தேர்தலுக்கு முன், பெண் வாக்காளர்களை ஈர்ப்பதே வெற்றிக்கு வழிவகுக்கும் என்பதை அரசியல் கட்சியினர் உணர்ந்துள்ளனர். சட்டசபை தேர்தல் நடக்கவுள்ள தமிழகம், புதுச்சேரி, மேற்கு வங்கம், கேரளா, அசாம் ஆகிய ஐந்து மாநிலங்களில், பெண் வாக்காளர்களை கவர அரசியல் கட்சிகள் போட்டி போட்டு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளன.
தேர்தலின் கதாநாயகன் – கதாநாயகி என ஒவ்வொரு கட்சியும் தங்கள் தேர்தல் அறிக்கைகளை பறைசாற்றி வரும் நிலையில், இல்லத்தரசிகளை ஈர்க்க பிரத்யேக திட்டங்களை அறிவித்துள்ளன. வடகிழக்கு மாநிலமான அசாமில் முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு, வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள குடும்ப பெண்களின் சமூக -பொருளாதார நிலையை உயர்த்த, ‘ஒருநோடாய்’ என்ற திட்டம் செயல்பாட்டில் உள்ளது.
துவக்கத்தில், பெண்களுக்கு மாதந்தோறும், 830 ரூபாய் மட்டும் வழங்கப்பட்ட நிலையில், தற்போது ஒரே தவணையாக, 9,000 ரூபாயை பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் அசாம் அரசு செலுத்தியுள்ளது. 40 லட்சம் பெண்கள் பயனடைந்துள்ள நிலையில், இதற்காக, 3,600 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளது.
உதவித்தொகை மேற்கு வங்கத்தில், தொடர்ந்து நான்காவது முறையாக ஆட்சியை தக்கவைக்கும் முயற்சியாக, திரிணமுல் காங்., தலைவரும், முதல்வருமான மம்தா பானர்ஜி, ‘லட்சுமி பந்தார்’ என்ற திட்டத்தின் கீழ் பெண்களுக்கான மாத உதவித்தொகையை, 500 ரூபாயை உயர்த்தி அறிவித்துள்ளார்.
இதன்படி, பொது பிரிவு பெண்களுக்கு மாதந்தோறும், 1,500 ரூபாய்; பட்டியலின பெண்களுக்கு, 1,700 ரூபாய் வழங்கப் படுகிறது.
தமிழகத்தில் ஆளும் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க., அரசு, ‘மகளிர் உரிமைத்தொகை’ என்ற திட்டத்தில், தகுதி வாய்ந்த குடும்பத்தலைவிகளுக்கு மாதந்தோறும், 1,000 ரூபாய் வழங்குகிறது. இதில், 1 கோடிக்கும் மேற்பட்ட பெண்கள் பயனடைந்து வருகின்றனர்.
தேர்தலுக்கு முன், இத்திட்டத்தின் கீழ் உள்ள பயனாளிகளுக்கு, 5,000 ரூபாயை அவர்களின் வங்கிக் கணக்குகளில் தமிழக அரசு செலுத்தியது.
மீண்டும் தி.மு.க., ஆட்சிக்கு வந்தால், மாத உதவித்தொகை, 2,000 ரூபாயாக உயர்த்தப்படும் என்றும் முதல்வர் ஸ்டாலின் அறிவித்து உள்ளார்.
இதுதவிர தமிழகத்தில், பெண்களுக்கு இலவச பஸ் பயணமும் நடை முறையில் உள்ளது.
புதுச் சேரியில், முதல்வர் ரங்கசாமி தலைமையிலான என்.ஆர்.காங்., ஆட்சியில், வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள குடும்பத்தலைவிகளுக்கு மாத உதவித்தொகை, 1,000 ரூபாயில் இருந்து, 2,500 ரூபாயாக அதிகரிக்கப்பட்டு உள்ளது.
இதன்படி, பிப்., — மார்ச் சேர்த்து, 5,000 ரூபாய் பயனாளிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது. கேரளாவில் மார்க்.கம்யூ., க ட்சியைச் சேர்ந்த முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது.
மற்ற மாநிலங்களை போல் அல்லாமல், தேர்தல் நெருங்கும் நிலையில், ‘ஸ்த்ரி சுரக்ஷா’ என்ற திட்டத்தை மாநில அரசு துவக்கியுள்ளது.
இதன்மூலம், தகுதிவாய்ந்த பெண்களுக்கு மாதந்தோறும், 1,000 ரூபாய் வழங்கப்படும் என , அறிவித்துள்ளது.
