தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளிலும் வரும் ஏப்ரல் 23ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. தேர்தல் வர இன்னும் சில நாட்களே உள்ளதால் அரசியல் கட்சித் தலைவர்கள், வாக்குறுதிகளை மக்களிடம் தெரிவித்தும், மற்ற கட்சிகளை விமர்சித்தும் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். இதனால் தமிழ்நாடு முழுவதும் தேர்தல் களம் சூடு பிடித்திருக்கிறது.
இந்த தேர்தலில், புதிதாக களமிறங்கிருக்கும் தவெக தலைவர் விஜய் பல்வேறு இடங்களுக்குச் சென்று தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார். அந்த வகையில் இன்று (12-04-26) கன்னியாகுமரியில் தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். இதற்காக சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் தூத்துக்குடி விமான நிலையத்துக்கு வந்த விஜய், அங்கிருந்து சாலை மார்க்கமாக பரப்புரை வாகனத்தில் பரப்புரை நடக்கும் இடமாம மகாதானபுரத்திற்கு வந்து பிரச்சாரம் மேற்கொண்டார்.
அதில் அவர் தேர்தலுக்கான வாக்குறுதிகளை அளித்தார். தமிழ்நாட்டில் ஏ.ஐ. பல்கலைக்கழகம், லஞ்சாம் இல்லாமல் வீட்டு வாசலுக்கே அரசாங்கத்தின் நலத்திட்டங்கள், தமிழ்நாடு சேவை உரிமைச் சட்டம், வெற்றி தமிழ்நாடு சூப்பர் ஆப் உருவாக்கப்படும், mytamiltamilnadu.in என்ற இணையத்தளத்தை உருவாக்கி அரசின் பங்களார்களாக பொதுமக்கள் இருப்பார்கள், அதிக வரி இல்லாமல் வருவாயை உயர்த்துவோம் உள்ளிட்ட பல வாக்குறுதிகளை வழங்கினார். அங்கு பிரச்சாரத்தை முடித்து தனது பரப்புரை வாகனத்தில் தூத்துக்குடி விமான நிலையத்தை நோக்கிச் சென்றார்.
அப்போது விஜய், திடீரென பரப்புரை வாகனத்தில் இருந்து இறங்கி, தேசிய நெடுஞ்சாலையில் சைக்கிள் ஓட்டினார். விஜய்யை கண்டதும் நெடுஞ்சாலையில் தொண்டர்கள் ஏராளமானோர் குவிந்தனர். விஜய் சைக்கிள் ஓட்டியபடி தொண்டர்களுக்கு கையசைத்து சென்று கொண்டிருந்தார். இதில் சில தொண்டர்கள் அவரை பின் தொடர்ந்து ஓடி வந்தனர். ஏராளமான தொண்டர்கள் அங்கு குவிந்ததால் சைக்கிள் ஓட்டுவதை விட்டுவிட்டு உடனடியாக மீண்டும் பரப்புரை வாகனத்தில் ஏறி விஜய் பயணித்தார்.
