தி.மு.க., – காங்கிரஸ் இடையே இழுபறியில் இருந்த தொகுதி பங்கீடு பேரம் நேற்று முடிவுக்கு வந்தது. 28 சட்டசபை தொகுதிகள்,

தி.மு.க., – காங்கிரஸ் இடையே இழுபறியில் இருந்த தொகுதி பங்கீடு பேரம் நேற்று முடிவுக்கு வந்தது. 28 சட்டசபை தொகுதிகள், ஒரு ராஜ்யசபா ‘சீட்’ கொடுக்க தி.மு.க., முன்வந்துள்ளது. அதற்கு டில்லி மேலிடம் சம்மதம் தெரிவித்ததை தொடர்ந்து, இறுதி ஒப்பந்தத்தில் காங்கிரஸ் கையெழுத்திட்டது. தமிழக சட்டசபை தேர்தல் அடுத்த மாதம் நடைபெற உள்ள நிலையில், தி.மு.க., தன் கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு பேச்சில் ஈடுபட்டுள்ளது.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சிக்கு தலா இரண்டு தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. முஸ்லிம் லீக், அக்கட்சியின் ‘ஏணி’ சின்னத்திலும், மனிதநேய மக்கள் கட்சி, ‘உதயசூரியன்’ சின்னத்திலும் போட்டியிட உள்ளன.

காய் நகர்த்தல் இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, முக்குலத்தோர் புலிப்படை, சமத்துவ மக்கள் கழகம் உள்ளிட்ட கட்சிகளுடன், தி.மு.க., தொகுதி பங்கீடு குழுவினர் முதற்கட்ட பேச்சை முடித்துள்ளனர்.

தி.மு.க., கூட்டணியில் புதிதாக தே.மு.தி.க., இணைந்துள்ளது; அக்கட்சி யிடம் தொகுதி பங்கீடு பேச்சு இன்னும் துவக்கப்படவில்லை. அக்கட்சிக்கு ஒரு ராஜ்யசபா சீட் வழங்கப்பட்டு, கூட்டணி உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், கூட்டணியில் இரண்டாவது பெரிய கட்சியான காங்கிரஸ், ஆட்சியில் பங்கு, 41 தொகுதிகள், இரண்டு ராஜ்யசபா சீட், உள்ளாட்சியில் பங்கீடு என்ற நிபந்தனை களுடன் பேச்சை துவக்கியது.

தி.மு.க., தரப்பில், ஆட்சியில் பங்கு இல்லை என உறுதியாக சொல்லப்பட்டு விட்டது. அத்துடன், 25 தொகுதிகள், ஒரு ராஜ்யசபா சீட் மட்டும் வழங்க முன்வந்தது. இரு கட்சிகளும், தங்கள் நிபந்தனையில் உறுதியாக இருக்க, கூட்டணியில் விரிசல் ஏற்படும் நிலை உருவானது.

இதை தொடர்ந்து, த.வெ.க.,வுடன் கூட்டணி அமைக்க, காங்கிரஸ் காய் நகர்த்தியது. இந்நிலையில், நேற்று முன்தினம் முன்னாள் மத்திய நிதி அமைச்சர் சிதம்பரம், சென்னையில் முதல்வர் ஸ்டாலினை அவரது வீட்டில் சந்தித்து பேசினார்.

சம்மதம் தெரிவிப்பு

அன்றைய தினம் இரவு, மாமல்லபுரத்தில் நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் நடந்த, தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை மகள் நிச்சயதார்த்த விழாவில், முதல்வர் ஸ்டாலின் பங்கேற்றார். அவருடன் மீண்டும் சிதம்பரம் பேசினார்.

அப்போது, காங்கி ரசுக்கு 28 தொகுதிகள் தர, முதல்வர் முன்வந்தார். இந்த விபரத்தை, காங்., தேசிய தலைவர் கார்கேவிடம், சிதம்பரம் தெரிவித்தார்.

