படக்குறிப்பு, காவல்துறையினரால் பிடிக்கப்பட்ட 2 கைதிகள்பிரசுரிக்கப்பட்டது 27 அக்டோபர் 2026, 01:22 GMT
புதுப்பிக்கப்பட்டது 23 நிமிடங்களுக்கு முன்னர்
வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்
(இந்தப் பக்கம் தொடர்ந்து புதுப்பிக்கப்படுகிறது)
தேனி சிறையிலிருந்து நேற்று இரவு 17 கைதிகள் தப்பியோடிய நிலையில், இதுவரை 5 பேர் பிடிக்கப்பட்டுள்ளனர்.
தப்பியோடிய கைதிகளைத் தேடிப் பிடிக்க காவல்துறையினர் தீவிர வாகனச் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். மேலும் தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
தப்பியோடிய கைதிகளில் நால்வர் தேடுதல் நடவடிக்கையின்போது காவல்துறையினரால் பிடிக்கப்பட்டுள்ளதாக தென் மண்டல காவல்துறை ஐஜி விஜயேந்திர பிடாரி தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில் இன்று பிற்பகல் மேலும் ஒரு கைதி பிடிபட்டுள்ளார்.
”தப்பியோடிய கைதிகளைப் பிடிக்கத் தமிழ்நாடு காவல்துறையின் 17 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. தமிழ்நாடு – கேரள எல்லையில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கேரளக் காவல்துறையின் மூத்த அதிகாரிகளுடன் நெருங்கிய ஒருங்கிணைப்பில் செயல்பட்டு வருகிறோம். கேரளக் காவல்துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு, அவர்களும் தேடுதல் மற்றும் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடுகின்றனர்” என விஜயேந்திர பிடாரி கூறியுள்ளார்.
சிறை வளாகம் சுற்றியுள்ள கிராமங்களில் டிரோன் மூலம் பறக்கவிட்டு தப்பி ஓடிய கைதிகளை தேடும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
ஷார்ட் வீடியோPlay video, “தேனி சிறைக்காவலர்களை தாக்கி 17 கைதிகள் தப்பியோட்டம் – 4 பேர் கைது”, கால அளவு 1,2401:24
கைதிகள் தப்பியது எப்படி? சிறைத்துறை விளக்கம்
இதுதொடர்பாக சிறைத்துறை சார்பில் செய்திக்குறிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி,”கடந்த 2019-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட தேனி மாவட்டச் சிறையில், 200 கைதிகளை அடைக்கும் வசதி உள்ளது. கடந்த 26-ஆம் தேதி சிறையில் மொத்தம் 334 கைதிகள் அடைக்கப்பட்டிருந்தனர். நேற்று இரவு சுமார் 10 மணியளவில், மூன்றாவது பிளாக்கில் இருந்த கைதி ஒருவருக்கு வலிப்பு ஏற்பட்டதாகக் கூறி மற்ற கைதிகள் கூச்சலிட்டனர்.
இதையடுத்து, அங்கு சென்ற இரண்டாம் நிலைக் காவலர் ஸ்டாலின் பிரபுவை கைதிகள் தாக்கி நிலைகுலையச் செய்து சிறையில் இருந்து தப்பிச் செல்ல முயன்றனர். அவர்களின் முயற்சியை பிரதான நுழைவாயிலில் பாதுகாப்புப் பணியில் இருந்த காவலர்கள் தடுத்து நிறுத்தினர். இருப்பினும் கைதிகள் காவலர்களை தாக்கி சாவிகளைப் பறித்து பிரதான நழைவாயிலைத் திறந்து கொண்டு தப்பிச் சென்றனர்.”
இந்நிகழ்வில் 17 கைதிகள் தப்பிச் சென்றதாகவும், இதுகுறித்து வழக்குப் பதிவு செய்யப்பட்டு, விசாரணை நடைபெற்று வருவதாகவும் அந்த செய்திக்குறிப்பு கூறுகிறது. பணியில் கவனக்குறைவாக இருந்ததாகக் கூறி, தேனி மாவட்டச் சிறையைச் சேர்ந்த 9 சிறைப் பணியாளர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு சிறைத்துறை டிஜிபி நேரில் ஆய்வு
தமிழ்நாடு சிறைத்துறை டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர், தேக்கம்பட்டியில் உள்ள மாவட்டச் சிறைச்சாலையில் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
கைதிகள் தப்பிச் சென்றதற்கு ‘மனிதத் தவறே’ காரணம் என்று சிறைத்துறை டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர் தெரிவித்துள்ளார்.
”17 கைதிகள் தப்பிச் சென்ற சம்பவத்தில், பணியில் இருந்த 9 சிறைத்துறை ஊழியர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். கைதிகள் தப்பிச் செல்ல வழிவகுத்த சூழல்கள் குறித்து விரிவான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது” என அவர் கூறியுள்ளார்.

