சென்னை: தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நெருங்கும் நிலையில், கூட்டுறவு வீட்டுவசதி சங்கங்கள், 17 இடங்களில் சொத்துக்களை ஏலம் விடும் பணிகளை துவக்கியுள்ளன.
தமிழகத்தில் தற்போதைய நிலவரப்படி, 680 வீட்டுவசதி சங்கங்கள் செயல்பாட்டில் உள்ளன.
இந்த சங்கங்களில் விற்காமல் கைவசம் உள்ள நிலம் உள்ளிட்ட அசையா சொத்துக்களை, பொது ஏலம் வாயிலாக விற்க, தமிழக அரசு கடந்த ஆண்டு ஒப்புதல் அளித்தது. இதன்படி, அத்தகைய சொத்துக்களுக்கு மதிப்பு நிர்ணயிக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
இந்த பணிகள் முடிந்து பல மாதங்கள் ஆகியும், சொத்து விற்பனை பணிகளை, சங்க நிர்வாகிகள் மேற்கொள்ளாமல் இருந்தனர்.
தற்போது, ஒரே சமயத்தில், ஆறு மாவட்டங்களில், 17 இடங்களில் சொத்துக்களை ஏலம் விட, கூட்டுறவு வீட்டுவசதி சங்கங்கள் அறிவிப்புகளை வெளியிட்டுள்ளன.
கூட்டுறவு வீட்டுவசதி சங்க நிர்வாகி ஒருவர் கூறியதாவது:
வீட்டுவசதி சங்கங்களில் இருப்பில் உள்ள சொத்துக்களை ஏலம் விட அரசு அனுமதித்தும், கடந்த ஓராண்டுக்கும் மேலாக அதிகாரிகள், இதற்கான பணிகளை துவக்கவில்லை.
அடுத்த சில வாரங்களில் சட்டசபை தேர்தல் அறிவிக்கப்பட உள்ள நிலையில், ஏல அறிவிப்பை அதிகாரிகள் வெளியிட்டுள்ளனர்.
வேலுாரில், 6, சேலம், 4, தஞ்சாவூர், கோவை, விருதுநகர் மாவட்டங்களில் தலா, 2, திருச்சியில் ஒன்று என மொத்தம், 17 இடங்களில் சொத்துக்கள் ஏலம் விட அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தால், இது தொடர்பான பணி முடங்க வாய்ப்புள்ளது.
அந்தந்த பகுதியில் ஆளும் கட்சி பிரமுகர் களுக்கு ஆதரவாக செயல்படும் நோக்கில், சங்க சொத்துக்கள் ஏலம் விடப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளன.
இது குறித்து, துறையின் மேலதிகாரிகளுக்கு புகார்கள் சென்றுள்ளன. தேர்தல் சமயத்தில் அவசரகதியில் இந்நடவடிக்கை தேவையா என்பதை, அதிகாரிகள் முடிவு செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
