தேமுதிக எம்பி எல்.கே சுதீஷ் மகள் திருமணம்: தமிழக அரசியல் களத்தில் திருப்புமுனையாக அமையுமா? – dmdk mp lk sudhish daughter wedding will turning point in tn political landscape

தேமுதிக பொருளாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான எல்.கே. சுதீஷின் மகள் திருமணம் அடுத்த மாதம் நடைபெற உள்ளது. இந்த சூழலில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலினுக்கு இன்று தேமுதிக குடும்பத்தினர் அழைப்பிதழ் வழங்கினர். இதுகுறித்து காணலாம்.

தேமுதிக பொருளாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான எல்.கே. சுதீஷின் மகள் திருமணம் அடுத்த மாதம் நடைபெற உள்ளது. இந்நிலையில் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் மற்றும் எல்.கே. சுதீஷ், அவரது துணைவியார் பூர்ணஜோதி சுதீஷ் ஆகியோர் இன்று திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் மு.க. ஸ்டாலினை சந்தித்து திருமணத்திற்கான அழைப்பிதழை வழங்கினர்.

யார் இந்த சுதீஷ்?

மாநிலங்களவை உறுப்பினரான எல்.கே. சுதீஷ், தேமுதிக பொதுச் செயலாளரான பிரேமலதா விஜயகாந்த்தின் உடன்பிறந்த தம்பி ஆவர். இவர் கட்சி ஆரம்பக்காலம் முதல் செயல்பட்டு வந்துள்ளார். மேலும் தேமுதிகவின் முக்கிய பொறுப்பான தேமுதிக பொருளாளர் பதவி வகித்து வந்த இவர், கடந்த 2026 சட்டமன்ற தேர்தலுக்கு முன்னர் திராவிட முன்னேற்றக் கழகத் தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் தேமுதிக இணைந்ததற்குப் பிறகு, திமுக சார்பில் மாநிலங்களவை உறுப்பினர் சீட்டு வழங்கப்பட்டது.

தேர்தல் பயணம்

2006 ஆம் ஆண்டு தேமுதிக தலைவர் விஜயகாந்த் விருத்தாச்சலம் தொகுதியில் நின்று வெற்றி பெற்றார். அதே தேர்தலில் குடியாத்தம் தொகுதியில் நின்று தோல்வி அடைந்தார். அதனைத் தொடர்ந்து 2009 நாடாளுமன்ற தேர்தல், 2014 நாடாளுமன்ற தேர்தல், 2019 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டார். பின் இந்த ஆண்டு மார்ச் மாதம் திமுக சார்பில் சீட்டு வழங்கப்பட்டதில் அவர் மாநிலங்களவை உறுப்பினராகப் பதவியேற்றார்.

முக்கிய புள்ளியாக சுதீஷ்?

கடந்த 2011 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்குப் பிறகு தேமுதிகவின் அனைத்து முடிவுகளும், சுதீஷ் உத்தரவின்படியே எடுக்கப்பட்டது என அரசியல் வட்டாரத்தில் பேச்சு அடிபட்டது. கூட்டணி, தொகுதி பங்கீடு, நிர்வாகிகள் தேர்வு என அனைத்திலும் சுதீஷ் தனது செல்வாக்கை செலுத்தி வந்ததாகவும் அரசியல் பார்வையாளர்கள் கூறி வந்தனர்.

ஜன்னு ஸ்ரீ சுதீஷ் – விஜய் பிரபாகரன் திருமணம்?

எல்.கே. சுதீஷ் – பூர்ணஜோதி சுதீஷ் தம்பதியின் மகள் டாக்டர் ஜன்னு ஸ்ரீ சுதீஷுக்கும் அடுத்த மாதம் திருமணம் நடைபெற உள்ளது. இதற்கு முன்னதாக விஜயகாந்த் மகன் விஜய் பிரபாகரனுக்கும், ஜன்னு ஸ்ரீக்கும் திருமணம் நடைபெற உள்ளதாகப் பல வதந்திகள் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டது. தேமுதிகவின் குடும்பத்திற்குள்ளாகவே திருமணம் நடைபெறும் எனும் கட்சித் தலைமைக்குள் அந்நியர்கள் வருகை இருக்காது எனவும், இதனால் கட்சித் தலைமையில் ஏற்படும் தேவையற்ற சர்ச்சைகள் இருக்காது எனவும் பல வதந்திகள் கூறப்பட்ட நிலையில், தற்போது அனைத்து வதந்திகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

மணமகன் யார்?

