கேரளா மாநிலத்தில் சட்ட மன்ற தேர்தலுக்கு இன்னும் ஒரு வாரமே இருப்பதால், தேர்தல் பிரச்சாரம் சூடு பிடித்துள்ளது. அந்த வகையில், இடதுசாரி மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளும் தீவிர பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றன. அந்த வகையில், பாஜகவும் தீவிர பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக, மாநில மற்றும் தேசிய தலைவர்களும் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே, பாஜக தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது.
இந்த அறிக்கையில், “ஆண்டிற்கு இரண்டு சிலிண்டர்கள் இலவசம். இந்த இரண்டு சிலிண்டர்கள் ஓணம் மற்றும் கிறிஸ்துமஸ் விழாவை முன்னிட்டு வழங்கப்படும். 70 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள், தேவை இருக்கும் பெண்கள் மற்றும் விதவைகள் ஆகியோர்களுக்கு மாதம் ரூ.3000 ஓய்வூதியம் வழங்கப்படும். கேரளத்தில் உள்ள ஒவ்வொரு வீட்டிற்கும் 20 ஆயிரம் லிட்டர் தண்ணீர் இலவசமாக வழங்கப்படும்.
கேரளத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை கொண்டுவரப்படும். வறுமைக்கோட்டிற்குக் கீழ் உள்ள பெண்களுக்கு மாதந்தோறும் பக்சய ஆரோக்கிய சுரக்சா திட்டத்தின் கீழ் அட்டை வழங்கப்படும். இந்த அட்டைக்கு மாதந்தோறும் ரூ.2500 ரீச்சார்ஜ் செய்யப்படும். அதன் மூலமாக அந்த பெண்கள் மருந்து மற்றும் மளிகை பொருட்கள் வாங்கிக்கொள்ளலாம். சபரிமலை பாரம்பரியம் காக்கத் தனிச் சட்டம் உருவாக்கப்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தேர்தல் அறிக்கையை பாஜக தேசிய தலைவர் நிதின் நபின் வெளியிட்டுள்ளார். கேரளத்தில் மொத்தமுள்ள 140 தொகுதிகளுக்கும் ஏப்ரல் 9 அன்று ஒரே கட்டமாகத் தேர்தல் நடைபெற உள்ளது. வாக்கு எண்ணிக்கை மே 4 அன்று நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
