துாத்துக்குடி: பிரச்சாரத்தின் போது, அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனின் வாகனத்தை மறித்து, பெண்கள் கேள்வி

துாத்துக்குடி: பிரச்சாரத்தின் போது, அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனின் வாகனத்தை மறித்து, பெண்கள் கேள்வி எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.

தமிழக மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், திருச்செந்துார் தொகுதியில் தொடர்ந்து, 7வது முறையாக போட்டியிடுகிறார். கடந்த, 2ம் தேதி வேட்புமனு தாக்கல் செய்த அவர், தொகுதியில் பல இடங்களுக்கு சென்று பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

மெஞ்ஞானபுரம் அருகே கல்விளை கிராமத்தில், அமைச்சர் தன் ஆதரவாளர்களுடன் பிரச்சார வாகனத்தில் சென்று, நேற்று ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்பகுதியை சேர்ந்த, 50க்கும் மேற்பட்ட பெண்கள், அவரது வாகனத்தை சூழ்ந்தனர்.

25 ஆண்டுகளில் எங்கள் பகுதிக்கு பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்று வாக்குறுதி அளித்துவிட்டு, தற்போது வரை எந்தவித வாக்குறுதியும் நிறைவேற்றி தரவில்லை என, கோஷமிட்டனர்.

அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் நின்ற வாகனத்தை மறித்து, அவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால், வாகனம் அங்கிருந்து வேகமாக கிளம்பி சென்றது.

பிரச்சார வாகனத்தின் பின்னால் சென்ற அவரது ஆதரவாளர்களையும், விடாமல் விரட்டி சென்ற பெண்கள், ஒருவரின் சட்டையை பிடித்து இழுத்து, ‘எங்களுக்கு பதில் சொல்லுங்கள்’ என, கேள்வி எழுப்பினர். அவர்களிடம், தி.மு.க., நிர்வாகி உமரி சங்கர் சமரச பேச்சு நடத்தினார்.

‘தேர்தல் முடிந்ததும் கல்விளையில் உள்ள கோவிலை நாங்கள் முழுமையாக கட்டித்தருவோம்’ என, அவர், உறுதி அளித்தார்.

அவரிடம், கையெடுத்து கும்பிட்ட பெண்கள் சிலர், ‘எங்கள் ஊர் கோவிலை நாங்களே கட்டிக் கொள்வோம்; நீங்கள் உங்கள் வேலையை பாருங்கள்’ என, கூறினர்.

உடனே, அமைச்சர் வாகனம் சென்று கொண்டிருந்த பகுதியை நோக்கி அங்கிருந்த தி.மு.க., நிர்வாகிகளும் வேகமாக சென்றனர்.

அமைச்சர் வாகனத்தை மறித்து பெண்கள் நடத்திய போராட்டத்தால், அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Source link