தமிழகத்தில் திமுக சார்பில் திருச்சி சிவா, அந்தியூர் செல்வராஜ், என்.ஆர். இளங்கோ, கனிமொழி சோமு, அ.தி.மு.க சார்பில் தம்பிதுரை மற்றும் கடந்த முறை அ.தி.மு.க கோட்டாவில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜி.கே.வாசன் ஆகியோரின் பதவிக் காலம் ஏப்ரல் 2-ம் தேதியுடன் நிறைவடைகிறது. இந்த 6 இடங்களுக்கான தேர்தல் அறிவிப்பு கடந்த பிப்.18-ம் தேதி வெளியானது. அதன் அடிப்படையில் தி.மு.க-வின் 4 இடங்களில் இரண்டு இடங்களை தி.மு.க-வுக்கும் இரு இடங்கள் கூட்டணிக் கட்சிகளான தே.மு.தி.க – காங்கிரஸ் கட்சிகளுக்கும் ஒதுக்கப்பட்டது.

தே.மு.தி.க சார்பில் பொருளாளர் எல்.கே.சுதீஷ் மாநிலங்களவைத் தேர்தலுக்கான வேட்புமனுவைத் தாக்கல் செய்துள்ளார். இது தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த பிரேமலதா விஜயகாந்த், “தேமுதிக பொருளாளர் எல்.கே.சுதீஷ், கேப்டன் விஜயகாந்தின் ஆசீர்வாதத்தோடும், மக்களின் பேராதரவோடும், கட்சி நிர்வாகிகளின் ஒத்துழைப்போடும் இன்று மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கான வேட்புமனுவைத் தாக்கல் செய்துள்ளார்.
இந்த வாய்ப்பு பல ஆண்டுகளுக்கு முன்பே கிடைத்திருக்க வேண்டியது, காலதாமதமாக 2026-ல் சாத்தியமாகியுள்ளது. இந்த மகிழ்ச்சியும் புகழும் தெய்வமாக இருந்து எங்களை வழிநடத்தும் கேப்டன் விஜயகாந்தையே சாரும். கடந்த காலங்களில் அ.தி.மு.க உள்ளிட்ட பல கூட்டணிகளில் தே.மு.தி.க போட்டியிட்டிருந்தாலும், நாடாளுமன்ற உறுப்பினர் பதவி கைக்கு எட்டாமலேயே இருந்தது. தற்போது 2026-ல் தி.மு.க கூட்டணியில் இந்த வாய்ப்பு கிடைத்துள்ளதை தே.மு.தி.க தொண்டர்கள் ஒரு பெரும் வெற்றிக் கொண்டாட்டமாகப் பார்க்கின்றனர்.
தே.மு.தி.க என்பது தேசியமும் திராவிடமும் இணைந்த இயக்கம். இதுவரை தமிழக சட்டமன்றத்தில் மக்கள் பணியாற்றிய நமது கட்சி, முதல்முறையாகப் பொருளாளர் சுதீஷ் மூலம் இந்திய அளவில் நாடாளுமன்றத்தில் ஜனநாயகக் கடமையாற்ற உள்ளது.
ராஜ்ய சபா தேர்தல் நடவடிக்கைகள் முடிவடைந்த பிறகு, வரும் 16-ம் தேதி முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. அதனைத் தொடர்ந்து, சட்டமன்றத் தேர்தல் தொகுதிப் பங்கீடு குறித்துப் பேச கூட்டணிக் கட்சிகள் சார்பில் குழுக்கள் அமைக்கப்படும். தி.மு.க தலைமையிலான இந்தக் கூட்டணியில், முதல்வர் ஸ்டாலின் அறிவிக்கும் தேதியில் தே.மு.தி.க சார்பில் அமைக்கப்பட்ட குழு சென்று பேச்சுவார்த்தை நடத்தும். எந்தெந்த தொகுதிகள் யாருக்கு என்பதைப் பேசி இறுதி செய்து முதல்வர் முறைப்படி அறிவிப்பார்.
தே.மு.தி.க-வின் வாக்கு சதவீதம் குறித்து விமர்சிப்பவர்கள், தே.மு.தி.க யாரால் ஆரம்பிக்கப்பட்டது, அதன் கட்டமைப்பு என்ன என்பதைத் தெரிந்து பேச வேண்டும். காழ்புணர்ச்சியால் சொல்லப்படும் பொதுவான விமர்சனங்களுக்குப் பதில் சொல்ல வேண்டிய அவசியம் தே.மு.தி.க-வுக்கு இல்லை.
தி.மு.க.விடம் துணை முதல்வர் பதவி கேட்டதாக வெளியான தகவல் உண்மையல்ல. நாங்கள் இது வேண்டும், அது வேண்டும் என்று யாரிடமும் அடம் பிடித்தது கிடையாது. துணை முதல்வர் பதவி கேட்டதாக வெளியாகும் செய்திகள் பொய்யானவை. மற்ற கட்சிகள் தங்கள் உரிமையைக் கேட்பது போல, எங்களுக்கான உரிய இடத்தை நாங்கள் கேட்டிருக்கிறோம்.

அது நிச்சயமாக அமையும். விஜய பிரபாகரன் உள்ளிட்டோர் எந்தத் தொகுதியில் போட்டியிடுவார்கள் என்பது குறித்துத் தலைமைக் கழகம் உரிய நேரத்தில் அறிவிக்கும்.
கேப்டனின் ஆன்மா என்பது அவரது கடைக்கோடி தொண்டர்கள்தான். தே.மு.தி.க-வுக்குச் சம்பந்தமில்லாதவர்கள் கேப்டன் ஆன்மாவைப் பற்றிப் பேசுவது நகைப்புக்குரியது. சுதீஷ் கட்சியின் தொடக்கக் காலத்திலிருந்தே உழைத்து வருபவர். அவருக்குப் பதவி பெற அனைத்து தகுதியும் உரிமையும் உள்ளது.
தி.மு.க-வின் தேர்தல் அறிக்கை வந்த பிறகு, தே.மு.தி.க தனது கருத்துக்களை முன்வைக்கும். குறிப்பாகப் பெண்கள், குழந்தைகள், கல்வி மற்றும் மருத்துவத்திற்கு முக்கியத்துவம் அளிக்கப்படும். தொகுதி வாரியாக மக்களுக்குத் தேவையான கோரிக்கைகளை முதல்வர் ஸ்டாலினிடம் முன்னிறுத்தி நிறைவேற்றுவோம். இது தமிழகத்திற்கும் டெல்லிக்குமான தேர்தல் என்று முதல்வர் கூறுவதுபோல, இந்தியா கூட்டணிக்கும் என்.டி.ஏ கூட்டணிக்குமான இந்தப் போரில் தே.மு.தி.க மகத்தான வெற்றி பெற்று, திமுக கூட்டணி 200-க்கும் மேற்பட்ட தொகுதிகளைக் கைப்பற்றும்” என்றார்.
