தி.மு.க., கூட்டணியில், தி.மு.க., – காங்கிரஸ் இடையேயான மோதல் நாளுக்கு நாள் வலுத்து வருகிறது. நேற்று மதுரையில் காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் எம்.பி., மாணிக்கம் தாகூர், ”தி.மு.க.,வினர் மரியாதை கொடுக்கவில்லை என்றால், திருப்பி அடிப்போம்,” என ஆவேசமாக பேசியதும், ‘மகளிர் உரிமைத்தொகை பெறுவோருக்கு தலா 5,000 ரூபாய் கொடுத்தது, சட்டசபை தேர்தல் வெற்றிக்கு உதவாது’ என, அக்கட்சியின் தரவு பகுப்பாய்வு பிரிவு தலைவர் பிரவீன் சக்கரவர்த்தி விமர்சனம் செய்ததும், கூட்டணியில் பூகம்பத்தை ஏற்படுத்தி உள்ளது.
‘தி.மு.க., கூட்டணி என்பது கொள்கை கூட்டணி; அதை யாராலும் பிரிக்க முடியாது’ என தி.மு.க., கூறி வந்த நிலையில், ‘சட்டசபை தேர்தலில் போட்டியிட அதிக தொகுதிகள் ஒதுக்க வேண்டும்; ஆட்சியில் பங்கு தர வேண்டும்’ என, காங்கிரஸ் போர்க்கொடி துாக்கியது, கூட்டணியில் புகைச்சலை ஏற்படுத்தியது.
சரிவராது
சட்டசபை காங்கிரஸ் தலைவர் ராஜேஷ்குமார், விருதுநகர் எம்.பி., மாணிக்கம் தாகூர், ராகுலுக்கு நெருக்கமான பிரவீன் சக்கரவர்த்தி, காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் ஷோடங்கர் ஆகியோர், ஆட்சியில் பங்கு கோஷத்தை வலியுறுத்தினர்.
ஆனால், முதல்வர் ஸ்டாலின், ‘ஆட்சியில் பங்கு என்பது தமிழகத்திற்கு சரி வராது’ என்றார்.
இதையும் காங்கிரஸ் கட்சியினர் விமர்சிக்க, அவர்களுக்கு தி.மு.க.,வினர் பதிலடி கொடுக்க, மோதல் அதிகரித்தது. தி.மு.க., தலைமை, காங்., – எம்.பி., ராகுலை சந்தித்து பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்க முயற்சித்தது.
அதன் தொடர்ச்சியாக, மாணிக்கம் தாகூர் எம்.பி., பிரவீன் சக்கரவர்த்தி ஆகியோர் ராகுலை சந்தித்தனர். அதன்பின்னரும், காங்கிரசார் தங்களின் கோரிக்கையை கைவிடவில்லை.
மதுரை திருநகரில் நேற்று நடந்த மதுரை தெற்கு மாவட்ட காங்., செயற்குழு கூட்டத்தில், ‘தமிழகத்தில் ஆட்சி அதிகாரத்தில் பங்கு வேண்டும்; அதிக எண்ணிக்கையில் ‘சீட்’ வேண்டும்; உள்ளாட்சி அமைப்புகளில் 30 சதவீதம் பங்கு வேண்டும்’ என்பது உட்பட பல்வேறு தீர்மானங்களை நிறைவேற்றி, கூட்டணியை கலகலக்க வைத்துள்ளனர்.
மேலும், எரியும் நெருப்பில் பெட்ரோலை ஊற்றுவது போல், அக்கூட்டத்தில் மாணிக்கம் தாகூர் எம்.பி., பேசியுள்ளார்.
அவர் பேசியதாவது:
விருதுநகர் தொகுதியில் நான் மீண்டும் போட்டியிடப் போவதில்லை. எங்களிடம் குறைவான ஆட்கள், குறைவான பணம் இருக்கலாம். எங்கள் ஆதரவு இல்லாமல், தி.மு.க., அரியணை ஏறி இருக்க முடியாது என்பதை மறந்து விடாதீர்கள்.
அன்போடும், மரியாதையோடும் எங்களை நடத்தினால், நாங்களும் அப்படியே இருப்போம். எங்களை கேவலப் படுத்தி பேச நினைப்போருக்கு, அதே போல பதில் கொடுப்போம். எங்களுக்கு மரியாதை கொடுக்கவில்லை என்றால், திருப்பி அடிப்போம்.
உண்மையாகவே, பா.ஜ.,வை எதிர்க்கக் கூடிய தைரியமும், தில்லும் காங்கிரசாருக்கு மட்டுமே இருக்கிறது.
தமிழகத்தில் 2016 முதல், தி.மு.க., – காங்., கூட்டணி பல வெற்றிகளை பெற்றுள்ளது. வரும் தேர்தலுக்கு கூட்டணி குறித்து பேச, காங்கிரசில் குழு அமைத்து 70 நாட்களாகிறது. பிப்ரவரி 22ல் குழு அமைக்கப்படும் என தி.மு.க., கூறியிருக்கிறது.
நாங்கள் தோழமைக்கு மரியாதை கொடுக்கிறோம்; அதேபோல மரியாதையை எதிர் பார்க்கிறோம்.
தி.மு.க.,விடம் நான் கேட்பது மரியாதை, அன்பு மட்டும் தான்; சொத்து கேட்கவில்லை. தி.மு.க., மாவட்டச் செயலர் தளபதி பொதுவெளியில், காங்கிரஸ் கட்சிக்கு பூத் கமிட்டிக்கு கூட ஆள் இல்லை என்று பேசியதால் வருத்தம் வருகிறது.
