தீயாய் பரவிய வதந்திக்கு முற்றுப்புள்ளி: வீடியோ வெளியிட்டார் இஸ்ரேல் பிரதமர்

ஜெருசலேம்: மத்திய கிழக்கில் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் மரணம் குறித்த வதந்திகள் பரவி வருகிறது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், வீடியோ வெளியிட்டு ஈரான் மக்களுக்கு பெஞ்சமின் நெதன்யாகு வாழ்த்து தெரிவித்து உள்ளார்.

மேற்காசிய நாடான ஈரானுடன் அமெரிக்காவும், இஸ்ரேலும் கடந்த இரண்டு வாரங்களுக்கும் மேலாக போரிட்டு வருகின்றன. இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கொல்லப்பட்டு விட்டார் என்று வலைதளங்களில் பல்வேறு வதந்திகள் பரவி வருகின்றன. எனினும் அவர் உயிருடன் தான் இருக்கிறார், நலமாக உள்ளார் என்று இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் தொடர்ந்து கூறி வருகிறது.

இதனை உறுதிப்படுத்தும் வகையில், பெஞ்சமின் நெதன்யாகு கையில் காபி அருந்தியபடியே பேசும் காட்சிகள் அடங்கிய வீடியோ ஒன்றை இஸ்ரேல் பிரதமர் அலுவலகத்தின் அதிகாரப்பூர்வ எக்ஸ் வலைதள பக்கத்தில் வெளியிடப்பட்டது. அது செயற்கை நுண்ணறிவு பயன்படுத்தி தயார் செய்யப்பட்ட வீடியோ என்று தகவல் பரவியதால் மரணம் குறித்த வதந்திகள் தொடர்ந்தன.

இந்நிலையில் இன்று இன்னொரு வீடியோ வெளியிட்டு இஸ்ரேல் பிரதமர் ஈரான் மக்களுக்கு நவ்ரூஸ் பண்டிகை வாழ்த்து தெரிவித்துள்ளார். நவ்ரூஸ் என்பது வசந்த காலத்தின் வருகையையும், புத்தாண்டு தொடக்கத்தையும் குறிக்கும் 3,000 ஆண்டுகளுக்கும் மேலான பழமையான பண்டிகையாகும்.

வீடியோவில் பெஞ்சமின் நெதன்யாகு கூறியிருப்பதாவது: ஈரானின் துணிச்சலான மக்களே, ஒவ்வொரு ஆண்டும் நான் வாழ்த்துவது போலவே, ‘ஒளித் திருவிழா’வுடன் தொடங்கும் இந்தத் திருவிழாக் காலம் உங்களுக்கு மகிழ்ச்சிகரமானதாக அமைய எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

இருளை வென்று ஒளி வெற்றிபெறும்; தீமையை வென்று நன்மை வெற்றிபெறும். ஈரான் மக்களின் தொன்மையான நம்பிக்கையையே இது உணர்த்துகிறது. ஈரான் மக்கள் அனைவருக்கும் நவ்ரூஸ் பண்டிகை வாழ்த்துக்கள் தெரிவித்து கொள்கிறேன். இந்த ஆண்டு இந்த விடுமுறை சிறப்பாக அமையட்டும்.

உங்கள் நண்பர்கள், உங்கள் குடும்பத்தினர், உங்கள் அன்புக்குரியவர்களுடன் கொண்டாடுங்கள். உங்கள் அனைவருக்கும் புதிய தொடக்கமாக அமையட்டும். இவ்வாறு பெஞ்சமின் நெதன்யாகு கூறியுள்ளார்.

Source link