தேர்தல் நடக்கும் இந்த மாநிலங்களில் ஆளுங்கட்சியினரை போல், அவர்களை எதிர்த்து போட்டியிடும் எதிர்க்கட்சியினரும் பெண் வாக்காளர்களை ஈர்க்கும் வகையில் போட்டி போட்டு பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்துள்ளன.
அரசியல் ஆதிக்கம் கேரளாவில், ஆட்சியை கைப்பற்ற துடிக்கும் காங்., தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி கூட்டணி, பெண்களுக்கு மாதந்தோறும், 1,000 ரூபாய் உதவித்தொகை, இலவச பஸ் பயணம், வட்டியில்லா கடன் உள்ளிட்டவை வழங்கப்படும் என, அறிவித்துள்ளது.
இதேபோல், பெண் வா க்காளர்களை குறிவைக்கும் வகையில், தமிழகத்தில் எதிர்க்கட்சியான அ.தி.மு.க., ஒவ்வொரு குடும்பத்திற்கும், ‘ப்ரிஜ்’ வழங்கப்படும், குடும்பத்துக்கு ஒரு முறை, 10,000 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும் என, அறிவித்துள்ளது.
மேற்கு வங்கத்தில், திரிணமுல் காங்கிரசுக்கு கடும் ச வாலை அளிக்கும் பா.ஜ.,வும் பெண்களுக்கு மாதந்தோறும், 3,000 ரூபாய் உதவித்தொகை உட்பட பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது.
ஒரு காலத்தில் ஜாதி, மதம், பிராந்திய அடிப் படையில் ஓட்டு வங்கி அரசியல் ஆதிக்கம் செலுத்திய நிலையில், இப்போது பாலின அரசியலை மையப்படுத்தி நகர்ந்துள்ளது. தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் மொத்த வாக்காளர்களில், பெண் வாக்காளர்களின் எண்ணிக்கையே அதிகம்.
இதுதவிர, சமீபத்திய தேர்தல்களில், ஆண் வாக்காளர்களை விட, பெண் வாக்காளர்களே அதிக எண்ணிக் கையில் ஓட்டளித்து உள்ளதால், இந்த நிலை உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது.
பெண்களுக்கு வழங்கப்படும் மாத உதவித் தொகை, அவர்களின் குடும்ப நிதி நிலையை மேம்படுத்தும் என, அரசியல் கட்சியினர் வாதிடுகின்றனர். இத்தகைய நிதி உதவித் திட்டங்கள், மாநில அரசுக்கு பெரும் நிதிச்சுமையை ஏற்படுத்துவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. ஆண்டுக்கு ஆயிரக்கணக்கான கோடி ரூபாயை நிதியுதவி திட்டங்களுக்கு ஒதுக்குவது மாநில பட்ஜெட்டில் அழுத்தம் கொடுக்கிறது.
ரிசர்வ் வங்கி வெளியிட்ட ஆய்வில் மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தியில் மேற்கு வங்கம் – 39 சதவீதம் கடன் பங்கும்; தமிழகம் – 29.2 சதவீத கடன் பங்கு; கேரளா – 35.5 சதவீத கடன் பங்கு; அசாம் – 28 சதவீத கடன் பங்கு; புதுச் சேரி – 26 சதவீத கடன் பங்கும் வைத்துள்ளன.
பண பரிவர்த்தனை இத்தகைய திட்டங்களால், வருமானத்தை அதிகரிக்கும் வழிகள் குறைவாக இருப்பதால், மாநில அரசுகள் கடன் வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளன.
இது மாநில அரசுகளின் கடன்களை அதிகரிக்க செய்கின்றன. நேரடி பண பரிவர்த்தனை நுகர்வை அதிகரிக்கலாம். ஆனால், சாலைகள், பாசனத் திட்டங்கள், பள்ளிகள், மருத்துவமனைகள் போன்ற நீண்டகால சொத்துக்களில் முதலீட்டை குறைக்கும்.
இத்தகைய திட்டங்கள் ஆட்சியை தக்கவைக்க மிகவும் நம்பகமான கருவிகளில் ஒன்றாக மாறியுள்ளன. ஆனால், அந்தந்த கட்சிகளின் தேர்தல் அறிக்கைகள், தேர்தலின் கதாநாயகனா அல்லது கதாநாயகியா என்பதை விட, வில்லனாக மாறாமல் இருந்தால் சரி.
பெண் வாக்காளர்களை கவர அரசியல் கட்சியினர் எடுத்துள்ள முயற்சி வெற்றி அடைந்ததா அல்லது தோல்வியை தழுவியதா என்பது, ஓட்டு எண்ணிக்கை நாளான மே, 4ல் தெரிந்து விடும்.
– நமது சிறப்பு நிருபர் -:
