கொல்கட்டா: வெஸ்ட் இண்டீஸ், தென் ஆப்ரிக்க அணி வீரர்கள் நாடு திரும்ப ஐ.சி.சி., சார்பில் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டது.
இந்தியாவில் நடந்த ‘டி-20’ உலக கோப்பை தொடரில் அரையிறுதியுடன் திரும்பியது தென் ஆப்ரிக்கா. வெஸ்ட் இண்டீஸ் அணி ‘சூப்பர்-8’ சுற்றுடன் வெளியேறியது. ஆனால் திடீரென ஏற்பட்ட போர் காரணமாக, உலகின் மிகவும் ‘பிஸியான’ துபாய் விமான நிலையம் மூடப்பட்டது. இதனால் இரு அணி வீரர்களும் நாடு திரும்ப முடியாமல் தவிக்கின்றனர்.
இவர்களுக்காக தனி விமானம் ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால் கடைசி நேரத்தில் நிர்வாக காரணங்களால், நேற்று மாலை, இது ரத்து செய்யப்பட்டது. தற்போது பல்வேறு வெவ்வேறு விமானத்தில் இரு அணி வீரர்களும் செல்லும் வகையில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) ஏற்பாடு செய்துள்ளது.
இதுகுறித்து ஐ.சி.சி., தரப்பில் வெளியான செய்தியில்,”வெஸ்ட் இண்டீஸ், தென் ஆப்ரிக்க அணியினர் அனைவரையும் ஒரே விமானத்தில் அனுப்ப முடியாது. இதனால் வீரர்கள் சார்பில், ஐ.சி.சி., டிக்கெட் முன்பதிவுகளை செய்து வருகிறது. ஐ.சி.சி., தலைவர் ஜெய் ஷா, தனிப்பட்ட முறையில் பேசி, ‘அனைவரும் பாதுகாப்பாக வீடு திரும்ப, தேவையான ஏற்பாடுகள் செய்யப்படும்,’ என உறுதி தெரிவித்துள்ளார்,’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெஸ்ட் இண்டீஸ் பயிற்சியாளர் டேரன் சமி, கடந்த 9ம் தேதி இந்தியாவில் இருந்து கிளம்பி, வீடு திரும்பினார்.