தப்பிய கைதி ஆட்டோவில் மீண்டும் சிறைக்கு வந்தது எப்படி?
தேனி மாவட்ட சிறையில் இருந்து தப்பியோடிய கைதிகளில் ஐந்தாவது நபரான லிங்க பிரசாத் என்பவர் இன்று பிற்பகல் பிடிபட்டுள்ளார்.
சிறையில் இருந்து நேற்று இரவு தப்பிய லிங்கபிரசாத், கண்டமனூர் செல்லும் சாலையில் தனது ஆட்டோவில் ஏறியதாக சின்னக்காளை என்பவர் ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.
அவர் அளித்துள்ள பேட்டியில், “ஆட்டோவில் ஒரு வயதான பெண்மணி அமர்ந்திருந்தார். கண்டமனூர் சாலை வழியாக சென்றபோது ஒருவர் கை காட்டி ஆட்டோவில் ஏறினார். கானாவிலக்கு அரசு ஆஸ்பத்திரி முன்பாக இறக்கிவிடுமாறு கூறினார்” எனத் தெரிவித்துள்ளார்.
அப்போது தன்னிடம், ‘300 ரூபாய் பணம் இருந்தால் கொடுங்கள். செல்போனில் போட்டுவிடுகிறேன்’ என அந்த நபர் கூறியதாகக் குறிப்பிட்ட சின்னக்காளை, ஆட்டோவுக்கு எரிபொருள் நிரப்பிவிட்டதால் பணம் இல்லை எனக் கூறிவிட்டேன்” என்கிறார்.
அப்போது, ஆட்டோவைச் சோதனை செய்வதற்காகக் காவலர் ஒருவர் வழிமறித்துள்ளார். ஆட்டோவில் இருந்தவர் தப்பியோடிய கைதி என்பது தெரியவந்ததும், அதே ஆட்டோவில் அவரைச் சிறைக்குக் காவலர் அழைத்துச் சென்றார். பின்னர், அவர் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார்.
விசாரணைக் கைதியான லிங்க பிரசாத் மீது பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும், அவர் மாற்றுத்திறனாளி என்றும் ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.
என்ன நடந்தது?
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே தேக்கம்பட்டியில் மாவட்ட சிறைச்சாலை அமைந்துள்ளது. இதில் தேனி, திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட பல மாவட்டங்களைச் சேர்ந்த சிறை கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் நேற்று (அக்டோபர் 26-ஆம் தேதி) இரவு தேக்கம்பட்டி சிறையில் உள்ள 17 கைதிகள் சிறையில் இருந்து தப்பித்துள்ளனர் என காவல்துறை கூறியுள்ளது.
தொடர்ந்து தேக்கம்பட்டி சிறையில் தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரவீன் கௌதம் ஆய்வு மேற்கொண்டார். தென் மண்டல ஐஜி விஜயேந்திர பிடாரி சிறை வளாகத்தில் ஆய்வு செய்தார்.
போலீசார் நடத்திய விசாரணையில் கைதிகள் சிறை அதிகாரிகளை தாக்கிவிட்டு தப்பியோடியது தெரியவந்துள்ளது.

கைதிகள் தப்பிய சம்பவம் தொடர்பாகச் செய்தியாளர்களிடம் பேசிய தென் மண்டல காவல்துறைத் தலைவர் விஜயேந்திர பிடாரி, உடல்நிலை சரியில்லை என நாடகமாடி கைதிகள் தப்பித்து சென்றதாக கூறினார்.
கைதிகள் 17 பேரும் ஒரே சிறை செல்லில் அடைக்கப்பட்டிருந்ததாகவும், ஒருவருக்கு உடல்நிலை சரியில்லை என கூறியதை தொடர்ந்து சிறை காவலர் செல்லுக்கு வந்தபோது அவரை தாக்கிவிட்டு இவர்கள் 17 பேரும் தப்பியதாகவும் காவல்துறையை மேற்கோள்காட்டி ஏ.என்.ஐ செய்தி நிறுவனம் கூறியுள்ளது.
இந்தத் தாக்குதலில் தலையில் பலத்த காயமடைந்த இரண்டாம் நிலை சிறைக் காவலர் தங்கபாண்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில், மேலும் சில காவலர்களுக்கும் காயமடைந்துள்ளனர்.
தப்பியோடிய கைதிகளைப் பிடிக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, அண்டை மாவட்டமான திண்டுக்கல்லில் 16 இடங்களில் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. அந்தச் சாவடிகள் வழியாகச் செல்லும் அனைத்து வாகனங்களும் சோதனை செய்யப்படுவதாக திண்டுக்கல் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார்.

தப்பி ஓடிய கைதிகள் யார்?
