விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிறுவனத் தலைவரும், சிதம்பரம் நாடாளுமன்ற மக்களவை உறுப்பினருமான தொல். திருமாவளவன் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேட்டியளித்தார். அப்போது செய்தியாளர் ஒருவர், “மாநில அரசியலுக்கு நீங்கள் வரவேண்டும் என்று போட்டியிட்டு வெற்றி பெற்றால் உதயநிதிக்கு இது போட்டியாக இருக்கும் என ஆதவ் அர்ஜூனா பேசியுள்ளார். மேலும், திமுக அழுத்தம் கொடுத்து உங்களை வாபஸ் பெற வைத்துள்ளனர் எனக் கூயுள்ளார்” எனக் கேட்டனர். அதற்கு திருமாவளவன், “இது அதீதமான கற்பனை. ஆதாரம் இல்லாத கற்பனை. பொருத்தமில்லாத கற்பனை. மொட்டை தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போடுகிற கற்பனை”எனத் தெரிவித்தார்.
மேலும், “அன்புமணி ராமதாஸ் திமுக அழுத்தத்தின் காரணமாக தான் திருமாவளவன் போட்டியில் இருந்து விலகியுள்ளார் எனக் கூறியுள்ளார்” எனத் தெரிவித்தனர். அதற்கு திருமாவளவன் பதிலளித்து பேசுகையில், “அதே நபர்கள் என்ன சொல்கிறார்கள் என்றால் சிட்டிங் சட்டமன்ற உறுப்பினர்களாக உள்ள மூன்று பேரை போட்டியிடுவதற்கு வாய்ப்பளிக்காமல் தவிர்த்து விட்டார் திருமாவளவன் ஏனென்றால் அந்த மூன்று பேரும் திமுகவுக்கு ஆதரவாக பேசியவர்கள். அதனால் திருமாவளவன் நடவடிக்கை எடுத்துவிட்டார் என்று சொல்கிறார்கள். அப்படி பார்க்கும்போது திமுக, திருமாவளவனுக்கு அழுத்தம் கொடுக்க முடியாது. அவர் சுதந்திரமாக செயல்படுகிறார் என்ற பொருளும் துணிக்கிறது. அதனால்தான் திமுகவுக்குச் ஆதரவாக செயல்பட்டவர்கள் அதனால் திருமாவளவன் எடுத்துவிட்டார் அப்படி என்றால் திருமாவளவன் திமுகவுக்கு திமுக அழுத்தத்திற்கு பணிய மாட்டார் என்ற பொருள் இருக்கிறதா?. இல்லையா?
அப்படிப்பட்டவர் அப்புறம் எப்படி வாபஸ் வாங்குறது மட்டும் திமுக அழுத்தத்துக்கு பணிந்து விட்டார் என்று வரும். ரெண்டும் முரண்பாடாக இருக்கிறது அல்லவா?. இது அவர்களுடைய அரசியலுக்காக பேசுகிறார்கள். நான் தோழர்களுக்கு வாய்ப்பளிக்காமல் போனதற்கு காரணம் மற்றவர்களுக்கு, புதியவர்களுக்கு இந்த முறை வாய்ப்பளிக்கலாம் என்கிற ஒரு சமூக நீதி பார்வைதான். கம்யூனிஸ்ட் கட்சிகளில் இரண்டு முறையோ மூன்று முறையோ போட்டியிட்டால் அடுத்த முறை வாய்ப்பு தருவதில்லை என்பதை ஒரு வரையறையாக கொண்டிருக்கிறார்கள். எவ்வளவு சிறந்த பேச்சாற்றல் உள்ளவர்களாக இருந்தாலும் எவ்வளவு சிறந்த அறிவாளிகளாக இருந்தாலும் மூன்று முறைக்கு மேல் வாய்ப்பில்லை என்பது கம்யூனிஸ்ட் கட்சியில் இருக்கிற ஒரு வரையறை. அது சமூக நீதி அணுகு முறை.
நாங்கள் அப்படி ஒரு வரையறையை இன்னும் உருவாக்கவில்லை என்றாலும் கூட மூன்று முறை போட்டியிட்டு ஒருமுறை வெற்றி பெற்ற பாலாஜி, இரண்டு முறை போட்டியிட்டு ஒருமுறை வெற்றி பெற்ற ஷனாவாஸ், ஒரே முறை போட்டியிட்டு அந்த ஒரே முறையிலேயே வெற்றி பெற்ற பாபு இவர்கள் எல்லாம் சட்டமன்றத்திற்கு சென்று ஐந்து ஆண்டுகள் உட்கார்ந்து அங்கே பணியாற்றி அனுபவம் பெற்றவர்கள். ஆகவே அவர்களுக்கு மீண்டும் அளிப்பது நியாயம் என்றாலும் கூட தகுதி என்றாலும் கூட அந்த இடங்களில் மூன்று பேருக்கு புதியவர்களுக்கு வாய்ப்பளிக்கலாம் என்கிற சமூக நீதி அணுகுமுறை அடிப்படையில் தான் இந்த முடிவை நான் மேற்கொண்டேன்.
அதை திமுகவுக்கு ஆதரவாக செயல்பட்டார்கள். அதனால் திருமாவளவன் எடுத்துவிட்டார் என்கிறார்கள். அது உண்மை இல்லை. ஆனால் அப்படி சொல்லுவது உண்மையாக இருந்தால் நான் தி.மு.க. அழுத்தத்திற்கு பணிய மாட்டேன் என்றுதானே பொருள். இப்போது நான் வாபஸ் வாங்கின உடனே திமுக அழுத்தத்திற்கு பணிந்து விட்டேன் என்று சொல்வது எப்படி பொருத்தமாக இருக்க முடியும். இரண்டுமே முரண்பாடானது. எப்போதும் விடுதலை சிறுத்தைகளை குறிவைப்பது இந்த கூட்டணிக்குள் குழப்பத்தை ஏற்படுத்துவது எதிர்கட்சிக்காரர்களுக்கான கடமையாக, பொறுப்பாக இருக்கிறது. நோக்கமாக இருக்கிறது. அது எடுபடாது. திருமாவளவன் அப்படிப்பட்ட வதந்திகளுக்கு ஒருபோதும் இறையாக மாட்டார்”எனத் தெரிவித்தார்.