ஒரு அமைச்சரோ, ‘கூட்டணிக்கு காங்., வந்தால் வரட்டும்; வராவிட்டால் போகட்டும்’ என்கிறார். இன்னொரு அமைச்சரோ, ‘அதெல்லாம் எங்கள் தலைவர் பார்த்துக் கொள்வார்’ என்று கூறுவது வலியை தருகிறது.
பழியை சுமந்தோம்
தி.மு.க., செய்த தவறு களுக்காக, நாங்கள் பழியை சுமந்தோம். ராகுலுக்கு தி.மு.க., கொடுக்கிற மதிப்பை, காங்கிரசில் கீழ்மட்டத்தில் உள்ளவர்களுக்கும் கொடுக்க வேண்டும்.
தி.மு.க., – எம்.எல்.ஏ., தளபதி பேசியதற்கு நடவடிக்கை எடுக்கக்கூறி பல நாட்களாகி விட்டது. முதல்வர் ஸ்டாலின் நடவடிக்கை எடுக்காதது வேதனை அளிக்கிறது.
நாங்கள் எதற்கும் கமிஷன் கேட்டதில்லை. அடுத்தவன் சொத்துக்கு ஆசைப்படாதவன் தான் காங்கிரஸ்காரன். காங்கிரசின் லட்சியமே மதுரை வடக்கு தொகுதி தான். இதன் வேட்பாளராக கார்த்திகேயன் போட்டியிடுவார்.
வரும் 25ம் தேதிக்குள், அத்தொகுதியின் 287 பூத்களுக்கான ஏஜன்டுகள் கூட்டம் நடக்கும். நமக்கு தேவை மரியாதை. இவ்வாறு அவர் பேசினார்.
மூட நம்பிக்கை
அதேபோல, மகளிர் உரிமைத்தொகை பெறுவோர் வங்கி கணக்கில் 5,000 ரூபாய் வரவு வைக்கப்பட்டதும், ‘இனி ஆட்சியில் பங்கு வேண்டும் என எந்த கட்சியும் கேட்காது’ என, தி.மு.க., அமைப்பு செயலர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்தார்.
அதற்கு பதில் அளிக்கும் வகையில், காங்கிரஸ் கட்சியின் தரவு பகுப்பாய்வு பிரிவு தலைவர் பிரவீன் சக்கரவர்த்தி நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், ‘மகளிர் உரிமைத்தொகை ஒரு சிறந்த நலத்திட்டம் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. இதை செயல்படுத்தியது பாராட்டத்தக்கது. ஆனால், இது மட்டுமே தேர்தலில் வெற்றியை உறுதிப்படுத்தும் என நம்புவது, ஒரு மூடநம்பிக்கை மட்டுமே. கடந்த மூன்று ஆண்டுகளில் தேர்தலுக்கு முன்னதாக இது போன்ற திட்டங்களை அறிவித்த ஒன்பது பெரிய மாநில அரசுகளில், நான்கு மட்டுமே வெற்றி பெற்றன. ஐந்து கட்சிகளின் அரசுகள் தோல்வி அடைந்தன’ என்று குறிப்பிட்டுள்ளார்.
மாணிக்கம் தாகூர் எம்.பி.,யின் பேச்சு, பிரவீன் சக்கரவர்த்தி விமர்சனம் போன்றவை, தி.மு.க., – காங்கிரஸ் கூட்டணியில் பூகம்பத்தை ஏற்படுத்தி உள்ளன. இதற்கு, தி.மு.க., எந்த வகையில் பதிலளிக்கப் போகிறது என்பதே, இரு கட்சியினரின் எதிர்பார்ப்பாக உள்ளது.
த.வெ.க.,வுடன் கூட்டணி காங்கிரசார் வலியுறுத்தல்
‘த.வெ.க.,வுடன் கூட்டணி பேச்சை துவக்க வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றும்படி, மாவட்டத் தலைவர்களுக்கு அழுத்தம் கொடுங்கள்’ என, தமிழக காங்கிரஸ் மாநில நிர்வாகிகள் சிலர், கட்சியினருக்கு சுற்றறிக்கை அனுப்பி உள்ளனர்.தமிழக காங்கிரஸ் மாநில நிர்வாகிகள் பொன்.கிருஷ்ணமூர்த்தி, கே.விஜயன், எம்.ஜோதி, என்.முருகானந்தம், கே.தணிகாசலம், எஸ்.வி.ரமணி, இல.பாஸ்கரன், நசீர் ராஜா ஆகியோர், சென்னையில் நேற்று முன்தினம் ரகசிய கூட்டம் நடத்தினர்.
இதில் எடுத்த முடிவை, கட்சியினருக்கு சுற்றறிக்கையாக அனுப்பி உள்ளனர். அதில், ‘காங்கிரஸ் தொண்டர்கள் தங்கள் மாவட்டத் தலைவர்களை தொடர்பு கொண்டு, த.வெ.க.,வுடன் உடனே கூட்டணி பேச்சை துவக்க, கட்சித் தலைமையை வலியுறுத்தி, தீர்மானம் நிறைவேற்றுங்கள். தீர்மானத்தின் நகலை, காங்கிரஸ் தலைமை அலுவலகத்திற்கு அனுப்பி வையுங்கள் என அழுத்தம் கொடுக்க வேண்டும்’ என்று தெரிவித்துள்ளனர்.
– நமது நிருபர் –
