தேர்தலில் முதலீடு செய்வோர் லாபம் எடுக்கவே நினைப்பர்: நா.த.க., சீமான் ஆவேசம்

ஆண்டிபட்டி: ”தி.மு.க., – அ.தி.மு.க., சார்பில், வேட்பாளர்களாக அண்ணன், தம்பி போட்டியிடுவது தான் ஜனநாயகமா,” என, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பினார்.

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி தொகுதியில் சீமான் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது, அவர் பேசியதாவது:

ஆண்டிபட்டி தொகுதியில் வனத்துறை பிரச்னை, கண்ணகி கோவிலுக்கு வழியில்லை, வருஷநாட்டில் 80 கிராமங்களை அப்புறப்படுத்துவது என ஏராளமான பிரச்னைகள் உள்ளன.

மலைகளை கல் குவாரிக்காக வெட்டி எடுத்துச் செல்ல ஒப்பந்தம் செய்து, 200 டன் வெடி மருந்துகளை வைத்து மலையை தகர்க்கின்றனர். அப்போது மட்டும் வனத்துறையில் காட்டு விலங்குகள் பத்திரமாக வாழ்கிறதா?

ஓட்டுக்கு காசு கொடுக்கும்போது, ஜனநாயகம் செத்து பணநாயகம் வென்று விடுகிறது. தேர்தல் வெற்றிக்காக முதலீடு செய்பவர்கள், பல மடங்கு லாபத்தை எடுக்கத்தான் நினைப்பர். அதிகாரத்தில் இருந்தவர்கள் மக்களுக்கு என்ன செய்தனர்? இலவசங்களை நோக்கி சென்று உங்கள் தன்மானத்தை இழக்காதீர்கள்.

எத்தனை காலத்திற்கு இரட்டை இலைக்கும், உதயசூரியனுக்கும் ஓட்டு போடுவீர்கள். இரு கட்சிகளும் மீண்டும் வந்தால் டாஸ்மாக் மூடப்படுமா; கொலை, கொள்ளை நடக்காமல் இருக்குமா? அ.தி.மு.க., – தி.மு.க., இரண்டும் ஒரே கட்சி தான்.

ஆண்டிபட்டியில் கூட இரு கட்சிகளிலும் வேட்பாளர்களாக அண்ணனும், தம்பியும் போட்டியிடுகின்றனர். இது தான் ஜனநாயகமா?

இவ்வாறு பேசினார்.

Source link