சென்னை : தன் ஆதரவாளர்கள் ஐந்து பேருக்கு ‘சீட்’ வழங்குமாறு, தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை, மத்திய அமைச்சர் பீயூஷ் கோயலிடம் வலியுறுத்தி உள்ளார்.
இது குறித்து, பா.ஜ., வட்டாரங்கள் கூறியதாவது:தேசிய ஜனநாயக கூட்டணியில், பா.ஜ.,வுக்கு 27 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. கூட்டணி பேச்சு நடத்த சென்னை வந்த, மத்திய அமைச்சரும், தமிழக பா.ஜ., பொறுப்பாளருமான பீயூஷ் கோயல், கடந்த 24ம் தேதி சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் கட்சியினருடன் ஆலோசனை நடத்தினார்.
காலை முதல் மாலை வரை நீடித்த ஆலோசனை கூட்டத்தில், வேட்பாளர்கள் மற்றும் தொகுதிகள் குறித்து ஆலோசனை நடந்தது. அதில் பங்கேற்ற அண்ணாமலையிடம், ‘நீங்கள் போட்டியிட விரும்பும் தொகுதி எது?’ என பியூஷ் கோயல் கேட்டுள்ளார். அதற்கு, ‘தே.ஜ., கூட்டணி வேட்பாளர்களின் வெற்றிக்காக, தமிழகம் முழுதும் பிரசாரம் செய்ய விரும்புகிறேன். தேர்தலில் போட்டியிட விருப்பமில்லை. என் ஆதரவாளர்கள் ஐந்து பேருக்கு ‘சீட்’ வழங்குங்கள்’ என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
அதில், முருகானந்தம், அமர்பிரசாத் ரெட்டி உள்ளிட்டோர் பெயர் இருப்பதாக கூறப்படுகிறது. திருப்பூர் தெற்கு, ராமநாதபுரம், நாகர்கோவில் உள்ளிட்ட சில தொகுதிகளை, தன் ஆதரவாளர்களுக்காக அண்ணாமலை கேட்டுள்ளார். இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன. அதேசமயத்தில் கட்சி மேலிடம் உத்தரவிட்டால் போட்டியிட தயாராக உள்ளதாக அண்ணாமலை கூறியுள்ளதாகவும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
