தி.மு.க., – அ.தி.மு.க., இடையே கடும் போட்டி இருக்கும்: சிதம்பரம் கணிப்பு

சென்னை: ”தமிழக சட்டசபை தேர்தலில், தி.மு.க., கூட்டணிக்கும், அ.தி.மு.க., கூட்டணிக்கும் இடையே, கடும் போட்டி இருக்கும்,” என, முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

தனியார் ஆங்கில, ‘டிவி’ சேனலுக்கு, அவர் அளித்த பேட்டி: வரும் சட்டசபை தேர்தலில், தமிழகத்திற்கும், டில்லிக்கும் இடையிலான போட்டி என, முதல்வர் ஸ்டாலின் கூறிய கருத்தை வரவேற்கிறேன். அ.தி.மு.க., தேர்தல் களம், தலைமைத்துவம் அனைத்தும், பா.ஜ., விடம் விட்டு கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த தேர்தல் மதசார்பற்ற கூட்டணிக்கும், தே.ஜ., கூட்டணிக்கும் இடையிலான போட்டி. பழனிசாமி டில்லி சென்று, பா.ஜ., தலைமையிடம் தொகுதி பங்கீடு உடன்பாடு செய்திருந்தாலும், பழனிசாமிக்கு தேர்தல் வியூகம் வகுப்பதில் பங்கு இல்லை.

எம்.ஜி.ஆர்., விஜயகாந்த் போல், ரசிகர்களின் ஓட்டுகள் விஜய்க்கு வராது. ஒரு தொகுதியிலும், அவரால் வெற்றி பெற முடியாது. தேர்தலில், 12 சதவீத ஓட்டு மட்டுமே வாங்க முடியும். தமிழக சட்டசபை தேர்தல், ஒரு சார்பாக இருக்காது. கடும் போட்டி இருக்கும். தி.மு.க., தனித்து ஆட்சி அமைக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

Source link