துபாயில் சிக்கிய பயணியருக்கு இலவச தங்குமிடம் : நடிகர் சோனு சூட் ஏற்பாடு

புதுடில்லி: துபாயில் தங்க இடமின்றி சிக்கியுள்ள பயணியருக்கு, இலவச தங்குமிடம் வழங்குவதாக பாலிவுட் நடிகர் சோனு சூட் அறிவித்துள்ளார்.

மேற்காசிய நாடான ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகின்றன. பதிலுக்கு ஈரானும் அண்டை நாடுகளான ஐக்கிய அரபு எமிரேட்ஸ், கத்தார், சவுதி, பஹ்ரைன் உள்ளிட்ட நாடுகள் மீது ஏவுகணைகளை வீசி வருகிறது. இதனால், அப்பிராந்தியத்தில் பதற்றம் அதிகரித்துள்ளது. இந்த நாடுகளுக்கான விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.

ஐரோப்பிய நாடுகள் மற்றும் அமெரிக்கா செல்வதற்கான வழித்தடமாக துபாய் விமான நிலையம் உள்ளதால், அங்கு பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பயணியர் சிக்கியுள்ளனர்.இவ்வாறு சிக்கியுள்ள பயணியருக்கு, இலவசமாக தங்குமிடம் ஏற்பாடு செய்யப்படும் என்று பாலிவுட் நடிகர் சோனு சூட் அறிவித்துள்ளார்.

இது குறித்து சமூக வலைதளத்தில் அவர் வெளியிட்ட பதிவில், ‘போர் சூழ்நிலையால் துபாயில் பலர் தங்க இடமின்றி சிக்கியிருப்பதை அறிந்தேன். எந்த நாட்டைச் சேர்ந்தவராக இருந்தாலும் மனிதாபிமான அடிப்படையில் அவர்களுக்கு இலவசமாக தங்குமிடம் ஏற்பாடு செய்யப்படும்.

‘இந்த வசதி, ‘டுகாஸ்டா ப்ராப்பர்டீஸ்’ என்ற ரியல் எஸ்டேட் நிறுவனம் மூலம் ஏற்பாடு செய்யப்படுகிறது. பயணியர் தங்கள் நாட்டுக்கான விமான சேவைகள் துவங்கும் வரை அங்கு தங்கிக்கொள்ளலாம்’ என கூறியுள்ளார்.

இவர் கொரோனா காலக்கட்டத்திலும், இயற்கை பேரிடர் சமயங்களிலும் மக்களுக்கு உதவி பாராட்டை பெற்றவர்.

Source link