துாத்துக்குடி: “சட்டசபை தேர்தலில் போட்டியிடும் எண்ணம் ஒரு சதவீதம் கூட எனக்கு இல்லை,” என ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோ தெரிவித்தார்.
துாத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் அவர் அளித்த பேட்டி: தமிழகத்தில், பல ஆண்டுகளாகவே பாலியல் வன்கொடுமை, கொலை நடக்கிறது. இதுபோன்ற செயலில் ஈடுபடும் குற்றவாளிகள், ஆயுள் முழுதும் சிறையில் இருக்கும் வகையில், புதிய சட்டங்களை அரசு கொண்டு வர வேண்டும். துாத்துக்குடி மாவட்டம் வேடநத்தம் பிளஸ் 2 மாணவி கொலையை அரசியலாக்கி, தி.மு.க., மீது பழி சுமத்த சிலர் நினைக்கின்றனர்.
யார், யாருடன் கூட்டணி சேர்ந்தாலும் சரி; புதிதாக உருவான கட்சி, பா.ஜ.,- அ.தி.மு.க., கூட்டணிக்கு சென்றாலும் சரி; வரும் தேர்தலில் தி.மு.க., கூட்டணி தான் வெற்றி பெறும். வரும் சட்டசபை தேர்தலில் போட்டியிடும் எண்ணம், ஒரு சதவீதம் கூட, எனக்கு கிடையாது. இதை, ஏற்கெனவே கூறிவிட்டேன்; நான் போட்டியிடப்போவது இல்லை.
கூட்டணியில், தொகுதிகள் ஒதுக்கப்பட்ட பிறகு, ம.தி.மு.க., போட்டியிடும் தொகுதிகள் எவை என தெரிய வரும். ரஜினியிடம், தனியாக போய் கேட்டால், புதிதாத கட்சி ஆரம்பித்தவர்கள் பற்றி சொல்வார். அவர்களை பற்றி, அவர் என்ன சொன்னார் என்பது எனக்கு தெரியும். அதை நான் வெளியே சொல்ல விரும்பவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.
