தூத்துக்குடி: தூத்துக்குடியில் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் முக்கிய குற்றவாளியான தர்ம முனீஸ்வரன் கைது செய்யப்பட்டது குறித்து எஸ்பி மதன் விளக்கம் அளித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது: தூத்துக்குடி மாணவி கொலை வழக்கு போக்சோ வழக்கு என்பதால், சில தகவல் மட்டுமே தர முடியும். குற்றப்பின்னணி கொண்டவர்களின் தகவல்களை முழுமையாக ஆய்வு செய்தோம்.
சம்பவ இடத்தில் சிசிடிவி கேமரா இல்லாத காரணத்தினால், சுற்றுப்பகுதிகளில் உள்ள சிசிடிவி கேமராக்கள் ஆய்வு செய்யப்பட்டன. 98 சிசிடிவிக்கள் ஆய்வு செய்யப்பட்டன. 2,624 மொபைல் எண் மற்றும் 461 குற்றவாளிபட்டியல் தயாரிக்கப்பட்டு விசாரணை நடத்தினோம். சம்பந்தப்பட்ட கிராமத்தில் மட்டும் சுமார் 800 ஆண்களிடம் விசாரணை நடத்தினோம்.
சமூக வலைதளங்களில், பத்திரிகை, பேனர்களில் பாதிக்கப்பட்ட சிறுமியின் புகைப்படத்தை பயன்படுத்துகின்றனர். இது தொடர்பாக 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இனிமேல் அந்த சிறுமியின் புகைப்படத்தை வெளியிடுபவர்கள் மீது போக்சோ வழக்குப்பதிவு செய்யப்படும். கிராமங்களில் அதிக சிசிடிவி கேமரா பொருத்தப்பட உள்ளது. ஒவ்வொரு கிராமத்திலும் பெண் போலீசை நியமித்து பெண்களுக்கு பாதுகாப்பு அளிப்பதற்கான சூழ்நிலையை ஏற்படுத்த முயற்சி செய்வோம்.
உரிய சாட்சிகள் இல்லாத காரணத்தினால் உடனே கைது செய்ய முடியவில்லை. ரத்த மாதிரி எடுத்து டிஎன்ஏ பரிசோதனைக்கு அனுப்பி உள்ளோம்.கைதானவருக்கு அரசியல் பின்புலம் இல்லை. எந்த அழுத்தத்திலும் குற்றவாளி கைது செய்யப்படவில்லை. கைதானவர் மீது ஏற்கனவே பல வழக்குகள் உள்ளன. வேறு வழக்கில் தொடர்பு உள்ளதா என விசாரணை நடத்தி வருகிறோம்.
வழக்கு புலன் விசாரணையில் இருக்கிறது. இன்று கைது செய்யப்பட்டுள்ளார். விசாரணையை துரிதபடுத்தி உச்சபட்ச தண்டனை பெற்று தருவதே சரியாக இருக்கும். நேரடியாக வாக்குமூலம் மட்டும் அல்லாமல், சிசிடிவி, மொபைல்போன் அழைப்புகள் மற்றும் சூழ்நிலை சாட்சிகள் மூலம் குற்றவாளியை கைது செய்துள்ளோம். சரியான சாட்சி இல்லாமல், ஆதாரம் இல்லாமல் கைது செய்யவில்லை. குறிப்பிட்டு சொல்ல முடியாது.
விசாரணையில் உள்ளது. இத்தனை நாட்கள் பிறகு அறிவியல்பூர்வமான விசாரணை செய்து ஆதாரம் சேர்த்துள்ளோம். உயர்நீதிமன்றம் விசாரணையை கண்காணித்து வருகிறது. மனு தாக்கல் செய்துள்ளோம். இன்னும் தாக்கல் செய்ய உள்ளோம். குற்றவாளியின் ரத்த மாதிரியை எடுத்து டிஎன்ஏ பரிசோதனைக்கு அனுப்ப ப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் 5 பேர் மீது சந்தேகப்பட்டும், கைது செய்யப்படவில்லை. போதுமான சாட்சி இருந்ததால் தான் குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளான். என்ன சாட்சி, ஆதாரம் என்பதை பொதுவாக சொல்ல முடியுமே தவிர அதனை வெளிப்படையாக சொல்ல முடியாது. தூத்துக்குடியில் 1500 சரித்திர பதிவேடு குற்றவாளிகள் உள்ளனர் அனைவரும் கண்காணிக்கப்படுகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.
