புதுடில்லி: ‘டி-20’ உலக கோப்பை லீக் போட்டியில் அசத்திய தென் ஆப்ரிக்க அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் எமிரேட்சை வீழ்த்தியது.
டில்லி, அருண் ஜெட்லி மைதானத்தில் நடந்த ‘டி-20’ உலக கோப்பை தொடருக்கான ‘டி’ பிரிவு லீக் போட்டியில் தென் ஆப்ரிக்கா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (யு.ஏ.இ.,) அணிகள் மோதின. ‘டாஸ்’ வென்ற தென் ஆப்ரிக்க கேப்டன் மார்க்ரம் ‘பீல்டிங்’ தேர்வு செய்தார்.
பாஷ் அசத்தல்: எமிரேட்ஸ் அணிக்கு ஆர்யன்ஷ் சர்மா (13) சுமாரான துவக்கம் தந்தார். ரபாடா வீசிய 3வது ஓவரில் ‘ஹாட்ரிக்’ பவுண்டரி அடித்த கேப்டன் முகமது வாசீம் (22) ஆறுதல் தந்தார். சோயிப் கான் (6), சையது ஹைதர் (6) ஏமாற்றினர். நோர்க்கியா வீசிய 8 வது ஓவரில் ஒரு பவுண்டரி, ஒரு சிக்சர் விளாசிய அலிஷன் ஷரபு (45) ஓரளவு கைகொடுத்தார். முகமது அர்பான் (11) நிலைக்கவில்லை.
எமிரேட்ஸ் அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 122 ரன் எடுத்தது. தென் ஆப்ரிக்கா சார்பில் கார்பின் பாஷ் 3, நோர்க்கியா 2 விக்கெட் கைப்பற்றினர்.
பிரவிஸ் அபாரம்: சுலப இலக்கை விரட்டிய தென் ஆப்ரிக்க அணிக்கு குயின்டன் டி காக் (14) சோபிக்கவில்லை. ஹைதர் அலி வீசிய 3வது ஓவரில், 3 பவுண்டரி, ஒரு சிக்சர் விளாசிய கேப்டன் மார்க்ரம் (28 ரன், 1×6, 5×4) நம்பிக்கை தந்தார். அபாரமாக ஆடிய ரியான் ரிக்கிள்டன் (30 ரன், 2×6. 3×4), டிவால்டு பிரவிஸ் (36 ரன், 3×6, 1×4) கைகொடுத்தனர்.
தென் ஆப்ரிக்க அணி 13.2 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 123 ரன் எடுத்து, தொடர்ச்சியாக 4வது வெற்றியை பதிவு செய்தது. டிரிஸ்டன் ஸ்டப்ஸ் (6), ஜேசன் ஸ்மித் (3) அவுட்டாகாமல் இருந்தனர். ஆட்ட நாயகன் விருதை தென் ஆப்ரிக்காவின் கார்பின் பாஷ் வென்றார்.
