தேர்தல் கமிஷனர்கள் நியமன வழக்கு விசாரணையில் இருந்து, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த் விலகினார்.
மத்திய பா.ஜ., அரசு, 2023-ல் கொண்டு வந்த தேர்தல் கமிஷனர்கள் நியமன சட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகள், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த், நீதிபதிகள் ஜாய்மால்யா பக்சி, விபுல் எம்.பஞ்சோலி ஆகியோர் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தன.
அப்போது, மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண், “தனிப்பட்ட முறையில் தலைமை நீதிபதி மீது எதிர்மறையான கருத்துக்கள் இல்லை.
“ஆனால், தலைமை நீதிபதி தொடர்புடைய விவகாரம் என்பதால், இதை வேறு ஒரு அமர்வு விசாரித்தால் நன்றாக இருக்கும்,” என யோசனை தெரிவித்தார்.
இதை ஏற்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த், வழக்கிலிருந்து விலகுவதாக அறிவித்தார். மேலும், அடுத்தடுத்து தலைமை நீதிபதிகளாக வருவதற்கு வாய்ப்புள்ள நீதிபதிகள் உள்ள அமர்வை தவிர்த்து, வேறொரு அமர்வில் வழக்கு பட்டியலிடப்படும் எனக்கூறி, வழக்கை ஏப்., 7க்கு ஒத்திவைத்தார்
தேர்தல் கமிஷனர்களை தேர்வு செய்யும் குழுவில் இருந்து, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியை நீக்கி, அதற்கு பதில் மத்திய அமைச்சர் ஒருவரை சேர்த்ததே இந்த வழக்கின் மையப்புள்ளி.
தன் பதவியுடன் தொடர்புடைய ஒரு விவகாரத்தில் தானே தீர்ப்பளிப்பது சரியாக இருக்காது என்ற அடிப்படையில், வழக்கில் இருந்து விலகும் முடிவை தலைமை நீதிபதி சூர்யகாந்த் எடுத்துள்ளார்.
– டில்லி சிறப்பு நிருபர் -:
