பிராகு: பிராகு செஸ் தொடரின் கடைசி சுற்றில் வெற்றி பெற்ற திவ்யா, அரவிந்த் மூன்றாவது இடம் பிடித்தனர்.
செக்குடியரசில், பிராகு செஸ் தொடர் நடந்தது. உலக கோப்பை வென்ற இந்திய வீராங்கனை திவ்யா, சாலஞ்சர் பிரிவில் பங்கேற்றார். நேற்று 9வது, கடைசி சுற்று போட்டிகள் நடந்தன. திவ்யா, செக் குடியரசு வீரர் ஸ்டீபனை எதிர்கொண்டார்.
திவ்யா கருப்பு நிற காய்களுடன் விளையாடினார். 10வது நகர்த்தலில் திவ்யா பின்தங்கினார். 26 வது நகர்த்தலில் ஸ்டீபன் செய்த தவறை பயன்படுத்திய திவ்யா, வெற்றி பெற்றார்.
முடிவில் திவ்யா 5.0 புள்ளியுடன் மூன்றாவது இடம் பிடித்தார். செக் குடியரசின் பைனக் (6.5), ஸ்பெயினின் டேனில் (6.0) முதல் இரு இடம் பெற்றனர்.
அரவிந்த் ஆறுதல்
மாஸ்டர்ஸ் பிரிவில், ‘நடப்பு உலக சாம்பியன்’ இந்தியாவின் குகேஷ், ‘நடப்பு சாம்பியன்’ இந்தியாவின் அரவிந்த் சிதம்பரம் உள்ளிட்ட 10 பேர் பங்கேற்றனர். நேற்று 9வது சுற்று நடந்தன. குகேஷ், ஸ்பெயினின் டேவிட் ஆன்டனை வீழ்த்தினார். இத்தொடரில் இவர் பெற்ற முதல் வெற்றி ஆனது.
மற்றொரு போட்டியில் நடப்பு சாம்பியன் அரவிந்த் சிதம்பரம், செக் குடியரசின் டேவிட் நவராவை வீழ்த்தினார். முடிவில், உஸ்பெகிஸ்தானின் அப்துசட்டோரோவ் (6.0), ஈரானின் பர்ஹாம் (5.0), அரவிந்த் (5.0) ‘டாப்-3’ இடம் பிடித்தனர். இந்தியாவின் குகேஷ் (3.5) 9வது இடம் பெற்றார்.
