புதுடில்லி: அ .தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி போட்டியிடும் தொகுதியில், தி.மு.க., வேட்பாளர் தாக்கல் செய்த வேட்பு மனுவில், சில பிரச்னைகள் இருந்தன. ‘இதை தள்ளுபடி செய்ய வேண்டும்’ என, அ.தி.மு.க., கோரிக்கை வைத்தது. அ.தி.மு.க.,விலிருந்து தி.மு.க.,விற்கு தாவி, இப்போது எம்.பி.,யாக இருப்பவரும் வந்து விட்டாராம். இரண்டு கழகங்களுக்கிடையே விவாதம் காரசாரமாக மாற, உடனே மேலதிகாரிகள் வந்தனர்.
சென்னையிலுள்ள தேர்தல் அதிகாரிக்கும் போன் பறந்தது. இதற்கிடையே, தலைமை செயலர் போன் வேறு வந்ததாம். இதனால், தி.மு.க., வேட்பாளரின் மனு ஏற்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இதே போல, வேறு சில இடங்களிலும் பிரச்னை வந்துள்ளது. ஆனால், இந்த அனைத்து இடங்களிலும், தி.மு.க.,வுக்கு சாதகமாகவே அதிகாரிகள் செயல்பட்டதாக கூறப்படுகிறது.
இப்படி, 20க்கும் மேற்பட்ட புகார்கள் தலைமை தேர்தல் கமிஷனருக்கு அனுப்பப்பட்டதாம். தவிர, பல போன்கால்களும் பறந்தனவாம். தி.மு.க., ஆதரவு அதிகாரிகள், சட்டத்தை மதிக்காமல் தங்கள் இஷ்டத்திற்கு செயல்படுகின்றனர். தமிழகத்தில், தேர்தல் எப்படி நேர்மையாக நடக்கும் என, அ.தி.மு.க., – பா.ஜ., உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் புகார் தெரிவித்திருந்தன.
இதையடுத்து, அவசர அவசரமாக தலைமை தேர்தல் கமிஷனரும், மற்ற இரண்டு கமிஷனர்களும் இரவு ஆலோசனை நடத்தினர். தமிழகத்திலிருந்து ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் பட்டியலை அனுப்பும்படி, மாநில தலைமை தேர்தல் அதிகாரிக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாம். அவர் அனுப்பிய பட்டியலிலிருந்து, 1990 பேட்ச் ஐ.ஏ.எஸ்., அதிகாரி சாய் குமார் தலைமை செயலராக நியமிக்கப்பட்டு, முருகானந்தம் மாற்றப்பட்டார். தவிர, தேர்தல் தொடர்பான எந்த ஒரு பதவியிலும் முருகானந்தம் நியமிக்கப்படக்கூடாது என்றும் கமிஷன் உத்தரவிட்டுள்ளது.
தமிழக டி.ஜி.பி.,யாக இருந்த வெங்கட்ராமன் மாற்றப்பட்டு, சந்தீப்ராய் ரத்தோட் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், சென்னை போலீஸ் கமிஷனர் அருணும் கமிஷனால் மாற்றப்பட்டுள்ளார். மேலும் சில அதிகாரிகள் மாற்றப்படுவர் என்றும் சொல்லப்படுகிறது
