தி.மு.க.,வின் இல்லத்தரசிகள் கூப்பன் திட்டம் இன்னொரு முதலீடு என்கிறார் கனிமொழி

சென்னை: ”பிரிஜ், மிக்சி, கிரைண்டர் போன்றவற்றை இல்லத்தரசிகள் பயன்படுத்தும்போது, அவர்களது நேரம் சேமிக்கப்படும். அந்த நேரத்தில், அவர்கள் வேறு வேலைகளை செய்ய இயலும். இது, இன்னொரு முதலீடு என்பதை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும்,” என, தி.மு.க., துணை பொதுச்செயலர் கனிமொழி கூறினார்.

சென்னை அறிவாலயத்தில் நேற்று, தி.மு.க., தேர்தல் அறிக்கை குழு தலைவர் கனிமொழி அளித்த பேட்டி: தி.மு.க.,வின் தேர்தல் அறிக்கை, ‘காப்பி’ என கூறுவது வேடிக்கையானது. பழனிசாமி, அன்புமணிக்கு கணக்கு தெரிந்த யாராவது வகுப்பு எடுக்க வேண்டும்.

அ.தி.மு.க., ஆட்சியில் செயல்படுத்தாத வாக்குறுதிகளை பட்டியலிட்டால், அது நீண்டு கொண்டே போகும். இல்லத்தரசிகளுக்கான கூப்பன் திட்டம் குறித்து, ஒரு உதாரணம் சொல்ல விரும்புகிறேன்.

முதல்வராக கருணாநிதி இருந்தபோது, தேர்தல் வாக்குறுதியாக அறிவித்திருந்த காஸ் அடுப்பு கொடுக்கும் திட்டத்தை நிறைவேற்றும்போது, அதிகாரிகள் சிலர் கருணாநிதியிடம், ‘நீங்கள் எத்தனை பர்னர் உள்ள அடுப்பு என சொல்லவில்லை. அதனால், ஒரு பர்னர் இருக்கும் அடுப்பை கொடுத்தாலே போதும்; அரசுக்கு செலவு குறையும்’ என்றனர்.

அதற்கு கருணாநிதி, ‘இதை தேர்தல் வாக்குறுதியாக தரவில்லை. இரண்டு பர்னர் இருக்கும் அடுப்பை கொடுத்தால், அவர்கள் வேலையை சீக்கிரமாக முடித்துவிட்டு, சமையலறையில் இருந்து அந்த பெண்கள் வெளியில் வருவர்; வாழ்க்கையில் தங்களுக்கு பிடித்த மற்ற விஷயங்களை செய்யத் துவங்குவர்’ என்றார்.

அதேபோலத் தான் இந்தக் கூப்பன் திட்டமும். சமையலறையில் இருந்து சீக்கிரம் விடுதலை கிடைப்பதற்கான திட்டம் தான் இது.

ஒரு வாஷிங் மிஷின் வாங்கும்போது, கையில் துவைப்பதற்கு எடுத்துக் கொள்ளப்படும் நேரம் குறையும். பிரிஜ், மிக்சி, கிரைண்டர் போன்றவற்றை பயன்படுத்தும்போது, அவர்களது நேரம் சேமிக்கப்படும்.

அந்த நேரத்தில், அவர்கள் வேறு வேலைகளை செய்ய இயலும். இது, இன்னொரு முதலீடு என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். அந்த கூப்பனை பயன்படுத்தி, இந்த பொருட்களைத் தான் நீங்கள் வாங்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.

Source link