தெய்வ சக்தி கொண்ட அதிமுகவைஅழிக்க நினைப்பவர் அழிந்து போவர் : நாகை பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சு

– நமது நிருபர் –

”கொல்லர் பட்டறையில் பழுக்க காய்ச்சி, அடித்து அடித்து உறுதியடைந்த இரும்பை போல, அடி வாங்க அடி வாங்க வலிமையான இயக்கமாக அதிமுக மாறியுள்ளது,” என, அதிமுக பொதுச்செயலர் இபிஎஸ் கூறினார்.

நாகப்பட்டினத்தில் அதிமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்த அவர் பேசியதாவது: முதல்வர் ஸ்டாலின் தனது பிரசாரங்களில், மக்களை பற்றி பேசாமல் என்னை அவதுாறாக பேசி வருகிறார். ‘சாக்கடைக்கு சமமான வார்த்தைகளை இபிஎஸ் பேசுகிறார்’ என ஸ்டாலின் கூறியுள்ளார்; உண்மையில் சாக்கடையில் இருப்பதே அவர்கள்தான்.

எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் மக்களை தான் வாரிசாக பார்த்தனர். ஆனாலும், திமுகவில் கருணாநிதி குடும்பத்தினர் தவிர, மற்றவர்கள் யாரும் கட்சியிலும் ஆட்சியிலும் உயர்பதவிக்கு வர முடியாது. ஆனால், அதிமுகவில் சாதாரண தொண்டரும் பொதுச்செயலராக முடியும்; முதல்வராக முடியும். அதற்கு நானே உதாரணம்.

தமிழகத்தில் வலிமையான சக்தியாக அதிமுக திகழ்கிறது. எம்ஜிஆர் மறைந்தவுடன், அதிமுக காணாமல் போய் விடும் என்றனர். ஆனால், ஜெயலலிதா கட்சியை நிலைநிறுத்தினார். அவரின் மறைவுக்குப் பின், அதிமுகவை ஒழிக்க ஸ்டாலின் சதி செய்தார். அதையெல்லாம் மக்கள் துணையுடன் முறியடித்துள்ளோம்.

கொல்லர் தன் பட்டறையில் இரும்பை பழுக்க காய்ச்சி, அடித்து அடித்து உறுதிபடுத்துவார். அதுபோல அடி வாங்க அடி வாங்க, அதிமுக வலிமையான இயக்கமாக மாறியுள்ளது. தெய்வ சக்தி கொண்ட அதிமுகவை அழிக்க நினைப்பவர்கள் அழிந்து போவர். புதுப்பொலிவுடன் தேர்தலை சந்திக்கிறோம்.

அதிமுக கூட்டணிக்கு கொள்கை இல்லை என்கிறார் ஸ்டாலின். கேரளத்தில் காங்கிரசும், கம்யூனிஸ்ட் கட்சிகளும் எதிர்த்து போட்டியிடுகின்றன. ஆனால், தமிழகத்தில் ஒரே கூட்டணியில் உள்ளனர். புதுச்சேரியில் திமுகவை எதிர்த்து, காங்கிரஸ் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது; இதுதான் கொள்கை கூட்டணியா?

ஸ்டாலின் துணை முதல்வராக இருந்தபோது தான், ‘மீத்தேன்’ எடுக்க ஒப்பந்தம் போடப்பட்டது. ஆனால், அதிமுக ஆட்சியில் காவிரி டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்தோம். தமிழகத்திற்கு துரோகம் செய்யும் தி.மு.க.,வை தோற்கடிக்க வேண்டும்.இவ்வாறு இபிஎஸ்பேசினார்.

Source link