தி.மு.க.,கூட்டணியில் மார்க்.,கம்யூ., முரண்டு! ; கேட்கும் தொகுதிகள் வேண்டும் என அடம்

தி.மு.க., கூட்டணியில் இடம்பெற்றுள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, கடந்த முறையை விட கூடுதல் தொகுதிகள் வேண்டும் என முரண்டு பிடிப்பதுடன், அவை தாங்கள் விரும்பும் இடங்களாகவும் இருக்க வேண்டும் என அடம் பிடிப்பதால், கூட்டணியை இறுதி செய்வதில் இழுபறி நீடிக்கிறது. தி.மு.க., கூட்டணியில் இடம் பெற்றுள்ள மார்க்சிஸ்ட் கம்யூ., வரும் சட்டசபை தேர்தலில், இரட்டை இலக்க தொகுதிகளை கேட்கிறது. ஆனால், தி.மு.க., தரப்பில் ஐந்து தொகுதிகள் மட்டுமே தருவதாக கூறிவிட்டனர்.

எனவே, கடந்த 2021 சட்டசபை தேர்தலில் வழங்கிய ஆறு தொகுதிகளை விட, கூடுதல் தொகுதிகள் கண்டிப்பாக வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூ., வலியுறுத்தி வருகிறது.

பதில் இல்லை

‘கடந்த சட்டசபை தேர்தலில், இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கும் தலா ஆறு தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. இம்முறை இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஐந்து தொகுதிகள் வழங்கப்பட்டுள்ளன. அதேபோல் ஐந்து தொகுதிகளை பெற்றுக் கொள்ளுங்கள்’ என, தி.மு.க., தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கு மார்க்சிஸ்ட் கம்யூ., தலைவர்கள், ‘கடந்த தேர்தலுக்கு முன்பு வரை, இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளை விட கூடுதல் தொகுதிகளை, கூட்டணி கட்சி தலைமையிடம் பெற்று வந்தோம்.

‘கடந்த முறை அதே தொகுதிகளை பெற்று தவறு செய்து விட்டோம். இம்முறை அதே தவறு நடக்கக்கூடாது. எனவே, கடந்த தேர்தலை விட கூடுதல் தொகுதிகள் கண்டிப்பாக வேண்டும்’ என தெரிவித்துள்ளனர்.

இதற்கு, தி.மு.க., தரப்பில் பதில் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. இந்நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூ., மாநில செயற் குழு கூட்டம், சென்னை தி.நகரில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் நேற்று காலை நடந்தது.

அதில் பங்கேற்ற கட்சியின் தேசிய பொதுச் செயலர் பேபி, மாநில நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.


சமரச பேச்சு

அப்போது கூட்டத்தில் பேசிய நிர்வாகிகள் அனைவரும், கடந்த முறையை விட கூடுதல் தொகுதிகள் பெற வேண்டும் என தெரிவித்து உள்ளனர்.

இத்தகவல், ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோவுக்கு தெரியவந்ததும், அவர், பேபியை சந்திக்க மார்க்சிஸ்ட் அலுவலகத்திற்கு சென்று சமரச பேச்சு நடத்தினார்; அது தோல்வியில் முடிந்தது.

‘ஆறு தொகுதிகளுக்கு மேல் தருகிறோம் என தி.மு.க., அழைப்பு விடுத்தால் தான், அறிவாலயத்திற்கு சென்று ஒப்பந்தத்தில் கையெழுத்து போடுவோம்’ என, மாநிலச் செயலர் சண்முகம் கூறிவிட்டார்.

மாநில செயற்குழுக் கூட்டம் முடிந்து, மாலையில்மாநிலக்குழு கூட்டம் நடந்தது; இரவிலும் அதில் விவாதம் தொடர்ந்தது.

மார்க்சிஸ்ட் தலைவர்களை சந்தித்த பின், வைகோ அளித்த பேட்டி:

பேபி, என் நீண்ட கால நண்பர். ராஜ்யசபாவில் சக எம்.பி.,யாக மட்டுமல்ல, என் மீது எல்லையற்ற அன்பும் மரியாதையும் வைத்திருப்பவர். பார்லிமென்டில் இரு சபைகளிலும் நான் பேசிய பேச்சுகளை தொகுத்து எழுதிய புத்தகத்திற்கு அணிந்துரை பெற, கேரள முதல்வர் பினராயி விஜயனை சந்தித்து பேசினேன்.

அதற்காக, திருவனந்தபுரம் சென்ற என்னை, விமான நிலையத்திற்கு வந்து பேபி வரவேற்றார். அந்த அடிப்படையில், அவரை மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினேன். அவரிடம் என்ன பேசினேன் என்பதை வெளியே சொல்ல மாட்டேன். தொகுதி பங்கீடு பற்றி எதுவும் நான் பேசவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

4 ‘சீட்’டுக்கு 20 பேர் போட்டி கடந்த தேர்தலில், ம.தி.மு.க., சார்பில் வெற்றி பெற்ற ரகுமான், சதன் திருமலைக்குமார், சின்னப்பா, பூமிநாதன் ஆகிய நால்வரும், மீண்டும் போட்டியிட விரும்புகின்றனர். நால்வரின் தொகுதிகளை மீண்டும் தர தி.மு.க., தயாராக உள்ளது. இந்த தேர்தலில், ம.தி.மு.க.,வுக்கு வழங்கிய நான்கு தொகுதிகளில், மூன்றில் உதய சூரியன் சின்னத்திலும், ஒன்றில் தனிச் சின்னத்திலும் போட்டியிட ஒப்பந்தமாகி உள்ளது. ம.தி.மு.க., முதன்மை செயலர் துரையின் ஆதரவாளர்களான கட்சியின் துணை பொதுச்செயலர் ரொக்கையா, மணப்பாறை தொகுதியையும், தென் சென்னை மாவட்டச் செயலர் கழகக்குமார், வேளச்சேரி அல்லது சோழிங்கநல்லுார் தொகுதியையும் கேட்டுள்ளனர். இருவருமே, தாராளமாக தேர்தல் நிதி வழங்கவும் தயாராக உள்ளனர். இவர்கள் தவிர, ஆடிட்டர் அர்ஜுன்ராஜ், பொருளாளர் செந்திலதிபன், துணைப் பொதுச்செயலர்கள் ராஜேந்திரன், ஆடுதுறை முருகன் உட்பட 20 பேர், ‘சீட்’ எதிர்பார்க்கின்றனர். தி.மு.க., வெறும் நான்கு தொகுதிகளை வழங்கியுள்ள நிலையில், எப்படி சமாளிப்பது என தெரியாமல், வைகோ குழப்பத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.

– நமது நிருபர் –

Source link