துபாய்: சர்வதேச ‘டி-20’ தரவரிசையில் இந்தியாவின் தீப்தி சர்மா ‘நம்பர்-3’ பவுலர் ஆனார். ஹர்மன்பிரீத் கவுர், 14வது இடத்துக்கு முன்னேறினார்.
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) சார்பில், ‘டி-20’ போட்டியில் சிறந்து விளங்கும் வீராங்கனைகளுக்கான தரவரிசை பட்டியல் வெளியானது. பேட்டர் தரவரிசையில் இந்தியாவின் துவக்க வீராங்கனை ஸ்மிருதி மந்தனா, 770 புள்ளிகளுடன் ‘நம்பர்-2’ இடத்தில் தொடர்ந்து நீடிக்கிறார்.
ஆஸ்திரேலியாவின் பெத் மூனே (793) முதலிடத்தில் உள்ளார். வெஸ்ட் இண்டீசின் ஹீலே மாத்யூஸ் (765) மூன்றாவது இடம் பிடித்துள்ளார். இந்திய அணி கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் (638), ஒரு இடம் முந்தி, 14வது இடத்தில் உள்ளார். மற்ற இந்திய வீராங்கனைகள் ஷைபாலி (725) 6, ஜெமிமா (644) 12வது இடத்தில் நீடிக்கின்றனர்.
தீப்தி அபாரம்
பவுலர் தரவரிசையில் இந்தியாவின் தீப்தி சர்மா, 717 புள்ளியுடன், ஒரு இடம் முன்னேறி, ‘நம்பர்-3’ இடம் பிடித்தார். இந்தியாவின் ரேணுகா, 6வது (712) இடத்தில் தொடர்கிறார். மற்றொரு இந்திய பவுலர் அருந்ததி (697) ஒரு இடம் பின்தங்கி, 11 வது இடம் பெற்றார்.
‘ஆல் ரவுண்டர்’ தரவரிசையில் இந்தியாவின் தீப்தி (362) 3வது இடத்திற்கு முன்னேறினார்.
