தி ருச்சி மாவட்டம், மணப்பாறை சட்டசபைத் தொகுதியில், தி.மு.க., கூட்டணியில் மனிதநேய மக்கள் கட்சி சார்பில், ‘சிட்டிங்’ எம்.எல்.ஏ., அப்துல் சமது போட்டியிடுகிறார். இவர் கடந்த நான்கு நாட்களாக தொகுதியில் தீவிர பிரசாரம் செய்து வருகிறார்.
இந்நிலையில், மருங்காபுரி வடக்கு ஒன்றிய பகுதியில் பிரசாரம் செய்ய, தேனுார் கிராமத்துக்கு சென்றபோது, ‘வேட்பாளர் அப்துல் சமது திருப்பரங்குன்றம் மலையில் பிரியாணி சமைத்தவர்; உள்ளூர்காரர் இல்லை; ஐந்து ஆண்டுகள் எதுவும் செய்யவில்லை’ என்று கூறி, அந்த கிராமத்தைச் சேர்ந்த சிலர், வாகனங்களை நிறுத்தி பிரசாரம் செய்ய விடாமல் தடுத்தனர். தி.மு.க.,வினர் பேச்சு நடத்தியும் பலனில்லை. பிரசாரம் ரத்தானது.
அதேபோல், பிரான்பட்டி, வலசுப்பட்டி கிராமங்களில் வேட்பாளருடன் வந்த கரூர் எம்.பி., ஜோதிமணியையும் முற்றுகையிட்ட மக்கள், ஐந்து ஆண்டுகளாக ஏதும் செய்யவில்லை. ஆகையால் இங்கு ஓட்டு கேட்டு வர வேண்டாம் என்று கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் வேட்பாளர் அப்துல் சமது, ஜோதிமணி எம்.பி., ஆகியோர், அங்கு ஓட்டு கேட்காமல் சென்றனர்.
புத்தாநத்தம் கிராம பஞ்சாயத்தை இரண்டாக பிரித்ததைக் கண்டித்து, வெள்ளையக்கவுண்டன்பட்டி கிராம மக்கள், நேற்று சாலையில் உட்கார்ந்து, வேட்பாளர் அப்துல் சமது ஊருக்குள் வரக்கூடாது என்று கூறி போராட்டம் நடத்தினர்.
அப்போது வேட்பாளர் ஆதரவாளர்களுக்கும் கிராமத்தினருக்கும் இடையே தள்ளுமுள்ளு நடந்தது.
