தேர்தல் பணி காரணமாக கைதிகளுக்கு பாதுகாப்பு வழங்குவது சாத்தியமில்லை; நீதிமன்றத்தில் காவல் துறை ஒப்புதல்

சென்னை: ‘தேர்தல் பணி காரணமாக, சிகிச்சைக்கு அழைத்து செல்லப்படும் கைதிகளுக்கு பாதுகாப்பு வழங்க சாத்தியமில்லை’ என்ற விவகாரத்தை, நீதிமன்றத்தின் கவனத்திற்கு, காவல் துறை கொண்டு சென்றுள்ளது.

பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங், கடந்த 2024ம் ஆண்டில் வெட்டி கொல்லப்பட்டார். இந்த வழக்கில் கைதான 27 பேரில், 14 பேர் ஜாமினில் வெளியே உள்ளனர்.

இந்நிலையில், சிறையில் உள்ள வழக்கறிஞர் அருள், மருத்துவ சிகிச்சைக்காக ஜாமின் கேட்டு, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனு, நீதிபதி எஸ்.கார்த்திகேயன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில், வழக்கறிஞர் அலெக்சிஸ் சுதாகர் ஆஜராகி, ”500 நாட்களுக்கு மேல் சிறையில் உள்ள மனுதாரர், கல்லீரல் பாதிப்பால் அவதிப்பட்டு வருகிறார். முறையாக சிகிச்சை பெற ஜாமின் தர வேண்டும்,” என்றார்.

இதற்கு ஆட்சேபம் தெரிவித்த அரசு சிறப்பு பிளீடர், ‘மருத்துவக் குழு ஆலோசனை அடிப்படையில், மனுதாரருக்கு மேல் சிகிச்சை வழங்கலாம்’ என்றார்.

இதையடுத்து, நீதிபதி பிறப்பித்த உத்தரவு:

சட்டம் – ஒழுங்கை பராமரிக்கவும், பாதுகாப்புக்கும், அதிக எண்ணிக்கையில் காவலர்கள் தேவை. இதனால், கைதிகளை காவல் நீட்டிப்புக்கு நேரில் ஆஜர்படுத்த இயலவில்லை என, மாநகர போலீஸ் கமிஷனர் குறிப்பிட்டுள்ளார்.

தேர்தல் பணிக்கு அதிக காவல் துறையினர் ஈடுபடுத்த வேண்டும் என்பதால், சிகிச்சைக்கு மருத்துவமனை அழைத்து செல்லப்படும் கைதிகளுக்கு, பாதுகாப்பு வழங்க சாத்தியமில்லை என, நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டு வரப்பட்டு உள்ளது.

எனவே, மனுதாரரை மருத்துவ குழு வாயிலாக பரிசோதித்து, சிகிச்சை அளிக்கலாம் என்ற, அரசு சிறப்பு பிளீடரின் யோசனை, தற்போதைய சூழலில் சாத்தியமில்லை. மேலும், ஸ்டான்லி மருத்துவமனை அறிக்கையை சுட்டிக்காட்டி, வழக்கறிஞர் அருள் சிகிச்சை பெற, எட்டு வாரங்கள் இடைக்கால ஜாமின் வழங்கப்படுகிறது.

மருத்துவமனையில் அட்மிட் ஆகாவிட்டால், தினமும் காலை நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும். ஏப்., 10ல் சரணடைய வேண்டும் என்ற நிபந்தனை விதிக்கப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Source link