துாத்துக்குடி: துாத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் தாலுகா, வேடநத்தம் கிராமத்தை சேர்ந்த பிளஸ் 2 மாணவி, மார்ச் 10ம் தேதி இரவு வீட்டை வெளியே சென்ற நிலையில், வீடு திரும்பவில்லை. பெற்றோர், உறவினர்கள் குளத்துார் போலீசில் புகார் அளித்தனர்.
இதற்கிடையே, வீட்டின் பின்புறம் உள்ள காட்டு பகுதியில் மாணவி கொலை செய்யப்பட்ட நிலையில், நேற்று முன்தினம் சடலமாக கிடந்தார். மாணவியின் உறவினர்கள், கிராம மக்கள், பல்வேறு அரசியல் கட்சியினர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
கொலையாளிகளை விரைந்து கைது செய்யவும், புகாரை பெறாமல் அலைக்கழித்த போலீசார் மீது நடவடிக்கை எடுக்கவும், அவர்கள் வலியுறுத்தினர்.
இதற்கிடையே, மாணவி மாயமான நிலையில், அவரது பெற்றோர் குளத்துார் போலீசில் புகார் அளிக்க சென்றபோது, அங்கிருந்தவர்கள் விளாத்திகுளம் மகளிர் ஸ்டேஷனுக்கு செல்லுமாறு கூறினர்.
அங்கு சென்ற மாணவியின் பெற்றோரிடம், இன்ஸ்பெக்டர் பிரவீனா அலட்சியமாக நடந்து கொண்டார். மாணவி குறித்து அவர் தவறாக பேசியதாக, பெற்றோர், உறவினர்கள் குற்றஞ்சாட்டினர்.
இந்நிலையில், இன்ஸ்பெக்டர் பிரவீனாவை சஸ்பெண்ட் செய்து, திருநெல்வேலி டி.ஐ.ஜி., சரவணன் நேற்று உத்தரவிட்டார். மாணவி கொலை தொடர்பாக ஆறு தனிப்படைகள் விசாரணை நடத்தி வருகிறது. சந்தேகத்தில், 20 பேரிடம் போலீசார் தனித்தனியே விசாரணை நடத்தினர். இருப்பினும், இதுவரை எந்த தகவலும் கிடைக்கவில்லை.
‘சிசிடிவி’ கேமரா இல்லாத நிலையில், அந்த பகுதியில் மது குடித்தோர், மாணவியின் உறவினர்கள், 17 வயது இளம் சிறார் ஆகியோரிடம் விசாரணை நடக்கிறது.
இதற்கிடையே, மாணவி கொலையை கண்டித்து துாத்துக்குடி — மதுரை தேசிய நெடுஞ்சாலையில் மக்கள், பல்வேறு அரசியல் கட்சியினர் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். திருநெல்வேலி சரக டி.ஜ.ஜி., சரவணன், கலெக்டர் இளம்பகவத் பேச்சு நடத்தினர்.
போராட்டத்தில் பங்கேற்ற மாணவியின் சகோதரி ஒருவர், திடீரென மயக்கமடைந்ததால், பரபரப்பு ஏற்பட்டது. மக்கள் மறியல் காரணமாக, துாத்துக்குடி- — மதுரை தேசிய நெடுஞ்சாலை போக்குவரத்து, மாற்று பாதையில் திருப்பி விடப்பட்டது.
இந்நிலையில், மாணவியின் பிரேத பரிசோதனை துாத்துக்குடி அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் நடந்தது. மாணவியின் கழுத்து பகுதியிலும், தலையின் பின்பகுதியிலும் தாக்கியதற்கான காயங்கள் இருந்துள்ளன. அவரது கண் மற்றும் உதடு பகுதியில் பலத்த காயம் இருந்துள்ளது.
மாணவி பலாத்காரம் செய்யப்பட்டாரா என்பதை கண்டறிய, திருநெல்வேலியில் உள்ள தடயவியல் பரிசோதனை கூடத்திற்கு சில மாதிரிகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. அந்த முடிவு வந்த பிறகே முழுமையான தகவல் தெரியவரும் என, போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
