புதுடில்லி: ‘தேர்தல் அறக்கட்டளை வாயிலாக கடந்த 2024 – 25ல் 3,826 கோடி ரூபாய் பெறப்பட்ட நிலையில், அதில் 82 சதவீதமாக 3,157 கோடி ரூபாயை பா.ஜ., பெற்றுள்ளது’ என, ஜனநாயக சீர்திருத்த சங்கம் தெரிவித்துள்ளது.
மத்திய பா.ஜ., அரசு, தேர்தல் பத்திர திட்டத்தை கடந்த 2017ல் அறிமுகம் செய்தது. இதை எதிர்த்து தாக்கல் செய்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், இந்த திட்டம் செல்லாது என, 2024ல் தீர்ப்பளித்தது.
திட்டம் ரத்து
அரசியலில் வெளிப்படைத்தன்மை உறுதி செய்யப்பட வேண்டும் என்ற நோக்கில் இந்த திட்டம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, 2024 – 25ம் நிதியாண்டு முதல் தேர்தல் அறக்கட்டளைகள் வாயிலாக அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், 2024 – 25ல் தேர்தல் அறக்கட்டளைகள் வாயிலாக அரசியல் கட்சிகள் பெற்ற நிதி தொடர்பான அறிக்கையை ஏ.டி.ஆர்., எனப்படும் ஜனநாயக சீர்திருத்த சங்கம் வெளியிட்டுள்ளது.
அதில் கூறப்பட்டுள்ளதாவது: கடந்த 2024 – 25ம் நிதியாண்டில், பெரு நிறுவனங்கள் மற்றும் தனிநபர்கள் வாயிலாக 3,826.34 கோடி ரூபாயை தேர்தல் அறக்கட்டளை பெற்றது. விதிகளின்படி, 3,826.35 கோடி ரூபாயை அரசியல் கட்சிகளுக்கு அறக்கட்டளை வழங்கியது. இதில் அதிகபட்சமாக மொத்த நிதியில், 82 சதவீதமான 3,157.65 கோடி ரூபாயை பா.ஜ., பெற்றுள்ளது.
காங்கிரஸ், 7.81 சதவீதமான 298.78 கோடி ரூபாயை பெற்றுள்ளது. மொத்த நிதியில், 2.67 சதவீதமாக 102 கோடியை திரிணமுல் காங்கிரஸ் பெற்றது. மீதமுள்ள 19 கட்சிகள் 267.92 கோடியை பெற்றுள்ளன.
அறக்கட்டளைகளில், ‘புரூடென்ட் எலக்டோரல் டிரஸ்ட்’ அதிகபட்சமாக 2,668.46 கோடி ரூபாயை, 15 அரசியல் கட்சிகளுக்கு வழங்கியுள்ளது. அதைத் தொடர்ந்து, ‘ப்ரொக்ரெசிவ் எலக்டோரல் டிரஸ்ட்’ 10 கட்சிகளுக்கு 914.97 கோடி ரூபாயை நன்கொடையாக வழங்கியுள்ளது.
நன்கொடை
‘எலிவேட்டட் அவென்யூ ரியாலிட்டி’ நிறுவனம் அதிகபட்சமாக 500 கோடி ரூபாயை நன்கொடையாக அளித்துள்ளது.
அடுத்ததாக ‘டாடா சன்ஸ் பிரைவேட் லிமிடெட்’ 308 கோடி ரூபாயை வழங்கியுள்ளது.
மா நில வாரியாக, மஹாராஷ்டிரா 1,225.42 கோடி ரூபாயை பெற்றுள்ளது.
அதைத் தொடர்ந்து தெலுங்கானா 358.25 கோடி ரூபாயும், ஹரியானா 212.9 கோடி ரூபாயும், மேற்கு வங்கம் 203.85 கோடி ரூபாயும் பெற்று உள்ளன.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
