ்விவகாரம் தூத்துக்குடி பகுதியில் பெரும் பரபரப்பினை கிளப்பியுள்ளது. மேலும், உயிரிழந்த அருணாச்சலத்தின் தாயார் நாலு போலீஸ் அடிச்சுருக்காங்க. நீதி கிடைக்குற வரைக்கும் என் பையன் உடலை வாங்க மாட்டேன் பேட்டி கொடுத்துள்ளார்.

சமீபத்தில் இதே போன்று மாற்றுத்திறனாளி சபரிவர்மன் சிறையில் தாக்கப்பட்ட காரணத்தால் உயிரிழந்தார். இந்த சம்பவம் நடந்து சில தினங்களே கடந்துள்ள நிலையில், தற்போது விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட அருணாச்சலம் உயிரிழந்துள்ள சம்பவம் சர்ச்சைகளை கிளப்பியுள்ளது. இந்நிலையில் இவ்விவகாரம் தொடர்பாக திமுக துணை பொதுச்செயலாளரும், தூத்துக்குடி எம்பியுமான கனிமொழி தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவு ஒன்றினை பகிர்ந்துள்ளார்.

அதில் நாகர்கோவிலை தொடர்ந்து தூத்துக்குடியிலும் காவல்துறையின் சித்திரவதைக்கு உள்ளாகி இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ள செய்தி வேதனை அளிக்கிறது. காவல்துறைக்குப் பொறுப்பு(?) வகிக்கும் முதல்வர் விஜய் உள்ளிட்ட பல அமைச்சர்களும், அதிகாரிகளும் திரைப்படம் பார்ப்பதற்கு விடுப்பில் சென்றுள்ளார்கள். இதனால் இன்றைய நாள் தமிழ்நாட்டில் ‘அரசு’ என்ற ஒன்று உள்ளதா என்பதே சந்தேகம் தான் என கடும் விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.

தொடர்ந்து அவரின் பதிவில், நாளை பணிக்கு திரும்பிய பிறகாவது இந்த காவல் மரணம் தொடர்பாக வாய் திறக்கிறார்களா என்று பார்ப்போம் எனவும் கனிமொழி தெரிவித்துள்ளார். இன்றைய தினம் ஜனநாயகன் படம் வெளியாகியுள்ள நிலையில் தவெக அமைச்சர்கள் FDFS காட்சியை கண்டு களித்து வருகின்றனர். விஜய்யின் கடைசி படம் என்பதால் அவர்கள் தியேட்டரில் கண் கலங்கி அழுது கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் இன்று முதல்வர், அமைச்சர்கள் விடுப்பில் இருப்பதாக கனிமொழி விமர்சித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Source link