அவர், முன்னாள் தலைவர்கள் சோனியா, ராகுல் ஆகியோரிடம் தெரிவித்து, இறுதி முடிவெடுக்க வலியுறுத்தினார். தி.மு.க., 25லிருந்து, 28 தொகுதிகளுக்கு ஏறி வந்த நிலையில், காங்கிரஸ் அதற்கு சம்மதம் தெரிவித்தது.

ஒரு ராஜ்யசபா சீட்டுடன், நேற்று அதிகாலை 1:30 மணிக்கு தொகுதி பங்கீடு உறுதியானதும்,

விருதுநகர் காங்கிரஸ் எம்.பி., மாணிக்கம் தாகூர், ‘தனி நபர்களிடையே வேறுபாடுகள் இருக்கலாம். ஆனால், கட்சி என்பது நம்மில் எவரையும் விட பெரியது. தலைமை முடிவு செய்யும் போது, அதை ஒழுக்கத்துடன் ஏற்றுக் கொள்கிறோம். ஏனென்றால், ஒற்றுமை நம் மிகப்பெரிய பலம்’ என, அறிக்கை வெளியிட்டார்.

இதையடுத்து, தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர்கள் கிரீஷ் ஷோடங்கர், நிவேதித் ஆல்வா, தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, சட்டசபை காங்கிரஸ் தலைவர் ராஜேஷ்குமார் ஆகியோர், நேற்று மாலை சென்னை விமான நிலைய விருந்தினர் அறையில் ஆலோசனை நடத்தினர்.

அப்போது, அவர்களுக்குள் தொகுதி எண்ணிக்கை தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ‘டில்லி மேலிடம் சம்மதம் தந்த பின் கையெழுத்திடுவேன்’ என, ஒற்றைக் காலில் கிரீஷ் பிடிவாதம் பிடித்தார்.

அங்கிருந்து புறப்பட்டு, சென்னை தி.நகர் ஹோட்டலில் மீண்டும் அவர்கள் ஆலோசனை நடத்தி விட்டு, சென்னை அறிவாலயத்திற்கு சென்றனர். அங்கு, முதல்வர் ஸ்டாலினை, காங்கிரஸ் குழுவினர் சந்தித்து பேசியதும், தொகுதி பேரம் முடிவுக்கு வந்தது.

காங்கிரஸ் மேலிட சம்மதத்துடன் தொகுதி பங்கீடு ஒப்பந்தத்தில் செல்வப்பெருந்தகை கையெழுத்திட்டார். காங்கிரசுக்கு 28 தொகுதிகள், ஒரு ராஜ்யசபா சீட் ஒதுக்கப்பட்டுள்ளது.

அந்த ராஜ்யசபா ‘சீட், தமிழகத்தை பூர்வீகமாகக் கொண்ட, மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த, முன்னாள் எம்.பி., மீனாட்சி நடராஜன், டாக்டர் செல்லக்குமார் ஆகியோரில் ஒருவருக்கு வழங்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

கடும் பேரத்திற்கு பின், கடந்த சட்டசபை தேர்தலை விட, கூடுதலாக மூன்று தொகுதிகளை காங்கிரஸ் பெற்றுள்ளது. இரு கட்சியினருக்கும் இடையே வார்த்தை போர் நடந்து வந்த நிலையில், ‘மறப்போம் மன்னிப்போம்’ என கூறி, தி.மு.க., – காங்., கட்சிகள் கூட்டணியை தொடர்ந்துள்ளன.

கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தான பின், தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை அளித்த பேட்டியின் போது, ”சரியான நேரத்தில், சரியான முடிவை தி.மு.க., – காங்கிரஸ் எடுத்துள்ளது; மன நிறைவோடும், மகிழ்ச்சியோடும் இருக்கிறோம். ராஜ்யசபா எம்.பி., வேட்பாளரை, டில்லி மேலிடம் அறிவிக்கும். புதுச்சேரி மாநில கூட்டணி குறித்து, அம்மாநில காங்கிரஸ் முடிவெடுக்கும்,” என்றார்.

