தி.மு.க., ஆட்சியில், சார் – பதிவாளர் அலுவலக எல்லை மறுவரையறை, பணியிட மாற்ற கொள்கை உட்பட, 2021 — 25ம் ஆண்டு வரையிலான காலத்தில், பதிவுத்துறை தொடர்பாக சட்டசபையில் அமைச்சர் மூர்த்தி வெளியிட்ட அறிவிப்புகளில், பல அமலுக்கு வரவில்லை. கடந்த, 2023 – 24 நிதியாண்டில் மானிய கோரிக்கை விவாதத்தில் பேசிய அமைச்சர், ‘அரசு நிதி வழங்காததால் புதிய அறிவிப்புகள் இல்லை’ என்றார்.
பதிவுத்துறையில் அமலுக்கு வராத அறிவிப்புகள் விபரம்:
* வருவாய் கிராமங்களுக்கு உட்பட்ட குக்கிராமங்கள், ஒரே சார் – பதிவாளர் அலுவலக எல்லைக்குள் அமையும் வகையில், எல்லை சீரமைப்பு செய்யப்படும்
* பதிவுத்துறையில் கடந்த காலங்களில், நடந்த முறைகேடுகளை விசாரிக்க, சிறப்பு புலனாய்வுக்குழு அமைக்கப்படும்
* சார் – பதிவாளர் அலுவலகங்கள், அ, ஆ, மற்றும் இ என பிரிக்கப்பட்டு, பணியிட மாற்ற கொள்கை தயாரிக்கப்பட்டு அமல்படுத்தப்படும்
* பதிவுத்துறை டி.ஐ.ஜி., மாவட்டப் பதிவாளர் அலுவலகங்களில், திங்கள்தோறும் குறை தீர்க்கும் முகாம் நடத்தப்படும்
* சார் – பதிவாளர் அலுவலகங்களில், பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள், ரூ. 50 லட்சத்தில் செய்து தரப்படும்
* திருமண சான்றிதழ்களில், திருத்தம் செய்ய இணையவழியில், விண்ணப்பிக்கும் வசதி, ரூ. 6 லட்சத்தில் ஏற்படுத்தப்படும்
* பத்திரப்பதிவு நடைமுறைகள் தொடர்பாக, மாவட்டந்தோறும் பொதுமக்களுக்கு, சிறப்பு விழிப்புணர்வு கருத்தரங்குகள் ரூ. 38 லட்சத்தில் நடத்தப்படும்
* சிறப்பு பொதுத்தேர்வு நடத்தப்பட்டு, 20,000 பேருக்கு புதிதாக, ஆவண எழுத்தர் உரிமம் வழங்கப்படும்
* கட்டட களப்பணி மேற்கொள்ள, பொறியியல் பட்டதாரிகளுக்கு, களப்பணி மேற்பார்வையாளர் உரிமம் வழங்கப்படும்
* சங்கங்களின் ஆண்டறிக்கை தாக்கல், அபராதம் வசூலிப்புக்காக, சமாதான திட்டம் செயல்படுத்தப்படும்
* சிறப்பாக செயல்படும் சார் – பதிவாளர்களை ஊக்குவித்து விருதுகள் வழங்கும் திட்டம், ரூ. 5 லட்சத்தில் செயல்படுத்தப்படும்
