தொகுதி பங்கீடு குறித்து தி.மு.க.,வுடன் காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரீஷ் ஷோடங்கர், சென்னையில் இன்று மீண்டும் பேச்சு நடத்துகிறார். தி.மு.க., சொல்லும் எண்ணிக்கையை ஏற்று, உடன்பாட்டுக்கு காங்கிரஸ் வர மறுத்தால், ‘வெளியேறுவது உங்கள் விருப்பம்’ என சொல்ல முதல்வர் ஸ்டாலின் தயாராக இருப்பதாக அறிவாலய வட்டாரத்தில் கூறப்படுகிறது
தி.மு.க., கூட்டணியில் ஏற்கனவே உள்ள 12 கட்சிகளுடன் கூடுதலாக கமலின் மக்கள் நீதி மய்யமும், தே.மு.தி.க.,வும் இணைந்துள்ளன. இக்கட்சிகளுடன் தொகுதி பங்கீடு குறித்து பேசுவதற்காக, தி.மு.க., பொருளாளர் டி.ஆர்.பாலு தலைமையில், ஏழு பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு உள்ளது.
உடன்பாடு இல்லை
சென்னை அறிவாலயத்தில் கடந்த 22ல், முதல் கட்சியாக இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கை அழைத்து, தி.மு.க., குழுவினர் பேச்சு நடத்தினர். அதை தொடர்ந்து, மனிதநேய மக்கள் கட்சி மற்றும் ம.தி.மு.க., ஆகிய கட்சிகளுடன் பேச்சு நடத்தப்பட்டது.
இந்நிலையில், கூட்டணியில் இரண்டாவது பெரிய கட்சியாக உள்ள காங்கிரசுடன், கடந்த 22ம் தேதி முதல்கட்ட பேச்சு நடத்தப்பட்டது. சென்னையில் முதல்வர் ஸ்டாலினை அவரது ஆழ்வார்பேட்டை வீட்டில் சந்தித்து, தமிழக காங்., மேலிட பொறுப்பாளர் கிரீஷ் ஷோடங்கர், தொகுதி பங்கீடு குறித்து பேசினார்.
அப்போது, ஆட்சியில் பங்கும், காங்கிரசுக்கு 41 தொகுதிகளும், ஒரு ராஜ்யசபா எம்.பி., பதவியும் கேட்கப்பட்டது. அதில் உடன்பாடு ஏற்படாததால், அடுத்த நாள் தி.மு.க., துணை பொதுச்செயலர் கனிமொழியை சந்தித்து கிரீஷ் ஷோடங்கர் பேசினார்.
அதன் பின்னர், இரு தரப்பிலும் பலகட்ட பேச்சுகள் திரைமறைவில் நடந்து வந்த நிலையில், தற்போது தி.மு.க., குழுவிடம் இருந்து, காங்கிரஸ் குழுவுக்கு பேச்சு நடத்த வருமாறு அழைப்பு விடப்பட்டு உள்ளது.
அதன்படி, முதல் முறையாக இன்று, இரு கட்சிகளைச் சேர்ந்த தொகுதி பங்கீட்டு குழுவினர் சந்தித்து பேச உள்ளனர். கிரீஷ் தலைமையிலான காங்கிரஸ் குழுவினருடன் அறிவாலயத்தில் நடக்கும் இன்றைய பேச்சில், தொகுதி பங்கீடு குறித்து உடன்பாடு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஒருவேளை, ஆட்சியில் பங்கு, அதிக தொகுதிகள் என்பதில் காங்கிரஸ் பிடிவாதத்தை தொடர்ந்தால், ‘கூட்டணியில் இருந்து வெளியேறுவது உங்கள் விருப்பம்’ என சொல்ல தி.மு.க., குழு தயாராக இருப்பதாக கூறப்படுகிறது.
ஆலோசனை
மேலும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, ம.நீ.ம., தமிழக வாழ்வுரிமை கட்சி, கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி ஆகியவற்றுடன் தி.மு.க., குழுவினர் அடுத்தடுத்து பேச்சு நடத்த உள்ளனர். அதை தொடர்ந்து, நாளை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியுடனும், மார்ச் 2ம் தேதி வி.சி.க.,வுடனும் தொகுதி பங்கீடு பேச்சு நடத்தப்பட உள்ளது.
இதற்கிடையில், காங்கிரஸ் தொகுதி பங்கீடு பேச்சு குழுவில் இடம்பெற்றுள்ள கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த சூரஜ் ஹெக்டே, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். எனவே, அவர் இன்றைய பேச்சில் பங்கேற்க வாய்ப்பு இல்லை.
கிரீஷ் நேற்று கோவாவில் இருந்தார்; இன்று அவர் சென்னை வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது. கேரள மாநிலம் வயநாட்டில் இருந்து, லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுலும், பொதுச்செயலர் வேணுகோபாலும் நேற்று இரவு டில்லி திரும்பினர்.
அவர்கள் இருவருடனும், காங்கிரஸ் தலைவர் கார்கேவுடனும் இன்று காலை 11:00 மணிக்கு, கிரீஷ் ஆலோசனை நடத்த உள்ளார்; அதன் பின்னர், தி.மு.க.,வுடன் பேச சென்னை வருகிறார்.
– நமது நிருபர் –