மதுரை மாவட்டத்தை சேர்ந்த கருப்பசாமி (எ) மதன், ராஜ்குமார், திருப்பதி, பொன்முத்துச்செல்வம், மீனாட்சிசுந்தரம், நிசாந்த், முத்து இளங்கோவன், கார்த்திக்ராஜா, பிரசாந்த் (எ) லிங்க பிரசாத், ராஜா சிக்கந்தர் மற்றும் சோலைமுகிலீஸ்வரன்,
சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த தருண்குமார்
ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த பாண்டி செல்வம்
சேலம் மாவட்டத்தை சேர்ந்த சபரிநாதன்
கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த ரெஜின்
தேனி மாவட்டத்தை சேர்ந்த சிலம்பரசன்.
அரசியல் தலைவர்களின் விமர்சனம்
பட மூலாதாரம், M.K.Stalin/X
தேனி சிறையிலிருந்து 17 விசாரணைக் கைதிகள் தப்பியோடிய சம்பவம் தொடர்பாக அரசியல் தலைவர்கள் தமிழக அரசைக் கடுமையாக விமர்சித்துள்ளனர்.
தேனி சிறையிலிருந்து 17 கைதிகள் தப்பியோடியதைச் சுட்டிக்காட்டிய திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், தமிழகத்தில் குற்றவாளிகளைக் கண்காணிப்பதிலும் சிறைப் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதிலும் அரசு தோல்வியடைந்துள்ளதாக விமர்சித்துள்ளார்.
2026-ஆம் ஆண்டில் பாதுகாப்பு ஏற்பாடுகளும் கண்காணிப்பு வசதிகளும் மேம்பட்டுள்ள நிலையில், இத்தகைய சம்பவம் நிகழ்வதை ஏற்றுக்கொள்ள முடியாது எனக் கூறிய அவர், தமிழக வெற்றிக் கழக அரசை விமர்சித்துள்ளார்.
வெளியில் உள்ள குற்றவாளிகள் குற்றங்களில் ஈடுபடுவதாகவும், சிறைக்குள் இருப்பவர்களும் தப்பிச் செல்வதாகவும் கூறிய அவர், மக்களே தங்களைப் பாதுகாத்துக்கொள்ள வேண்டிய நிலைக்குத் தமிழகம் சென்றுவிட்டதாகக் குற்றம்சாட்டியுள்ளார்.
பட மூலாதாரம், Udhay/X
17 கைதிகள் தப்பியோடிய சம்பவத்துக்கு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சிறைக் காவலர்களைத் தாக்கிவிட்டு கைதிகள் தப்பியுள்ள நிலையில், சிறைத்துறை எந்த அளவுக்குச் சீர்குலைந்துள்ளது என்ற கேள்வி எழுவதாக அவர் கூறியுள்ளார்.
அண்மையில் புழல் மத்திய சிறைக்கு ஆய்வுக்குச் சென்ற முதலமைச்சர், அந்த ஆய்வின் அடிப்படையில் என்ன நடவடிக்கைகளை எடுத்தார் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழகம் முழுவதும் உள்ள சிறைச்சாலைகளில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து அரசு உத்தரவுகளைப் பிறப்பித்ததா? என்றும் அவர் வினவியுள்ளார்.
திமுக துணைப் பொதுச்செயலாளார் கனிமொழி, குற்றவாளிகளைக் கைது செய்யவும் சிறையில் உள்ள கைதிகளைப் பாதுகாக்கவும் அரசால் முடியவில்லை என விமர்சித்துள்ளார்.
பட மூலாதாரம், Edappadi K Palaniswami/X
தேனி மாவட்டச் சிறையிலிருந்து 17 கைதிகள் தப்பியோடிய சம்பவத்தைக் குறிப்பிட்டு, தமிழக அரசையும் சிறைத்துறையையும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடுமையாக விமர்சித்துள்ளார்.
புழல் சிறையிலிருந்து ஏற்கெனவே இரண்டு கைதிகள் தப்பியோடியபோதே, தமிழகச் சிறைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தியிருக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
தப்பியோடிய கைதிகளை உடனடியாகக் கைது செய்து மீண்டும் சிறையில் அடைப்பதுடன், தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் எடப்பாடி பழனிசாமி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
தேனி சிறையிலிருந்து கைதிகள் தப்பிய சம்பவம் தமிழக அரசுக்கு ஏற்பட்டுள்ள நிர்வாகத் தோல்வி என தமிழக பாஜக தலைமைச் செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதி விமர்சித்துள்ளார்.
பல விசாரணைக் கைதிகளை ஒரே அறையில் அடைத்தது, மருத்துவ அவசரநிலை குறித்த தகவலைச் சரிபார்க்காமல் கதவைத் திறந்தது உள்ளிட்டவை சிறைப் பாதுகாப்பில் உள்ள குறைபாடுகளைக் காட்டுவதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு




