‘துரந்தர் 2’ படத்தில் மத உணர்வு சர்ச்சை; மன்னிப்பு கேட்ட மாதவன்

துரந்தர் பட வெற்றியைத் தொடர்ந்து அதே கூட்டணியில் அதன் இரண்டாம் பாகம் ‘துரந்தர் – தி ரிவெஞ்ச்’ என்ற பெயரில் கடந்த 19ஆம் தேதி வெளியாகியிருந்தது. ஆதித்யா தார் இயக்கிய இப்படத்தில் தெய்வத்திருமகள் பட புகழ் சாரா அர்ஜுன், சஞ்சய் தத், மாதவன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஜியோ ஸ்டுடியோஸ் மற்றும் பி62 ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்துள்ள இப்படத்திற்கு சஷ்வத் சச்தேவ் இசையமைத்துள்ளார். பான் இந்தியா படமாக தமிழ், இந்தி உள்ளிட்ட ஐந்தும் மொழிகளில் வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. வசூல் ரீதியாகவும் இதுவரை ரூ.700 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. 

இப்படத்திற்கு ஷங்கர், ராஜமௌலி, அல்லு அர்ஜூன் என ஏகப்பட்ட திரை பிரபலங்கள் பாராட்டியுள்ளனர். ஆனால் சமூக வலைதளங்களில் சில ரசிகர்கள் அரசியல் ரீதியாக முரண்பாடான கருத்துகள் இருப்பதாக பதிவிட்டு வருகின்றனர். நடிகை ரம்யா என்கிற திவ்யா ஸ்பந்தனாவும் படத்தை கடுமையாக கிண்டலடித்து விமர்சித்திருந்தார். தமிழ்நாட்டில் இப்படத்தை தடை செய்ய வேண்டும் என வழக்கறிஞர் ஷீலா என்பவர் சென்னை உயர்நீதி மன்றத்தில் முறையிட்டுள்ளார். ஏற்கனவே இப்படத்தில் பணமதிப்பிழப்பு நடவடிக்கை தொடர்பாக பிரதமர் மோடி பேசும் காட்சிகள் நேரடியாக இடம் பெற்றிருந்தது சர்ச்சையானது. இப்படி பாராட்டு சர்ச்சை என உருவாக்கி வரும் இப்படம் தற்போது மேலும் ஒரு சர்ச்சையை உருவாக்கியுள்ளது.

அதாவது மாதவன் ஒரு காட்சியில், கையில் சிகரெட்டுடன் சீக்கியர்களின் புனித நூலான ‘தசம் கிரந்த்’ புத்தகத்தை படிப்பது போன்று இடம் பெற்றிருந்தது. இது சீக்கியர்கள் மனதை புண்படுத்தியதாக புகார்கள் எழுந்தது. மகாராஷ்டிராவில் உள்ள சீக்கியர்கள் அமைப்பின் தலைவரும், சிவசேனாவின் (ஷிண்டே பிரிவு) உறுப்பினருமான குர்ஜோத் சிங் கீர், படத்தில் உள்ள ஒரு காட்சி சீக்கிய சமூகத்தின் மத உணர்வுகளைப் புண்படுத்துவதாகக் குற்றம் சாட்டினார். மேலும் இது அந்த சமூகத்திற்கு மன உளைச்சலை ஏற்படுத்தியதாக கூறினார். இதைத் தொடர்ந்து, அந்தக் காட்சி தொடர்பாக திரைப்படத் தயாரிப்பாளர்களுக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியானது. 

இந்த விவகாரம் குறித்து மாதவன் தற்போது விளக்கமளித்துள்ளார். அவர் வெளியிட்ட வீடியோவில், “படத்தில் வரும் ஒரு காட்சி சிலரை புண்படுத்தியதாக அறிந்தேன். அந்தக் காட்சியில், வசனங்களைப் பேசுவதற்கு முன், இயக்குநர் சிகரெட்டை அனைத்துவிடுமாறு கூறினார். நானும் அதுபோல் அனைத்துவிட்டேன். திரையிலும் அந்த புகை தெரியாது. சீக்கிய சமூகத்தினர் மீது எங்களுக்கு மிகுந்த மரியாதை உண்டு. உண்மையில், ஒவ்வொரு படம் வெளியாவதற்கு முன்பும், நான் தனிப்பட்ட முறையில் பொற்கோயிலுக்குச் செல்வேன். எனவே, தெரிந்தோ அல்லது தெரியாமலையோ யார் மனதாவது புண்பட்டிருந்தால், தயவுசெய்து எங்களை மன்னித்து விடுங்கள். எங்களின் நோக்கம் அதுவல்ல” என்றார். 



Source link