எல்.கே. சுதீஷ் – பூர்ணஜோதி சுதீஷ் தம்பதியின் மகள் டாக்டர் ஜன்னு ஸ்ரீ, ஒசூரைச் சேர்ந்த தொழிலதிபரான அகில் ரவிக்குமார் என்பவரைத் திருமணம் செய்ய உள்ளார். இவர் ரவிக்குமார் – ராதா ரவிக்குமார் தம்பதியின் மகன் ஆவர்.

மணமக்கள் கல்வி விவரம்

ஜன்னு ஸ்ரீ சுதீஷ் எம்பிபிஎஸ் மற்றும் பின்னர் எம்எஸ் முடித்து மகப்பேறு மருத்துவத்தில் முதுகலைப் பட்டம் பெற்றுள்ளார். அதுபோல அகில் ரவிக்குமார் பிபிஏ முடித்து பின்னர் லண்டனில் உயர்கல்வி பயின்றுள்ளார்.

எல்.கே. சுதீஷ் சொத்து விவரம்

மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலில் போட்டியிட்டபோது, அவர் அளித்த சொத்து விவரத்தில் எல்.கே. சுதீஷுக்கு அசையும் சொத்தாக ரூ.11.03 கோடி இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அசையா சொத்தாக ரூ.28.16 கோடி இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முக்கிய அரசியல் புள்ளிகளுக்கு அழைப்பு

தேமுதிக தலைவர் விஜயகாந்த் அவர்களின் மறைவிற்குப் பின்னர், அவர்களது குடும்பத்தில் நடக்க இருக்கும் முதல் முக்கிய நிகழ்வாக இந்தத் திருமணம் உள்ளது. இந்தச் சூழலில் பிரேமலதா விஜயகாந்த் தமிழக அரசியல் மட்டுமின்றி தேசிய அளவில் உள்ள முக்கிய அரசியல் புள்ளிகளுக்கும் அவர் நேரில் திருமணத்திற்கான அழைப்பு விடுக்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதனால் இந்தத் திருமண விழா அரசியல் களத்தில் முக்கிய பேசுபொருளாகியுள்ளது.

திமுக உடனான குடும்பத்தில் சம்பந்தமா?

முன்னதாக விஜயகாந்த் மகன்களில் ஒருவருக்கு, திமுகவின் முக்கிய இடத்தில் இருக்கும் ஒருவரது குடும்பத்தில் பெண் எடுத்து திருமணம் செய்ய இருப்பதாகத் தகவல் வெளியானது. அதன் அடிப்படையில், அந்த முக்கிய புள்ளியின் முயற்சியாலேயே தேமுதிக திமுக கூட்டணியில் இடம்பெற்றதாகவும் அரசியல் வட்டாரத்தில் கூறப்பட்டது. இந்தச் சூழலில் சுதீஷ் மகளுக்கு, தொழிலதிபருடன் திருமணம் நடக்க இருப்பது இந்தத் தகவல் இன்னும் வலுப்பெற்று உள்ளதாக அரசியல் பார்வையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

திருப்புமுனையாகுமா திருமண விழா?

தமிழக அரசியல் களம் நாளுக்கு நாள் பரபரப்பு அடைந்து வருகிறது. அரசியல் கட்சிகளின் கூட்டணி முறிவு, சட்டமன்ற உறுப்பினர்களின் ராஜினாமா, இடைத்தேர்தல், தவெக ஆதரவு கட்சிகளின் தொடர் அழுத்தம் என பல திருப்பங்களைக் கொண்டுள்ளது. இந்தச் சூழலில் எல்.கே. சுதீஷ் மகளின் திருமண விழாவில் பங்கேற்கும் அரசியல் தலைவர்களின் வருகை தமிழக அரசியல் களத்தில் புது திருப்பங்களை ஏற்படுத்துமா எனக் கேள்வி எழுந்துள்ளது.

Source link