@Image@

 தி.மு.க., கூட்டணியில் 22 கட்சிகள்

சட்டசபை தேர்தலுக்காக, இதுவரை இல்லாத அளவுக்கு, 22 கட்சிகளுடன் மெகா கூட்டணியை தி.மு.க., அமைத்து உள்ளது. தி.மு.க., கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகள் விபரம்:

தி.மு.க., – காங்கிரஸ் – தே.மு.தி.க., – வி.சி., – ம.தி.மு.க., – மார்க்சிஸ்ட் – இந்திய கம்யூனிஸ்ட் – மக்கள் நீதி மய்யம் – இந்திய யூனியன் முஸ்லிம் லீக் – தமிழக வாழ்வுரிமை கட்சி – மனிதநேய மக்கள் கட்சி – ஆம் ஆத்மி கட்சி – கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி – முக்குலத்தோர் புலிப்படை – மனிதநேய மக்கள் ஜனநாயக கட்சி – கொங்கு இளைஞர் பேரவை – ஆதி தமிழர் பேரவை – தமிழ் புலிகள் கட்சி – ஆதி தமிழர் கட்சி – எஸ். டி.பி.ஐ., – சமத்து வ மக்கள் கழகம் – மக்கள் விடுதலை கழகம்.

@Image@
இறுதி கட்ட பேச்சு தாமதமானது ஏன்?

நேற்று மாலை, 5:00 மணிக்கு இறுதிகட்ட பேச்சுக்கு வருவதாக, காங்கிரஸ் தரப்பில் தி.மு.க.,விடம் தெரிவிக்கப்பட்டது. ஆனால், தமிழக காங்., மேலிட பொறுப்பாளர் கோவாவில் இருந்து மதியமே சென்னை வந்த பின்பும், இரு தரப்புக்குமான பேச்சு தொடங்குவது தாமதமானது.

மாலை, 3:00 மணிக்கு, தமிழக காங்., தலைவர் செல்வப்பெருந்தகையை தொடர்பு கொண்ட தி.மு.க., தொகுதி பங்கீட்டு குழுவினர், ‘தி.மு.க., ஒதுக்க உள்ள ராஜ்யசபா சீட்டில் காங்., தரப்பில் யாரை நிறுத்தப் போகிறீர்கள்; தி.மு.க.,வை மிகக் கடுமையாக விமர்சித்த பிரவீன் சக்கரவர்த்தி என்றால் ஏற்க முடியாது. அதனால், எம்.பி., வேட்பாளர் யார் என்பதை முதல்வர் ஸ்டாலின் அறிய விரும்புகிறார்’ என்று தெரிவித்துள்ளனர்.

‘கட்சி மேலிடத்தில் கேட்டுச் சொல்கிறேன்’ என்று செல்வப்பெருந்தகை பதில் கூறியிருக்கிறார்.

பின், இந்தத் தகவலை, காங்., தலைவர் கார்கே, காங்., பொதுச்செயலர் வேணுகோபால், மேலிட பொறுப்பாளர் கிரீஷ் ஷோடங்கர் உள்ளிட்டோரிடம் கூறியிருக்கிறார். காங்., வேட்பாளர் யார் என்பதை, தங்களிடம் சொன்ன பிறகு தான், உடன்பாட்டில் கையெழுத்திட முடியும் என்பதில், தி.மு.க., உறுதியாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து, சோனியா, ராகுல் உள்ளிட்டோரிடம் கார்கே பேசியுள்ளார். இறுதியில், ‘பிரவீன் சக்கரவத்தியை தமிழகத்தில் இருந்து ராஜ்யசபா எம்.பி.,யாக்க மாட்டோம்’ என, கார்கே தெரிவித்த தகவலையடுத்து, கிரீஷ் ஷோடங்கரும், செல்வப்பெருந்தகையும் இரவு 7:00 மணிக்கு மேல், தி.மு.க., தலைமை அலுவலகமான அறிவாலயத்துக்கு சென்றனர்.

அங்கு முன்கூட்டியே வந்த முதல்வர் ஸ்டாலின் மற்றும் தி.மு.க., பேச்சு குழுவினர், காங்., குழுவினருடன் பேசி, தொகுதி பங்கீட்டை முடித்துள்ளனர்.

– நமது நிருபர் –

Source link