தி.மு.க., கொடுத்த 2 தொகுதிகளும் வேண்டாம்: கமல் முடிவால் 'அதிர்ச்சியில்' தமிழகம்!

சென்னை: சட்டசபை தேர்தலில் இரண்டு தொகுதிகள் ஒதுக்க, தி.மு.க., முன் வந்த நிலையில், அந்த தொகுதிகள் வேண்டாம் என, மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல் அறிவித்தது, தமிழகத்தை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

மக்கள் நீதி மய்யம் கட்சியை துவக்கிய, நடிகர் கமல், 2019 லோக்சபா தேர்தல் மற்றும் 2021 சட்டசபை தேர்தலை சந்தித்தார். ஆனால், வெற்றி கிட்டவில்லை. கடந்த 2024 லோக்சபா தேர்தலில், தி.மு.க., கூட்டணிக்கு ஆதரவு அளித்தார். அதற்கு பரிசாக ராஜ்யசபா எம்.பி., பதவியை பெற்றார். வரும் தேர்தலில், தி.மு.க., கூட்டணியில் எட்டு தொகுதிகளைக் கேட்டார்.

போட்டியில்லை

தி.மு.க., இரண்டு தொகுதிகளை அளிக்க முன் வந்தது. அதிலும் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடும்படி அழுத்தம் கொடுத்தது. ஆனால், ‘டார்ச் லைட்’ சின்னத்தில் போட்டியிடுவதில், கமல் கட்சி உறுதியாக இருந்தது.

நேற்று மாலை முதல்வரை சந்திக்க, கமல் அறிவாலயம் வந்தார். அதே நேரம் அவர் வெளியிட்ட அறிக்கை வெளியானது.

அதில், ‘இக்கட்டான அரசியல் சூழலில், நமக்கு தருவதாக சொல்லியிருக்கும் தொகுதிகள் எண்ணிக்கையும், உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்ற பரிந்துரையும், மக்கள் நீதி மய்யம் உறுப்பினர்களுக்கும், எனக்கும் ஏற்புடையதாக இல்லை. டார்ச் லைட் சின்னம் என்பது எங்களின் அடையாளம்.

‘தொண்டர்களின் உணர்வுகளை என்னால் புறக்கணிக்க முடியாது. எனவே, இந்த சட்டசபை தேர்தலில், ம.நீ.ம., நேரடியாக போட்டியிடவில்லை. தி.மு.க., கூட்டணிக்கு நிபந்தனையின்றி ஆதரிப்பது என்ற முடிவை, திறந்த மனதுடன் அறிவிக்கிறேன்’ என, தெரிவித்திருந்தார். இது அவரது கட்சியினரிடம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

முதல்வரை சந்தித்த பின், கமல் அளித்த பேட்டி: நாட்டுக்கான போராட்டத்தில், தமிழகம் முன்னணியில் நிற்கிறது. அதற்கு உறுதுணையாக நிற்க வேண்டியது என் கடமை. எனக்கு அரசியல், தொழில் அல்ல; கடமை. அப்படித்தான் எல்லோரும் இருக்க வேண்டும்.

எந்த தலைவர் இப்படி செய்திருப்பார் என, நான் சவால் விடமாட்டேன். நான் நம்புவது சுயநலமற்ற அரசியல். அதே பயணத்தில் நடக்கிறேன். இந்த ஆட்சி தொடர வேண்டும் என்பதற்குதான், இந்த முடிவை எடுத்துள்ளேன்.

அழுத்தமான ஆதரவு

என்னுடன் தொண்டர்கள், இன்னும் இருக்கின்றனர். அவர்களுக்கு நன்றி சொல்ல வேண்டிய அவசியம் இருந்தாலும், நன்றி சொன்னால், அவர்கள் அன்னியப்பட்டுவிடுவர். வெற்றி பெற்றிருந்தால், அனைவருக்கும் நன்றி சொல்லியிருப்பேன்.

