சென்னை: ”தமிழகத்தில் தி.மு.க. ஆட்சி மீண்டும் அமைய வாய்ப்பு உள்ளது,” என, முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் தெரிவித்தது, அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அ.தி.மு.க.,வில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம், மீண்டும் அந்த கட்சியில் இணைய முயற்சித்தார். அதை அக்கட்சி பொதுச்செயலர் பழனிசாமி ஏற்கவில்லை.
பா.ஜ.,வும் அவரை கைவிட்டது. இதனால், அவர் அடுத்து என்ன செய்வது என தெரியாமல் தவித்து வருகிறார். அவருடன் இருந்த முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன், மருது அழகுராஜ் போன்றோர், தி.மு.க.,வில் சேர்ந்து விட்டனர்.
முன்னாள் அமைச்சர் பண்ருட்டி ராமச்சந்திரன், தனிக்கட்சி துவக்கி உள்ளார். இந்நிலையில், பன்னீர்செல்வம் த.வெ.க., அல்லது தி.மு.க., உடன் கூட்டணி அமைப்பார் அல்லது தி.மு.க.,வில் இணைவார் என, தகவல் வெளியானது. இந்த சூழ்நிலையில், நேற்று சட்டசபை வளாகத்தில், முதல்வர் ஸ்டாலினை, பன்னீர் செல்வம் சந்தித்து பேசினார். சந்திப்புக்கு பின், செய்தியாளர்கள் கேள்விக்கு பன்னீர்செல்வம் அளித்த பதில் விபரம்:
முதல்வர் ஸ்டாலினை சந்தித்ததற்கான காரணம் என்ன?
தி.மு.க.,வின் ஐந்தாண்டுகால ஆட்சி, இன்று சிறப்பாக நிறைவு பெற்று உள்ளது. அதன் காரணமாக, முதல்வர் ஸ்டாலினை நேரில் சந்தித்து, வாழ்த்து தெரிவித்தேன்.
‘முதல்வர் ஸ்டாலின், மீண்டும் ஆட்சி அமைக்க வேண்டும்’ என, உங்கள் ஆதரவு எம்.எல்.ஏ., அய்யப்பன் பேசி உள்ளாரே?
தமிழக மக்கள் என்ன நினைத்துக் கொண்டிருக்கின்றனரோ, அதை அவர் கூறியுள்ளார். இன்று இருக்கும் அரசியல் சூழல் மற் றும் கடந்த ஐந்தாண்டுகால ஆட்சி மற்றும் நாட்டுக்கு அவர்கள் செய்த சாதனைகள் எல்லாம், மக்களின் மனதில் ஆழமாக பதிந்துள்ளன. அதனால், மீண்டும் ஆட்சிக்கு வரக் கூடிய வாய்ப்பு, தி.மு.க.,வுக்கு உள்ளது.
தை பிறந்தால் வழி பிறக்கும் என்றீர்களே?
தமிழகத்துக்கே வழி பிறந்துள்ளது.
தி.மு.க.,வில் இணைவீர்களா?
பொறுத்திருங்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
