'தேங்க்ஸ்' டி.கே அண்ணா: ஜிதேஷ் சர்மா

பெங்களூரு: சிறந்த ‘பினிஷராக’ ஜொலிக்கிறார் பெங்களூரு அணியின் ‘கீப்பர்-பேட்டர்’ ஜிதேஷ் சர்மா. 2025ல் கோப்பை வெல்ல கைகொடுத்தார். இம்முறை சாதிக்க காத்திருக்கிறார். இவர் கூறுகையில்,”இந்த ஆண்டு துவக்கத்தில் எனது தந்தை காலமானார். இதனால் மனம் உடைந்து போயிருந்தேன். அப்போது அணியின் பேட்டிங் பயிற்சியாளரும் ஆலோசகருமான தினேஷ் கார்த்திக் அண்ணா (சுருக்கமாக டி.கே) உதவினார். சிறிய ‘பிரேக்’ எடுக்கும்படி அறிவுறுத்தினார். ‘பேட்’, ‘கிளவ்சை’ ஓரமாக வைத்துவிட்டு குடும்பம், நண்பர்களுடன் சில நாள் செலவிட்டேன். மீண்டும் சின்னசாமி மைதானத்தில் புத்துணர்ச்சியுடன் களமிறங்கினேன். எனது வளர்ச்சியில் டி.கே அண்ணா முக்கிய பங்கு வகிக்கிறார்,” என்றார்.

இது தேவையா அபிஷேக்

கொல்கட்டா: ஈடன் கார்டன் மைதானத்தில் நடந்த லீக் போட்டியில் கொல்கட்டாவின் முசரபானி பந்தை (8.4) துாக்கி அடித்தார் ஐதராபாத்தின் அபிஷேக் சர்மா. எல்லையில் வருண் சக்ரவர்த்தி ‘டைவ்’ அடித்து தாழ்வாக பிடித்தார். இந்த ‘கேட்ச்’ பற்றி சந்தேகம் எழுந்தது. ‘டிவி’ அம்பயர் நிதின் மேனன் பல முறை ஆய்வு செய்தார். இறுதியில் ‘அவுட்’ என அறிவித்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அபிஷேக் (21 பந்தில் 48 ரன்) கோபமாக வெளியேறினார். கிரிக்கெட் லீக் நடத்தை விதிமுறையை மீறிய இவருக்கு, ஒரு தகுதி இழப்பு புள்ளி, போட்டி சம்பளத்தில் இருந்து 25 சதவீதம் அபராதமாக விதிக்கப்பட்டது.

பொறாமையா இருக்குமோ

கொல்கட்டா: ரஹானே மந்தமாக ஆடுவதாக சர்ச்சை எழுந்துள்ளது. மும்பைக்கு எதிராக 40 பந்தில் 67 ரன் (ஸ்டிரைக் ரேட் 167.50) எடுத்தார். நேற்று முன் தினம் ஐதராபாத்திற்கு எதிராக, துவக்க வீரராக, 8 பந்தில் 10 ரன் (ஸ்டிரைக் ரேட் 80.00) தான் எடுத்தார். இரு போட்டிகளிலும் கொல்கட்டா தோற்றதால், கேப்டன் ரஹானே ஆட்டம் பற்றி விமர்சிக்கப்படுகிறது. 2023ல் இருந்து கிரிக்கெட் லீக் தொடரில் ‘பவர் பிளே’யில் (முதல் 6 ஓவரில்) அதிக ‘ஸ்டிரைக் ரேட்’ வைத்துள்ள இந்திய வீரர்களில் (குறைந்தது 250 பந்து சந்தித்தவர்) அபிஷேக் சர்மாவுக்கு (176.56)) அடுத்து ரஹானே (167.78) உள்ளார்.

ரஹானே கூறுகையில்,”கிரிக்கெட் லீக் தொடரில் 2023ல் இருந்து எனது ‘ஸ்டிரைக் ரேட்’ சிறப்பாகவே உள்ளது. எனது ஆட்டத்தை பார்க்க விரும்பாதவர்கள், உள்நோக்கத்துடன் விமர்சிக்கின்றனர். கிரிக்கெட் அரங்கில் எனது வெற்றியை பார்த்து பொறாமைப்படுகின்றனர்,”என்றார்.

Source link