தூத்துக்குடி காவல் மரணம்.. திரைப்படத்தை பார்த்து கண்ணீர் வடிக்கும் ஆட்சியாளர்கள்: உதயநிதி ஸ்டாலின் வேதனை – udhayanidhi stalin has condemned the death of an undertrial prisoner in thoothukudi

தமிழ்நாட்டில் அடுத்தடுத்து நடக்கும் காவல் மரணங்கள் மிகப்பெரிய அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. சமீபத்தில் நாகர்கோவிலில் மாற்றுத்திறனாளி இளைஞரான சபரிவர்மன் என்பவர் நீதிமன்ற காவலில் இருந்த சமயத்தில், சிறைச்சாலையிலே உயிரிழந்த சம்பவம் மிகப்பெரிய அளவில் அதிர்ச்சிகளை கிளப்பி இருந்தது. இந்நிலையில் தூத்துக்குடியில் விசாரணை கைதியான இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் மிகப்பெரிய அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இச்சம்பவத்திற்கு எதிராக எதிர்க்கட்சிகள் கடுமையான கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். தூத்துக்குடி அமுதா நகர் பகுதியை சார்ந்த அருணாச்சலம் (26) என்ற இளைஞர் கடந்த 17ஆம் தேதி சட்ட விரோதமாக மதுபானம் விற்பனை செய்ததாக கைது செய்யப்பட்டிருக்கிறார். விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட அவர், உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பதாக குடும்பத்தினருக்கு போலீசார் தகவல் அளித்துள்ளனர்.

இந்நிலையில் இன்றைய தினம் அருணாச்சலம் உயிரிழந்துள்ளார். இதனையடுத்து அவருடைய உடலில் பலத்த காயங்கள் இருந்ததாக குற்றச்சாட்டுகளை அவரின் உறவினர்கள் முன்வைத்துள்ளனர். குறிப்பாக அருணாச்சலத்தின் தாயார் நாலு போலீஸ் அடிச்சு இருக்காங்க. என் பையன் இறப்புக்கு நீதி கிடைக்கும் வரை பையன் உடலை வாங்க மாட்டோம் என தெரிவித்துள்ளார். இதனையடுத்து அவருடைய உறவினர்களும், பொதுமக்களும் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் இச்சம்பவம் பரபரப்பினை கிளப்பியுள்ளது.

இதனிடையில் ருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த சமயத்தில் அருணாச்சலம் பேசியுள்ள வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி மிகப்பெரிய அளவில் கவனம் ஈர்த்து கொண்டிருக்கிறது. காவல்துறையினர் தன்னை தாக்கியதாக அவர் வாக்குமூலம் அளித்துள்ளார். இதனால் விசாரணை கைதி, காவலில் மரணம் அடைந்துள்ளதாக எதிர்க்கட்சிகள் தவெக அரசுக்கு எதிராக கடும் கண்டனங்கள் தெரிவித்து வருகின்றன.

திமுக துணை பொதுச்செயலாளர் கனிமொழி, அமமுக டிடிவி தினகரன், பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் என பலரும் அருணாச்சலம் உயிரிழப்புக்கு கண்டனங்களை பதிவு செய்துள்ளனர். இந்நிலையில் எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலில் தனது சமூக வலைத்தள பக்கத்தில் இச்சம்பவம் தொடர்பாக காட்டமான விமர்சனங்களை முன்வைத்து பகிர்ந்துள்ள பதிவு பெரியளவில் கவனம் ஈர்த்து வருகிறது. அதில் தூத்துக்குடியில் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட அருணாச்சலம் என்ற இளைஞர், காவலர்களின் தாக்குதலுக்கு ஆளாகி மரணமடைந்துள்ளதாக குற்றச்சாட்டினை முன்வைத்துள்ளார்.

இச்சம்பவம் வேதனை அளிப்பதாகவும் தெரிவித்துள்ள அவர், தனக்கு போலீஸ் இழைத்த அநீதியை தன்னுடைய இறுதி நிமிடங்களில் அருணாச்சலமே எடுத்து சொன்னதை பார்க்கும் போது நெஞ்சம் கலங்குகிறது என தெரிவித்துள்ளார். தொடர்ந்து அவருடைய பதிவில் காவல் மரணங்களின் போது துறைக்கு பொறுப்பு வகிக்கும் முதலமைச்சர் கடும் நடவடிக்கை எடுக்காமல் மெளனம் காக்கிறார். இதுவே இத்தகைய சம்பவங்கள் தொடர்ந்து கொண்டே இருப்பதற்கு காரணம் எனவும் விமர்சித்துள்ளார்.

மேலும் திரைப்படத்தைப் பார்த்துக் கண்ணீர் வடித்துக் கொண்டிருக்கும் இந்த ஆட்சியாளர்கள், மகனை இழந்து கண்ணீர் வடிக்கும் அருணாச்சலத்தின் குடும்பத்துக்கு என்ன பதில் வைத்து இருக்கிறார்கள்? என்ற கேள்வியையும் தன்னுடைய பதிவில் பதிவில் உதயநிதி ஸ்டாலின் முன்வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Source link