தி.மு.க.,வை விட்டு காங்கிரசை பிரிக்கும் பா.ஜ.,வின் ஆசை நிறைவேறாது: சொல்கிறார் செல்வப்பெருந்தகை

மதுரை: ”தமிழக சட்டசபை தேர்தலுக்கு பின், பா.ஜ.,வின் கிளை கழகமாக அ.தி.மு.க., மாறி விடும்,” என தமிழக காங்., தலைவர் செல்வப்பெருந்தகை விமர்சித்தார்.


மதுரையில் அவர் அளித்த பேட்டி: சட்டசபை தேர்தலுக்கான தொகுதி பங்கீடு குறித்து பேச காங்கிரஸ் தயாராக உள்ளது. தி.மு.க., ஓரிரு நாட்களில் குழு அமைக்கும் என எதிர்பார்க்கிறோம். எங்களுக்குள் கூட்டணியில் துளி அளவும் முரண்பாடு இல்லை. காங்.,கில் கூட்டணி குறித்து முடிவு எடுக்கும் அதிகாரம், அகில இந்திய தலைமைக்கு தான் உள்ளது.

பா.ஜ., போல் தலையில்லாத முண்டமாக காங்., இல்லை. இது ஜனநாயக கட்சி. எங்கள் கருத்துகளை கூறுகிறோம்; மேலிடம் வழிகாட்டும். தமிழகத்தில் ஆட்சிக்கு வர முடியாது என்பதால், மாநில உரிமையை பறித்ததோடு, நிதியையும் மத்திய பா.ஜ., அரசு ஒதுக்கவில்லை.

தற்போது பா.ஜ.,வின் ஒரே நோக்கம், அ.தி.மு.க.,வை கபளீகரம் செய்வது தான். தேர்தலுக்கு பின், பா.ஜ.,வின் கிளை அமைப்பாக அ.தி.மு.க., மாறி விடும். ஜெயலலிதா இருந்திருந்தால், இந்நிலை அக்கட்சிக்கு வந்திருக்காது.

தி.மு.க.,வை விட்டு காங்.,கை பிரித்துவிட வேண்டும் என்ற பா.ஜ.,வின் நப்பாசை ஒருபோதும் நிறைவேறாது. மத்திய பட்ஜெட்டுக்கு எதிராக மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி நடத்தும் ஆர்ப்பாட்டத்தில், காங்., பங்கேற்கும். இவ்வாறு அவர் கூறினார்.

ராமதாஸை சேர்க்க வலியுறுத்தல்!

தி.மு.க., கூட்டணியில் ராமதாசை சேர்க்க வேண்டும் என, தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, முதல்வர் ஸ்டாலினிடம் வலியுறுத்தி வருவதாக கூறப்படுகிறது. அதை உறுதிப்படுத்துவதுபோல, சென்னையில் நேற்று பேட்டியளித்த செல்வப்பெருந்தகை, ”ராமதாசை கூட்டணியில் சேர்ப்பது பற்றி, தி.மு.க., தான் முடிவு செய்ய வேண்டும். வி.சி., கொடியை ராமதாஸ் ஏற்றியுள்ளார். வன்னியர் சங்க கொடியை, திருமாவளவன் ஏற்றியுள்ளார். தேவை என்றால், ஒருவரையொருவர் சந்தித்து பேசி சரி செய்து விடுவர். இருவரும் இணக்கமாக இருந்தவர்கள்தான்,” என்றார்.

Source link