ஹைதராபாத்: அரசு ஊழியர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதியத்திற்கு மட்டும், தெலங்கானா அரசின் செலவு மாதந்தோறும் ரூ.6000 கோடியாக அதிகரித்துள்ளது. இது கடந்த 10 ஆண்டுகளில் 4 மடங்கு அதிகமாகும்.
கடந்த 2014ம் ஆண்டு உருவான தெலங்கானா மாநிலத்தின் சம்பளம் மற்றும் ஓய்வூதியச் செலவுகளுடன், தற்போதைய செலவை ஒப்பிடும் போது, 4 மடங்கு அதிகரித்துள்ளதாக மூத்த அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தற்போது சம்பளம் மற்றும் ஓய்வூதியத்திற்காக மட்டும் மாதம் ரூ.6000 கோடியை தெலங்கானா அரசு செலவிடுகிறது.
அதிக ஊதியம் பெறும் பணியாளர்களாக மின்சாரத் துறையின் தலைமைப் பொறியாளர்கள் மாதம் ரூ.7 லட்சம் வரை ஊதியம் பெறுகின்றனர். ஹைதராபாத் மாநகராட்சியில் நீண்ட காலப் பணியில் இருக்கும் மூத்த தூய்மைப் பணியாளர்கள் மாதம் ரூ.2 லட்சம் வரை சம்பளம் வாங்குகின்றனர். அதேபோல, ஹைதராபாத் மாநகராட்சியில் முறைப்படுத்தப்பட்ட தூய்மைப் பணியாளர்களின் சராசரி ஊதியம் ரூ.70,000 ஆக உள்ளது.
குரூப் 1 மூத்த அதிகாரிகள் ரூ.80 ஆயிரம் முதல் ரூ.1.50 லட்சம் வரையிலும், குரூப் 2 நடுத்தர நிலை அதிகாரிகள் ரூ.60 ஆயிரம் முதல் ரூ.1.20 லட்சம் வரையிலும் சம்பளம் பெறுகின்றனர். குரூப் 3 தொழில்நுட்பம் மற்றும் கிளார்க்குகள் ரூ.45 ஆயிரம் முதல் ரூ.1 லட்சம் வரையிலும், குரூப் 4 உதவிப் பணியாளர்கள் ரூ.35 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரை ஊதியம் வாங்குகின்றனர்.
சிஏஜி அறிக்கையின்படி, 2023-24 நிதியாண்டில் மாநில வருவாயில் 45 சதவிதத் தொகை, சம்பளம், ஓய்வூதியம் மற்றும் கடன் வட்டி செலுத்துவதற்கே செலவிடப்பட்டுள்ளது.
தெலங்கானாவில் தற்போது ரேவந்த் ரெட்டி தலைமையிலான காங்கிரஸ் அரசு செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
