சென்னை,
தீபாவளி பண்டிகைக்கு சொந்த ஊருக்குச் சென்று வர வசதியாக, தீபாவளிக்கு மறுநாள் அரசு விடுமுறை விட வேண்டும் என அரசு ஊழியர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
ஞாயிற்றுக்கிழமை தீபாவளி
வெளியூர்களில் தங்கி பணிபுரியும் அரசு ஊழியர்கள் மற்றும் வெளியூர்களில் படிக்கும் மாணவர்கள், தீபாவளி பண்டிகையை கொண்டாடுவதற்காக சொந்த ஊர்களுக்குச் செல்வது வழக்கம். இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை நவம்பர் 8-ந்தேதி ஞாயிற்றுக்கிழமை வருகிறது. இதனால், அதற்கு முந்தைய நாளான, சனிக்கிழமை சேர்த்து, வழக்கமான வார இறுதி விடுமுறை போல முடிந்துவிடும்.
அமாவாசை
மேலும், இந்த ஆண்டு தீபாவளி அன்று அமாவாசை வருவதால், பலர் அன்று அசைவ உணவுகளைத் தவிர்த்து, மறுநாள் அசைவ உணவுகளை சமைத்து சாப்பிடுவார்கள். சொந்த ஊர்களுக்குச் சென்றவர்கள் தீபாவளி அன்றே இரவு பணியிடங்களுக்குத் திரும்புவதும் சிரமமாக இருக்கும்.
மறுநாளும் விடுமுறை கோரிக்கை
எனவே, பொதுமக்களும் அரசு ஊழியர்களும் குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாக தீபாவளியைக் கொண்டாடி, சிரமமின்றி பணியிடங்களுக்குத் திரும்பும் வகையில், நவம்பர் 9-ந்தேதி திங்கட்கிழமையும் அரசு விடுமுறை அளிக்க வேண்டும் என்று அரசு ஊழியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது தொடர்பாக தமிழக அரசு ஆலோசித்து வருகிறது.
