தி.மு.க., ஆதரவு போலீஸ் அதிகாரிகளை காத்திருப்போர் பட்டியலில் வைக்க முடிவு

சென்னை: தி.மு.க., ஆதரவு போலீஸ் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்ட, கூடுதல் எஸ்.பி.,க்கள், டி.எஸ்.பி.,க்கள் மற்றும் இன்ஸ்பெக்டர்களை காத்திருப்போர் பட்டியலில் வைக்க, புதிய டி.ஜி.பி., சந்தீப்ராய் ரத்தோட் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

கடந்த, 2021ல், தி.மு.க., ஆட்சிக்கு வந்த நாளில் இருந்து, சில போலீஸ் உயர் அதிகாரிகள், அக்கட்சியின் செல்வாக்குடன் கோலோச்சி வருகின்றனர். அவர்கள் தேர்தல் பணிகள் தொடர்பாக, மாநிலம் முழுதும் கூடுதல் எஸ்.பி.,க்கள், டி.எஸ்.பி.,க்கள், இன்ஸ்பெக்டர்களுடன் ஆலோசனை நடத்தி உள்ளனர்.

இவர்கள், தி.மு.க., ஆதரவு உயரதிகாரிகள் பிறப்பித்த ரகசிய உத்தரவுகளை எல்லாம் நடைமுறைப்படுத்தி, வளமான பதவிகளை தக்க வைத்து கொண்டவர்கள் என, கூறப்படுகிறது.

இவர்கள் பற்றி, தற்போது புதிய டி.ஜி.பி.,யாக பொறுப்பேற்றுள்ள சந்தீப்ராய் ரத்தோட்டுக்கு புகார்கள் சென்றுள்ளன. தி.மு.க.,வில் செல்வாக்கு பெற்ற போலீஸ் உயர் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டபோதிலும், தங்களின் அதிகார வரம்பை மீறி, மாவட்ட எஸ்.பி.,க்கள், கூடுதல் எஸ்.பி.,க்கள் உள்ளிட்டோருக்கு உத்தரவுகளை பிறப்பித்து வந்தனர்.

இதற்கு புதிய டி.ஜி.பி., தடை விதித்து உள்ளார். இதுபோன்ற அதிகாரிகள் பிறப்பிக்கும் உத்தரவுகளை பின்பற்ற வேண்டாம் என, மண்டல ஐ.ஜி.,க்கள் உள்ளிட்ட போலீஸ் அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்து உள்ளார்.

தேர்தலை நியாயமாகவும், நேர்மையாகவும் நடத்த, பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வரும் புதிய டி.ஜி.பி., அரசியல் கட்சிகள் சார்பு போலீஸ் அதிகாரிகளை களையெடுக்கவும் முடிவு செய்துள்ளார்.

முதல் கட்டமாக, தி.மு.க., ஆதரவு போலீஸ் உயர் அதிகாரிகளுடன் தொடர்பில் உள்ள கூடுதல் எஸ்.பி.,க்கள், டி.எஸ்.பி.,க்கள் மற்றும் இன்ஸ்பெக்டர்களை, காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்ற முடிவு செய்துள்ளார்.

அதற்கான பட்டியல், இரண்டு நாட்களில் தேர்தல் கமிஷனுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளதாக, காவல் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Source link