துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன் முதன்முறையாக இலங்கை பயணம்

புதுடெல்லி

இந்திய துணை ஜனாதிபதியாக சி.பி. ராதாகிருஷ்ணன் பதவியேற்ற பின்னர் முதன்முறையாக, இலங்கை நாட்டுக்கு அவர் 2 நாள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இதற்காக அவர் இன்று காலை விமானத்தில் புறப்பட்டு சென்றார்.

இலங்கைக்கு, இந்தியாவின் துணை ஜனாதிபதி 26 ஆண்டுகளுக்கு பின்னர் இப்போதுதான் செல்கிறார். இதற்கு முன்பு கடந்த 2000-ம் ஆண்டு அக்டோபர் மாதம் அப்போது துணை ஜனாதிபதியாக இருந்த கிரிஷன் காந்த், இலங்கையின் பெண் பிரதமராக இருந்த ஸ்ரீமாவோ பண்டார நாயக்காவின் இறுதி சடங்கில் பங்கேற்க சென்றிருந்தார்.

இந்த பயணத்தின்போது இலங்கை அதிபர் அனுர குமார திசநாயகே, பிரதமர் ஹரினி அமரசூரியா, நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசா ஆகியோரை சி.பி.ராதாகிருஷ்ணன் சந்தித்து பேசுகிறார். இதேபோல இலங்கையில் உள்ள தமிழ் அரசியல் கட்சிகளை சேர்ந்த முக்கிய பிரதிநிதிகளையும் சந்தித்து பேச உள்ளார்.

தனது 2 நாள் பயணத்தின்போது எரிசக்தி, சமுதாய மேம்பாடு, பிராந்திய வளர்ச்சி, மீனவர் நலன் உள்பட பல்வேறு துறைகளில் முக்கிய ஒப்பந்தங்கள் இரு நாடுகளுக்கு இடையேயும் கையெழுத்தாக உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த பயணத்தில் இந்திய வம்சாவளி தமிழ் சமூகத்தினரிடமும் அவர் பேசவுள்ளார். அவர்கள் அதிகம் வசிக்க கூடிய நுவாரா எலியா பகுதிக்கு சென்று நேரடியாக அவர்களை சந்தித்து பேசுகிறார். இந்த இடம் தேயிலை அதிகம் விளைய கூடிய பகுதியாகும்.

இதன்பின்னர், இந்திய வீட்டு வசதி திட்டம் கட்டம் 3-ன் கீழ் இதுவரை 4 ஆயிரம் வீடுகள் கட்டப்பட்டு உள்ள பகுதிக்கு சென்று பார்வையிடுகிறார். இதுதவிர இந்த திட்டத்தின் கீழ், 10 ஆயிரம் வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன. நுவாரா எலியா பகுதிக்கு பயணம் செய்து சீதை கோவிலில் அவர் சாமி தரிசனமும் செய்ய உள்ளார். இலங்கையிலுள்ள இந்திய வர்த்தக பிரமுகர்கள், தலைவர்களையும் அவர் சந்தித்து பேசுகிறார்.

சமீபத்திய தித்வா புயல் உள்பட அனைத்து பேரிடர் காலங்களிலும் இலங்கைக்கு உதவியாக இந்தியா எப்போதும் இருந்துள்ளது. தொடர்ந்து உதவிகளை வழங்கி வருகிறது.

Source link