தவெக தலைவர் விஜய்யின் கடைசிப் படமான ‘ஜன நாயகன்’ சிபிஎஃப்சி-யிடம் சிக்கி பெரும் பிரச்சனையை சந்தித்தது. படத் தயாரிப்பு நிறுவனம் உயர்நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் சென்றும் பலன் கிடைக்கவில்லை. சிபிஎஃப்சி-யும் விடாமல் முட்டுக்கட்டை போட்டது. இறுதியில் படக்குழு வழக்கை வாபஸ் பெற்று மறு சான்றிதழுக்கு சிபிஎஃப்சி-யிடம் சமர்பித்தது. படம் பார்த்த சிபிஎஃப்சி தேர்தல் நடத்தை விதி அமலில் இருப்பதால் இது தொடர்பாக தேர்தல் ஆணையம் முடிவெடுக்கும் என பரிந்துரைத்தது. ஆனால் அதன்பிறகு எந்த தகவலும் வெளியாகவில்லை. ஜனவரி 9ஆம் தேதி வெளியாகவிருந்த இப்படம் தொடர் தாமதமாகி வந்ததால் வெளிநாட்டு உரிமை, ஓடிடி உரிமை என பல வியாபரங்கள் பாதிக்கப்பட்டது.
இந்த சூழலில் ஜன நாயகன் படத்தின் 5 நிமிட காட்சிகள் சமீபத்தில் இணையத்தில் கசிந்தது. பின்பு மொத்த படமும் வெளியானது. இதனால் படக்குழுவினரும் விஜய் ரசிகர்களும் அதிர்ச்சியடைந்துள்ளனர். இதையடுத்து பட தயாரிப்பு நிறுவனம் சார்பில் அந்நிறுவனத்தின் சட்ட ஆலோசகர், விஜயன் சுப்ரமணியன் படத்தை கசிய விட்ட நபர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அறிக்கை வெளியிட்டிருந்தார். மேலும் படத்தை பதிவிறக்கம் செய்வதோ, அனுப்புவதோ, சேமிப்பதோ இதுபோன்று எது செய்தாலும் சட்டப்படி குற்றம் எனக்கூறி சம்பந்தப்பட்ட நபர்கள் மீது உரிமையியல் மற்றும் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்திருந்தார். பின்பு படத் தயாரிப்பு நிறுவனமும் அதே எச்சரிக்கையோடு அறிவிக்கை வெளியிட்டது. இந்த சட்டவிரோதமான நடவடிக்கையை கண்டித்து பல திரைபிரபலங்கள், சங்கங்கள் குரல் கொடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில் மற்ற மொழி சினிமாக்களில் இருந்தும் தற்போது ஆதரவு பெருகி வருகிறது. கன்னட முன்னணி நடிகர் ரிஷப் ஷெட்டி, “சினிமா என்பது பேரார்வத்தாலும் கனவுகளாலும் அன்பினாலும் உருவாக்கப்படுகிறது. மக்களை மகிழ்விக்க ஏகப்பட்ட பேர் ஓய்வில்லாமல் உழைக்கிறார்கள். அந்த உழைப்பில் யாராவது, சிறியதாக குறுக்கிட்டாலும் ஒட்டுமொத்த படக்குழுவையும் ஆழமாகப் பாதிக்கிறது. ஜன நாயகன் படம் துரதிர்ஷ்டவசமாகக் கசிந்திருப்பது ஒரு ஏற்றுக்கொள்ள முடியாத செயல். பார்வையாளர்களாகிய நீங்கள், தயவுசெய்து அந்த உழைப்பை மதித்து, கசிந்த காட்சிகளைப் பரப்புவதை நிறுத்துங்கள். நாளைக்கு நல்ல சினிமாக்களை கொடுக்கும் அந்தச் சக்தியை நீங்களே அழித்துவிடாதீர்கள். இந்த இக்கட்டான நேரத்தில், அத்திரைப்படத்தின் முழுக்குழுவினருடனும் கேவிஎன் நிறுவனத்துடனும் நான் உறுதுணையாக நிற்கிறேன். நமது சினிமா குடும்பத்தைப் பாதுகாப்போம்” என தனது எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே பாலிவுட் நடிகர் சோனு சூட், “ஜனநாயகன் போன்ற ஒரு திரைப்படம் இணையத்தில் கசிவதைக் காண்பது மிகவும் மனவேதனை அளிக்கிறது. ஒரு திரைப்படத்தை உருவாக்க தூக்கமற்ற இரவுகள், பல ஆண்டுகால உழைப்பு மற்றும் பேரார்வம் தேவைப்படும். இதில் ஈடுபட்டவர்களுக்கு மட்டுமே அதன் ஆழம் புரியும். அது அவர்களுக்குத் தங்கள் குழந்தையைப் போன்றது. திரைப்படத் திருட்டு என்பது சட்டவிரோதமானது மட்டுமல்ல, அத்திரைப்படத்தின் பின்னால் இருக்கும் ஒவ்வொரு கலைஞரையும் தொழில்நுட்ப வல்லுநரையும் முற்றிலும் அவமதிக்கும் செயல். இதற்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். விஜய்க்கு ஆதரவாக நான் துணை நிற்கிறேன். சினிமாவை நாம் மதிப்போம்” என தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
