தேர்தலில் போட்டியிட ‘சீட்’ கிடைக்காத அ.தி.மு.க., மாவட்ட செயலர்கள், தேர்தல் பணிகளை துவக்காமல் உள்ளதால், 50 தொகுதிகளில் வெற்றிக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
சட்டசபை தேர்தலில், 167 தொகுதிகளில் அ.தி.மு.க., போட்டியிடுகிறது. அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி வெளியிட்ட மூன்றுகட்ட வேட்பாளர் பட்டியலிலும், 16 மாவட்ட செயலர்கள் பெயர் இல்லை. திருவண்ணாமலை வடக்கு மாவட்ட செயலர் துாசி மோகன், த.வெ.க.,வில் ஐக்கியமாகி அக்கட்சி வேட்பாளராகி விட்டார்.
அதேபோல், தன் மனைவி கீர்த்திகாவுக்கு, திருவாடானை தொகுதியைப் பெற, தன் சீட்டை ராமநாதபுரம் மாவட்ட செயலர் முனியசாமி தியாகம் செய்துள்ளார். மீதமிருக்கும் மாவட்ட செயலர்களில் பலரும் வேலை செய்ய மறுப்பதாக புகார் எழுந்துள்ளது.
இதுகுறித்து, அ.தி.மு.க., நிர்வாகிகள் சிலர் கூறியதாவது:
திருவள்ளூர் தெற்கு மா.செ., அலெக்சாண்டர் அம்பத்துாரிலும், நீலகிரி மா.செ., ஊட்டியிலும், திருப்பூர் புறநகர் கிழக்கு மா.செ., மகேந்திரன் மடத்துக்குளத்திலும், ‘சீட்’ கேட்டனர். ஆனால், அந்த தொகுதிகளை கூட்டணி கட்சிகளுக்கு பழனிசாமி ஒதுக்கிவிட்டார். அதேபோல், விருதுநகர் அல்லது திருச்சுழி தொகுதியை, விருதுநகர் கிழக்கு மா.செ., ரவிச்சந்திரன் எதிர்பார்த்தார். அதையும் வேறு நிர்வாகிக்கு பழனிசாமி ஒதுக்கிவிட்டார்.
குமரி தொகுதியை தவிர எல்லாமே கூட்டணிக்கு போய்விட்டதால், கன்னியாகுமரி மேற்கு மாவட்டச் செயலர் ஜெயசுதர்சனுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. சேலம் புறநகர் மா.செ., இளங்கோவன், தேர்தல் பணிகளை கவனிப்பதற்காக, இம்முறையும் அவருக்கு ‘சீட்’ வழங்கவில்லை.
இந்த மா.செ.,க்கள் எல்லாரும் பலவீனமானவர்கள்; அவர்களுக்கு ‘சீட்’ கொடுத்தாலும் வெற்றி பெற மாட்டார்கள்; கொடுக்காவிட்டாலும் பிரச்னை செய்ய மாட்டார்கள் எனக் கருதியே, அவர்களுக்கு ‘சீட்’ கொடுக்கவில்லை.
ஆனால், கடந்த ஐந்து ஆண்டுகளாக, பல கோடி ரூபாய் செலவு செய்தது, தேர்தலில் போட்டியிடத்தான். அதை பழனிசாமி தடுத்துவிட்டார் என கருதும் மா.செ.,க்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.
கள்ளக்குறிச்சி நகரச் செயலர் பாபு உள்ளிட்ட பல நிர்வாகிகள், கட்சியிலிருந்து விலகி வருகின்றனர். மாவட்ட செயலர்கள், கட்சியிலிருந்தபடி வேட்பாளர்களுக்கு ஒத்துழைக்க மறுக்கின்றனர். அவர்களை பழனிசாமி எச்சரித்தும் கண்டுகொள்ளவில்லை. இந்நிலை நீடித்தால், தே.ஜ., கூட்டணி 50 தொகுதிகளில் பெரும் பின்னடைவை சந்திக்கும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
