தி.மு.க., எம்.எல்.ஏ., மகன் கல்குவாரியில் அழுகிய நிலையில் இளைஞர் உடல்: குவாரியை முற்றுகையிட்ட உறவினர்கள்

நத்தம்: திண்டுக்கல் மாவட்டம் -நத்தம் அருகே சரளைபட்டியில் ஸ்ரீரங்கம் தி.மு.க., எம்.எல்.ஏ., பழனியாண்டி மகன் விஜயபாரதி குத்தகைக்கு எடுத்து நடத்தி வரும் கல்குவாரியில் எம்.சாண்ட் குவியலில் அழுகிய நிலையில் கிடந்த வாலிபரின் உடல் மீட்கப்பட்டது.

இந்நிலையில் குவாரியை முற்றுகையிட்டு வாலிபரின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடு பட்டனர். செந்துறையிலிருந்து பிள்ளையார்நத்தம் செல்லும் ரோட்டில் சரளைப்பட்டியில் சங்கரா ப்ளூ மெட்டல் கல்குவாரி இயங்கி வருகிறது. இதை திருச்சி ஸ்ரீரங்கம் தி.மு.க., எம்.எல்.ஏ., மகன் விஜயபாரதி- குத்தகைக்கு எடுத்து நடத்தி வருகிறார்.

இப்பகுதியில் சரளைப்பட்டியை சேர்ந்த மூக்கன் மகன் கருப்பசாமி 25, மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் சுற்றித் திரிந்துள்ளார்.

இவரை ஒரு வாரத்திற்கு முன் காணாமல் போனதாக கூறி உறவினர்கள் தேடி வந்துள்ளனர். நேற்று முன்தினம் குவாரியில் எம்.சாண்ட் குவித்து வைக்கப்பட்டுள்ள பகுதியில் வடமாநில தொழிலாளர்கள் மணல் அள்ளும் பணியில் ஈடுப்பட்டிருந்தனர். அப்போது அங்கு 10 அடி ஆழத்தில் கருப்பசாமி உடல் அழுகிய நிலையில் கிடந்துள்ளது.

சரளைப்பட்டியை சேர்ந்த கருப்பசாமி உறவினர்கள் குவாரியை முற்றுகையிட்டனர். டி.எஸ்.பி., சங்கர், இன்ஸ்பெக்டர் தமிழ்செல்வன் மற்றும் போலீசார் உடலை கைப்பற்றினர். தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினகரன் கண்டனம்

அ.ம.மு.க., பொதுச் செயலர் தினகரன் அறிக்கை: திண்டுக்கல் மாவட்டம், சரளைப்பட்டியில் இயங்கி வரும், ஸ்ரீரங்கம் தொகுதி, தி.மு.க., – எம்.எல்.ஏ., பழனியாண்டியின் மகனுக்குச் சொந்தமான குவாரியில், இளைஞர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட செய்தி அதிர்ச்சி ஏற்படுத்துகிறது. ஏற்கனவே, இதே பழனியாண்டிக்கு சொந்தமான குவாரியில், சட்டவிரோதச் செயல்கள் நடப்பதாகக் கூறி, செய்தி சேகரிக்க சென்ற பத்திரிகையாளர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.

தற்போது, இளைஞர் ஒருவர், சடலமாக மீட்கப்பட்டிருக்கும் சம்பவம், பொது மக்கள் மத்தியில் பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே இந்த மரணம் குறித்து, முழுமையான விசாரணை நடத்த வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளளது.

Source link