சேலம் மாவட்டம் வீரபாண்டி தொகுதி சிட்டிங் எம்.எல்.ஏ., தான் அ.தி.மு.க.,வின் ராஜமுத்து. மறைந்த முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின் குடும்பத்தால், இத்தொகுதி மீண்டும் அ.தி.மு.க.,வுக்கே கிடைக்கப்போகிறது என புலம்புகின்றனர் தி.மு.க.,வினர்.
ஆறுமுகத்தின் மகனும் மறைந்த முன்னாள் எம்.எல்.ஏ.,வுமான ராஜாவின் மகள் மலர்விழி, ஆறுமுகத்தின் இரண்டாவது மனைவியின் மகன் பிரபு, மருமகன் தருண், மாவட்ட துணைச் செயலர் சுரேஷ்குமார், ஒன்றிய செயலர் வெண்ணிலா சேகர் ஆகிய ஐந்து பேர் இந்த தேர்தலில் விருப்ப மனு அளித்துள்ளனர்.
அதோடு, சமீபத்தில், முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடந்த இத்தொகுதிக்கான நேர்காணலில் பங்கேற்காத பிரபுவும் அருணும், சேலம் மேற்குத் தொகுதிக்கான நேர்காணலில் பங்கேற்று மேலும் சிக்கலை அதிகரித்துள்ளனர்.
மேலும் ஆறுமுகம் குடும்பத்தின் கோஷ்டி பூசலால், சேலம் மாவட்ட தி.மு.க.,வும் கோஷ்டி பூசலில் சிக்கியுள்ளது.
இதுகுறித்து, தி.மு.க.,வினர் கூறியதாவது: தருண் உட்பட அக்குடும்பத்தினர் ஐந்து பேரும், வரும் சட்டசபை தேர்தலில், ‘சீட்’ பெறுவதற்காக தற்போது சென்னையில் முகாமிட்டுள்ளனர்.
இவர்களில் ஒருவருக்கு, ‘சீட்’ வழங்கினால் மற்றவர்களின் ஒத்துழைப்பு கிடைக்குமா, கோஷ்டி பிரச்னையில் உள்ளடி வேலை நடக்குமா என, கட்சி தலைமைக்கு சந்தேகம் உள்ளது.
ஐந்து பேரையும் தவிர்த்து, பொதுவான ஒருவருக்கு ‘சீட்’ கொடுக்கலாமா எனவும் ஆலோசித்து வருகிறது. அந்தக் குடும்பத்தால் தான் இத்தொகுதியில் தி.மு.க.,வுக்கு பின்னடைவு. இவ்வாறு அவர்கள் கூறினர்.
