தி.மு.க., கூட்டணியில் தே.மு.தி.க., இணைந்தது லாபமா – நஷ்டமா?

தி.மு.க., கூட்டணியில், தே.மு.தி.க., இணைந்தது, கூட்டணிக்கு வலு சேர்க்கும் என, தலைவர்கள் கூறி வரும் நிலையில், அக்கட்சி வருகையால், லாபமா, நஷ்டமா என, தி.மு.க.,வினர் இடையே, விவாதம் நடந்து வருகிறது.

கடந்த 2005ல், தி.மு.க., – அ.தி.மு.க., ஆகிய கட்சிகளுக்கு மாற்றாக, தே.மு.தி.க.,வை மறைந்த நடிகர் விஜயகாந்த் துவக்கினார். அதன் பின், தொடர்ச்சியாக சட்டசபை மற்றும் லோக்சபா தேர்தல்களில் அக்கட்சி போட்டியிட்டு வருகிறது. துவக்கத்தில் 10 சதவீத ஓட்டுக்களை பெற்று, தமிழக அரசியலில் அசைக்க முடியாத சக்தியாக உருவான தே.மு.தி.க., கூட்டணி விஷயங்களில் எடுத்த தவறான முடிவுகளால், கடந்த 2024ல் நடந்த லோக்சபா தேர்தலில் 2.6 சதவீத ஓட்டுக்களை மட்டுமே பெறும் அளவுக்கு சுருங்கியது.

அதன் பின், கட்சிக்கு தூணாக இருந்து செயல்பட்ட விஜயகாந்தும் மறைந்துவிட, கட்சிக்கான மக்கள் செல்வாக்கு இன்னும் குறைந்தது. இருந்தாலும், அக்கட்சியை தங்கள் கூட்டணிக்கு கொண்டு செல்ல தி.மு.க., மற்றும் அ.தி.மு.க., கட்சிகள் தொடர்ந்து காய் நகர்த்தின.

இந்நிலையில், தி.மு.க., கூட்டணியில் அக்கட்சி இணைந்துள்ளது. இது கூட்டணிக்கு வலு சேர்க்கும் என, தி.மு.க., மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் கூறினாலும், அதை தி.மு.க.,வினர் ரசிக்கவில்லை.

இது குறித்து, தி.மு.க., நிர்வாகிகள் சிலர் கூறியதாவது: தி.மு.க.,விடம் 20 தொகுதிகளின் பட்டியலை வழங்கி, அதில், 10 முதல் 12 தொகுதிகளில் போட்டியிட ஏதுவாக சீட்களை ஒதுக்க தே.மு.தி.க., கேட்டுள்ளது. குறிப்பாக, கும்மிடிப்பூண்டி, விருகம்பாக்கம், பல்லாவரம், விழுப்புரம், விக்கிரவாண்டி, ரிஷிவந்தியம், உளுந்துார்பேட்டை, நெய்வேலி, கடலுார், மதுரை தெற்கு போன்ற தொகுதிகளை கேட்கப்பட்டுள்ளன. இவை தி.மு.க., வெற்றி பெற்ற தொகுதிகள் என்பதால், ‘சிட்டிங்’ எம்.எல்.ஏ.,க்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

தேர்தலில் தே.மு.தி.க., வேட்பாளர்களுக்கு ஆதரவாக வேலை செய்யாமல், உள்குத்து வேலைகளில் தி.மு.க.,வினர் இறங்கினால், அது கூட்டணிக்கு பின்னடைவை ஏற்படுத்தும் வாய்ப்பு உள்ளது. வட மாவட்டங்களில், தே.மு.தி.க.,வினரும், தி.மு.க.,வினரும், எதிரும் புதிருமாக அரசியல் செய்தவர்கள். அவர்கள் ஒன்றாக இணைந்து தேர்தல் பணியாற்றுவதில் சிக்கல் உள்ளது. அக்கட்சிக்கு பெரிய அளவில் ஓட்டு வங்கி இல்லை. இதனால், அக்கட்சியால் கூட்டணிக்கு பெரிய லாபம் இல்லை.

ஆனால், அதற்கு நேர் எதிராக கருத்துச் சொல்லி, தென் மாவட்டங்களிலும், மத்திய மாவட்டங்களிலும் தே.மு.தி.க.,வுக்கு இருக்கும் செல்வாக்கு தி.மு.க. கூட்டணிக்கே பெரிய அளவில் கைகொடுக்கும் என சொல்வோரும் உள்ளனர். இவ்வாறு, அவர்கள் கூறினர்.

– நமது நிருபர் –

Source link