முதல்வர் ஸ்டாலினை சந்திக்கும்போது, மீண்டும் ஆட்சி கட்டிலில் பார்க்கிறேன் என, வாழ்த்து சொல்லவில்லை. எங்களின் எதிர்பார்ப்பை நடத்தி காட்டுங்கள் என சொன்னேன்.

எத்தனை ‘சீட்’ என நான் எப்போதும் எண்ணவில்லை. வெளியில் இருந்து அழுத்தமான ஆதரவு கொடுப்போம். தோளுக்கு தோளாக, அந்த அழுத்தம் இருக்கும். யார் என்ன சொன்னாலும், இதுதான் என் நிலைப்பாடு.

கட்சியினருடன் கலந்து ஆலோசித்து, இந்த முடிவை எடுத்தேன். நேர்மைக்கு அக்னிபரீட்சை இருக்காது. அது தீ போன்றது. அந்த தீ பரவட்டும். என் கட்சிக்கு மட்டுமல்ல, தமிழகத்துக்கே நெருக்கடி வந்துள்ளது.

பெரும் மரியாதை

உதயசூரியன் சின்னத்தில் நிற்க சொன்னதால்தான், இந்த முடிவுக்கு வந்தேன். சுயமரியாதை குறித்து, ஸ்டாலினுக்கு சொல்ல வேண்டியது இல்லை. என்னை அவர்கள் பெரும் மரியாதையுடன் நடத்துகின்றனர்; நடத்துவர் என்ற நம்பிக்கையும் உள்ளது.

எனவே, தி.மு.க., வுடன் நிற்பதை பெருமையாகவும், கடமையாகவும் நினைக்கிறேன். ‘டார்ச் லைட்’ சின்னத்தை என்ன செய்யவேண்டும் என, நான் முடிவு செய்கிறேன்.

எனக்கு தொகுதி முக்கியமல்ல. 2021 சட்டசபை தேர்தலில், நான் வெல்லவில்லை. மக்கள் என்னை தோற்கடிக்கவில்லை; அரசியல்தான் தோற்கடித்தது. ஆனாலும், நெஞ்சை நிமிர்ந்து வந்தேன். அதேபோல்தான் இப்போதும் வந்துள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.

கமலின் முடிவை வரலாறு பாராட்டும் முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்

முதல்வர் ஸ்டாலின் அறிக்கை: ம.நீ.ம., தலைவர் கமல், சென்னை அண்ணா அறிவாலயத்தில் என்னை சந்தித்து, நடக்க உள்ள சட்டசபை தேர்தலில் நேரடியாக போட்டியிடவில்லை என்றும், தி.மு.க., தலைமையிலான கூட்டணியின் வேட்பாளர்களை, எந்த நிபந்தனையின்றி ஆதரிப்போம் என்றும் தெரிவித்தார்.
இரண்டு அரசியல் இயக்கங்களின் தலைவர்களாக மட்டுமல்ல; நல்ல நண்பர்களாக, நாங்கள் இருவரும் இரு தரப்பு கருத்துக்களையும் பரிமாறிக் கொண்டோம். ‘இது தியாகம் அல்ல கடமை’ என்று அவர் சொன்னார். உண்மையில் அவர் செய்திருப்பது தியாகம்தான். அவருக்கு எப்படி நன்றி சொல்வது என தெரியவில்லை. அவரது முடிவு, என்னை மிகவும் நெகிழ வைத்துவிட்டது. அவருக்கும், அவரது மக்கள் நீதி மய்ய உறுப்பினர்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றி.
தமிழகம் முழுதும், கமல் வலம் வர வேண்டும் என்பது, என் அன்பான வேண்டுகோள். திராவிட மாடல் 2.0 அரசு, அவரது அன்பினாலும் ஆனது என்பதை, இப்போதே தெரிவித்துக் கொள்கிறேன். பேருள்ளத்துடன் தன்னலத்தை பின்னுக்கு தள்ளி, தமிழகத்தின் நலனை முன்னிறுத்தியிருக்கும், அவரது பெருந்தன்மையான முடிவை, வரலாறு பாராட்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Source link