தெலுங்கானா மாநிலத்தில் 130 நக்சல்கள் சரண்

ஹைதராபாத்: நக்சல் அமைப்பை ஒழிக்க, இந்த மாதம் 31ம் தேதி இறுதிகெடு மத்திய அரசு விதித்து உள்ள நிலையில், தெலுங்கானாவில் அம்மாநில முதல்வர் முன்னி லையில், 130 நக்சல்கள் சரணடைந்தனர்.

தெலுங்கானா, ஒடிஷா, சத்தீஸ்கர் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் நக்சல் ஆதிக்கம் இருந்தன.

இது, நம் நாட்டின் வளர்ச்சிக்கு பெரும் முட்டுக்கட்டையாக இருக்கும் என்பதால், நக்சல் அமைப்பை வரும் 31ம் தேதிக்குள் முற்றிலும் ஒழிக்க மத்திய அரசு கெடு விதித்துள்ளது.

இதேபோல் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பும் நக்சல்களுக்கு நிதியுதவி உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளை மத்திய – மாநில அரசு கள் வழங்கி வருகின்றன.

இந்நிலையில் தெலுங்கானாவில், அம்மாநில முதல்வர் ரேவந்த் ரெட்டி முன்னிலையில் 130 நக்சல்கள் நேற்று சரணடைந்தனர்.

இதில், 125 பேர் சத்தீஸ்கரை சேர்ந்தவர்கள், தெலுங்கானாவைச் சேர்ந்த நான்கு பேர் மற்றும் ஆந்திராவைச் சேர்ந்த ஒருவரும் அடங்குவர்.

அவர்கள், தங்களிடம் இருந்த, 124 துப்பாக்கிகள், 5,200க்கும் மேற்பட்ட வெடிபொருட்கள் உள்ளிட்டவற்றை போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

இதுகுறித்து மாநில டி.ஜி.பி., ஷிவாதார் ரெட்டி கூறுகையில், “தெலுங்கானா மாவோயிஸ்ட் கமிட்டி முற்றி லும் ஒழிக்கப்பட்டுள்ளது. ஏராளமான நக்சல்கள், ஆயுதங்களுடன் தற்போது சரணடைந்து உள்ளனர். இது, நக்சல்கள் பலவீனமடைந்து வருவதையே காட்டுகிறது.

“இந்த பிராந்தியத்தில் நக்சல்களின் செயல்பாட்டிற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு உள்ளது. சரணடைந்த நக்சல்கள் அனைவரும், மக்கள் விடுதலை கொரில்லா ராணுவத்தைச் சேர்ந்தவர்கள்,” என்றார்.

இதற்கிடையே முதல்வர் ரேவந்த் ரெட்டி வெளியிட்ட அறிக்கையில், ‘சரணடைந்த நக்சல்களுக்கு நிதியுதவியாக, 4.18 கோடி ரூபாய் பகிர்ந்து அளிக்கப்படும்.

‘இவர்களுக்கு அளிக்கப்படும் நிதியுதவி தொகையை, அதிகரிக்கும்படி, மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது’ என, குறிப்பிடப்பட்டுள்ளது.

Source link